‘தாய்மாமன் சீர் முதல்வர் கொடுப்பார்.. அத்தை சீர், பாட்டி சீர் எல்லாம்..’ சவுமியா விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் லட்சக்கணக்கனோர் படித்து விட்டு வந்தாலும் 3,000 பணியிடங்களுக்கு 30 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அரசு வேலை கானல் நீராக உள்ளது என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்று வருகிறது. இன்று சட்டசபையில் பேசிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, “சேவை உரிமைச் சட்டம் குறித்த அறிவிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கைக்காக பாட்டாளி மக்கள் கட்சி 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகிறது. 21 மாநிலங்களில் இந்த சேவை உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், பட்டா, ரேஷன் கார்டு போன்றவை எளிதில் மக்களிடம் சென்று சேரும்.

ADVERTISEMENT

இயற்கை விஞ்ஞானி பெரியவர் நம்மாழ்வார் பெயரிலும், சேவைச் செம்மல் அஞ்சலை அம்மாள் பெயரிலும் விருதுகள் வழங்கி கௌரவிப்பதை வரவேற்கிறோம். இயற்கை வேளாண் பட்டயப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் பல்கலைக்கழகத்திற்கு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி.

மகளிர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறீர்கள். இருந்தாலும், நிதிநிலை அறிக்கையில் தமிழகமே எதிர்பார்த்த ‘தமிழக விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் மொத்தமாகத் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற அறிவிப்பு வராமல் இருப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி பேர் இருக்கும். அதில் தமிழகத்தில் விவசாயம் செய்வோர் சுமார் 5 கோடி பேர் இருப்பார்கள். நிதிநிலை அறிக்கையில் ரூ.4,72,580 கோடி பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். ஆனால் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு (அக்ரிகல்ச்சருக்கு) மட்டும் வெறும் ரூ. 14,000 கோடிதானா? 5 கோடி பேருக்கு வெறும் ரூ.14,000 கோடிதான் தாக்கல் செய்திருக்கிறீர்களா?

கால்நடை, பால்வளம், வனத்துறை, கூட்டுறவு, பட்டு, கைத்தறி உள்ளிட்ட 22 துறைகளுக்குச் சேர்த்து ரூ.58,000 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறீர்கள். ஆனால் வேளாண் துறைக்கு வெறும் ரூ.14,000 கோடிதான். இது மிக மிகக் குறைவு. இதற்கு இரண்டு மணி நேரம் விரிவான பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்திருந்தார்; ஆனால் நாம் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் அதில் இல்லை.

ADVERTISEMENT

நாங்கள் குடும்பத் தலைவியாக இருப்பதால், நாங்களும் பட்ஜெட் போடுவோம். வெறும் கையில் முழம் போடுவது என்பது மிக மிகச் சிரமமானதுதான். வீட்டு வாடகையா, மின்சாரக் கட்டணமா (EB), மருத்துவச் செலவா, பள்ளிக் கட்டணமா என்று பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தாய்மாமன் சீரை முதலமைச்சர் கொடுத்து விடுவார்; அத்தை சீர், பாட்டி சீர் எல்லாம் நாமதானே கொடுக்க வேண்டும்? அப்போதெல்லாம் என்ன செய்வீர்கள்?

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் ஒரு குடும்பத் தலைவி பட்ஜெட் போடுவாள். நீங்களும் அதுபோல்தான் மனதில் வைத்து இ.எம்.ஐ-க்கு (EMI) ரூ.78,680 கோடி போட்டுள்ளீர்கள். அரசு இயந்திரம் செயல்பட ரூ.91,032 கோடி ஒதுக்கியுள்ளீர்கள். மொத்தமாக ரூ.1,32,878 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் மானியம் ரூ.1,74,494 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவையும் வழங்கிவிட்டு, விவசாயத்திற்கு வெறும் ரூ.14,000 கோடிதான் கொடுத்திருக்கிறீர்கள். பெண்கள் பட்ஜெட் போடும்போது குழந்தைகளுக்குச் சாப்பாடு போடாமல் இருந்து விடுவார்களா? சாப்பாடு போடும் அந்த விவசாயிக்கு பட்ஜெட்டில் இவ்வளவு தொகை குறைவாகப் போட்டீர்கள் என்பதுதான் எங்களது கேள்வி” என்றார்.

தமிழகத்தின் பாசன திட்டங்கள்

“உள்கட்டமைப்புகளுக்கான மூலதனச் செலவு ரூ.56,985 கோடி ஒதுக்கியிருக்கிறீர்கள். ஆனால் முக்கியமாக ஒதுக்க வேண்டிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதியை அதிகமாக ஒதுக்கியிருக்க வேண்டும். காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம், தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் சோழர் பாசனத் திட்டம், காவிரி–சரபங்கா–திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்புத் திட்டம், நந்தன் கால்வாய் திட்டம், தென்பெண்ணை–துரிஞ்சலாறு இணைப்புத் திட்டம், பாலாற்றில் தடுப்பணைகள் பாசனத் திட்டம், பாண்டியாரும் பொன்னம்புழா திட்டம், அத்திக்கடவு–அவிநாசி 2.0 திட்டம், மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், தோனிமடுவு பாசனத் திட்டம், படே தலாவ் ஏரி பாசனத் திட்டம், வாலே குழி ஏரி கால்வாய் … என இத்தனை திட்டங்கள் இருக்கின்றன. இந்தத் திட்டங்களுக்கு அதிகப்படியான நிதியை மூலதனச் செலவில் ஒதுக்கியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 950 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இது போதுமான மழைதான். தென்கிழக்கு மற்றும் வடமேற்குப் பருவமழைக் காலங்களில் நல்ல மழை பெய்கிறது. ஆனால் அந்த மழைநீர் எல்லாம் கடலில் வீணாகக் கலந்து கொண்டிருக்கிறது. முன்னர் தமிழகத்தில் ஒரு 50 நாட்களாவது மழை பெய்யும். அப்போது நிலத்தடி நீர் வளம் பெறும்; மீதியெல்லாம் கடலில் கலக்கும். இப்போது 30 நாட்களில் இந்த இரண்டு பருவ காலங்களிலும் மழை பெய்து மொத்தமாக மழை முடிந்து விடுகிறது. நீர் கடலில் கலந்து விடுகிறது.
2விதங்களில் நாம் மழை நீரை சேமிக்க முடியும்.

தடுப்பணைகள்

காவிரியில் தடுப்பணை கட்டினாலே குறைந்தபட்சம் 20 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். தர்மபுரிக்கு வெறும் 2 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படுகிறது; சேலம் மாவட்டத்திற்கு 5 டி.எம்.சிதான் தேவைப்படும். இப்படிச் செய்தால் மாவட்டங்களில் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும்.

தமிழகத்தில் 35 பெரிய ஆறுகள் உள்ளன. அதில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினாலே நாம் 100 டி.எம்.சி தண்ணீர் வரை தமிழகத்தில் சேமித்துக் கொள்ள இயலும். அதன் பிறகு யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. காவிரிக்காக கர்நாடகாவிடம் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது. கேரளா, ஆந்திராவிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது.

ஏரி, குளங்கள் தூர்வாரும் திட்டம்

இரண்டாவது வழியிலும் இதேபோல் தண்ணீரைச் சேமிக்க முடியும். ஏரி, குளங்களைத் தூர்வாரும் திட்டம். தமிழகத்தில் 42,000 ஏரிகள் இருந்தன. இன்று 27,000 ஏரிகள்தான் உள்ளன. அந்த 27,000 ஏரிகளைத் தூர்வாரினாலே இதிலும் 150 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். வெறும் இங்கு ஒரு மீட்டர் வரை தூர் வாரினால் போதும்.

ஆனால் இது போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவாக உள்ளது. இந்த நிதியை வைத்து வெறும் ஒரு சதவீதப் பணிகளை மட்டுமே செய்ய முடியும். அதேசமயம் நிலத்தடி நீரை நம்பித் தான் விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதால், கிட்டத்தட்ட 800 அடி வரை சில இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டது. அதனால்தான் விவசாயிகள் இலவச மின்சாரத் திட்டத்திற்குப் பதிவு செய்துள்ளனர். 2 லட்சம் பேர் விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்திற்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தட்கல் முறையில் 5 குதிரைத்திறன் (HP) முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ 2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் மின்வாரியத்திற்கு முன்பணமாகச் செலுத்தியிருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்க வேண்டும். அரசு நிறைய மானியங்களை அறிவித்துள்ளது. இது குறித்துச் சிறிய விவசாயிகளுக்கு எதுவும் தெரியாமல் இருக்கிறது” என்று பேசினார்.

கானல் நீராகும் அரசு வேலை

விவசாயத்தை போல மனிதவளமும் தமிழகத்தை பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மருத்துவர் ஐயா போன்றோர் பல்வேறு போராட்டங்களை மூலம் சமூக நீதியை பெற்று தந்தார்கள். அதன் காரணமாக லட்சக்கணக்கனோர் படித்து விட்டு வந்தாலும் 3,000 பணியிடங்களுக்கு 30 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அரசு வேலை கானல் நீராக உள்ளது. அரசாணைகள் 152, 139 மூலம் கிட்டத்தட்ட 50,000 வேலைகள் இல்லாமல் போய் விட்டது. இந்த வேலைகள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், “நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட த.வெ.க. அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் மாவட்டம்தான்.விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் கால்நடைத்துறை அமைச்சர் கமலி விவசாயிகளுக்கும் , பொதுமக்களுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share