தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 10) சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இன்றைய தினம், திமுக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேசிய போது காரசார விவாதங்களுடன் கலகலப்பும் ஏற்பட்டது.
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
”கடந்த ஆண்டு அங்கே உட்கார்ந்து பட்ஜெட்டை வாசித்தோம். இப்போது புதிய ஆட்சி, அமைச்சரவை அமைந்து பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள். தஞ்சையில் முதல்வர் பேசும்போது, அடுத்தஜென்மம் என ஒன்று இருந்தால் நான் விவசாயி மகனாக பிறக்க வேண்டும் என்று கூறினார்.
5 ஆண்டுகாலம் நாங்கள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறோம். எனவே அது தொடருமா தொடராதா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
மாற்றம்… மாற்றம் என்றார்கள்.
ஆனால் வேளாண் பட்ஜெட்டில் மாற்றத்தையே காணும். ஏமாற்றம் தான் ஏற்பட்டது.
முதலமைச்சர் அன்றைக்கு ஒரு வார்த்தை சொன்னார். நீங்கள் எல்லாம் பேப்பர் படிக்கவில்லையா என்றார். அது எங்களுக்கெல்லாம் வருத்தம். திராவிட இயக்கம் கொள்கையை பேசி பேசி ஆட்சியைப் பிடித்த இயக்கம்.
மக்கள் மனதில் இருந்து நாங்கள் வந்தவர்கள். அத்தகைய உணர்வு உள்ளவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
கலைஞர் முதல்வராக இருந்த போதும் சரி, ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதும் சரி அமைச்சர்களாக இருந்த எங்களுக்கெல்லாம் ஒரு பரபரப்பு இருக்கும்.
காலையில் 6.00 மணிக்கு எல்லாம் போன் வரும். 8 மணி தாண்டினால் தான் நிம்மதியாக இருக்கும்.
கலைஞரும், தலைவர் ஸ்டாலினும் செய்தித்தாள்களை பார்த்துவிட்டு அந்தந்த துறை அதிகாரிகளுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
அந்த வகையில் ஆட்சியாளர்களும் டென்ஷனாகவே இருப்பார்கள்.
ஐந்தாண்டு காலம் நாங்கள் டென்ஷனிலேயே இருந்தோம். ஆனால் நீங்கள் எல்லாம் ரிலாக்ஸ் ஆக இருக்கிறீர்கள். இதை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்
“ஒரு சின்ன வாய்க்கால் பிரச்சனைக்கு கூட, ’சரி செய்து விட்டதா’ என்று போன் செய்து கேட்க கூடியவர் எங்கள் முதலமைச்சர். இரவாக இருந்தாலும் சரி பகலாக இருந்தாலும் சரி போன் செய்வார்.
எங்களுக்கு தினம் தோறும் டென்சன்தான். ஏதாவது ஒரு சின்ன விஷயம் என்றால் கூட அப்படி பயப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்”
எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்தே பிஸியாக தான் இருக்கிறார்…
(இதைக் கேட்ட சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் என அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.)

புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார். ஏனென்றால் எல்லா கட்சித் தொண்டர்களும் அவரை போய் பார்க்கிறார்கள். நாங்களும் புதிதாக வந்திருந்த போது எங்களையும் இளைஞர்கள் உட்பட பலரும் வந்து பார்த்தார்கள். நீங்கள் புதிய இயக்கம். இனிமேல்தான் உங்களுக்கும் தெரியப்போகிறது.
மூன்று மாதம் தான் போயிருக்கிறது. எங்கள் ஆட்சியில் ஐந்தாண்டு காலம் விவசாயிகள் போராட்டம் இல்லாமல் வாழ்ந்தார்கள். அதைப் பாராட்ட வேண்டும்”
இங்கு இருக்கக்கூடிய நேரு அவர்கள் மிகப்பெரிய விவசாயி. மாடுகளை வளர்க்கிறார், ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. வாழை, தென்னை, நெல் ஆகிய பயிர்களை வைத்துள்ளார்.
அதுபோல அண்ணன் வேலு டிராக்டர் ஓட்டுவார், வயலில் அண்டை வெட்டுவார்…
அவை முன்னவர் செங்கோட்டையன்
“உறுப்பினரை ( நேரு) சிக்கலில் விட்டுவிடக்கூடாது. ஏனென்றால் சீலிங் இருக்கிறது. அதில் மாட்டி விட வேண்டாம்”
(இதை கேட்ட முதல்வர் விஜய், செங்கோட்டையனையும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தையும் பார்த்து குழுங்கி குழுங்கி சிரித்தார்)
எம்ஆர்கே பன்னீர்செல்வம்…
ஆயிரக்கணக்கிலா… அப்போது இருந்தது. இப்போது செங்கோட்டையனுக்கு எவ்வளவு இருக்கிறது என்று கணக்கு பார்த்தால் தெரியும். அவரும் தென்னை விவசாயி.
அமைச்சர் நிர்மல் குமார்,
நிறைய நகைச்சுவைகளுடன் பேசிய முன்னாள் அமைச்சர், போகிற போக்கில் கடந்த ஆட்சியில் போராட்டங்களே நடக்கவில்லை என்று கூறிவிட்டார். விவசாயிகள் போராடியதற்காக அவர்கள் மீது குண்டாஸ் போட்ட அரசுதான் திமுக அரசு . போராட்டங்கள் நடந்தன. அவையெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகளை வாபஸ் பெற கேட்டு கடந்த வாரம் தான் விவசாயிகள் எங்களை சந்தித்து பேசினர்.
எம்ஆர்கே பன்னீர்செல்வம்
அந்த விவசாயிகள் போராட்டம் என்பது திருவண்ணாமலையில் சிப்காட் பிரச்சனை தொடர்பான போராட்டம். இதைத் தவிர நெல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக போராடவில்லை. உங்கள் ஆட்சியில் மழையே பெய்யவில்லை. எங்கள் ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்து விவசாயம் பாதிக்கப்படும். உடனே முதலமைச்சர் (முன்னாள் முதல்வர் ஸ்டாலின்) ஓடி பார்ப்பார். நாங்கள் எல்லாம் ஓடுவோம். நானும் சக்கர பாணியும் டெல்டா பகுதியில் நிற்போம். ஆனால் இப்போது அள்ளி கொடுப்பார்கள் என்று பார்த்தால் கிள்ளி கொடுத்திருக்கிறார்கள் . நாங்கள் நெல்லுக்கு 2,550 ரூபாய் கொடுத்தோம், இப்போது 200 ரூபாய் உயர்த்தி 2,750 ரூபாய் அறிவித்திருக்கிறார்கள்
செங்கோட்டையன்
”இதுவரை டன்னுக்கு 4000 கொடுத்த சரித்திரம் இல்லை. இப்போது முதல்வர் அறிவித்திருக்கிறார். வரலாற்றை படைத்திருக்கிறார். இது உங்களுக்கு தெரியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
கடந்த முறை நாங்கள் பட்ஜெட் அறிவிக்கும் போது அதே இடத்தில் நின்றுதான் சொன்னேன், அடுத்த பட்ஜெட்டில் கரும்பு விலை டன்னுக்கு ரூ. 4000 கொடுப்போம் என்றேன். அப்போது செங்கோட்டையன் இங்கு இல்லை… எம்.எல்.ஏ பதவியை ரிசைன் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் நடந்தன.
மேலும் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், ” இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவீர்களோ என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதுபோல நுண்ணீர் பாசனம் திட்டத்துக்கு திமுக ஆட்சிக் காலத்தில் 1168 கோடி ரூபாய் ஒதுக்கினோம். ஆனால் இந்த ஆட்சியில் 785 கோடிதான் ஒதுக்கியிருக்கிறீர்கள். இதற்கு ‘துளித் துளித் தண்ணீர் திட்டம்’ என பெயர் மாற்றியிருக்கிறீர்கள். 383 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
குறுவை பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு 841 கோடி நாங்கள் ஒதுக்கினோம், நீங்கள் 640 கோடிதான் அறிவித்திருக்கிறீர்கள் என பல்வேறு திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதை பட்டியலிட்டு பேசினார்.
