தமிழ்த் தாய் வாழ்த்துதான் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளில் முதலில் பாட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தாக்கல் செய்த தீர்மானத்துக்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளன.
சட்டசபையில் முதல்வர் விஜய்யின் தீர்மானத்தை ஆதரித்து திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்த தனித் தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வழிமொழிகிறேன், ஆதரிக்கிறேன்.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 1891-ல் ‘பாயிரம்’ என்ற பாடலிலிருந்து எழுதப்பட்ட அருமையான வரிகள் ஆகும். இன்றும் இளமை குறையாத மொழி தமிழ் மொழி என்பதை நிரூபித்த பாடல் இது.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாட வைத்த கலைஞர்
இப்பாடல் 1970-ல் மாண்புமிகு முதலமைச்சர் தந்திருக்கிற தனித் தீர்மானத்தின்படி, 11 மே 1970-ல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அரசு நிறுவனங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில், பொது நிறுவனங்களில், பல்கலைக்கழகங்களில் பாடப்பட வேண்டும் என்று அந்தப் பாடலை முதன்முதலில் அரசாணை வெளியிட்டு, இதுதான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்று பாடவைத்த தலைவர் முத்தமிழறிஞர் அன்புத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
தமிழுக்கு 3-வது இடமா?
தமிழ்மொழிக்கு என்று சில சிறப்புகள் உண்டு. “தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே!தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே” என்று வீரப் பெருமை பேசுகிற தமிழர்களாகிய நாம், இன்றைக்குத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு 3-ம் இடம் என்று சொல்லுகிற பொழுதுதான் மிகுந்த அவமானத்திற்குரியவர்களாக மாறுகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணை பலமுறை பாடப்பட்ட பொழுது கவனக்குறைவாக இருப்பது, அலட்சியப்படுத்துவது என்ற நிலை இருந்தது.
அரசாணை வெளியிட்ட ஸ்டாலின்
யார் அலட்சியப்படுத்தினார்கள் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. இதை அறிந்த முன்னாள் முதலமைச்சர், எங்கள் கழகத்தின் தலைவர் ஆருயிர் அண்ணன் தளபதி அவர்கள், முதலமைச்சர் வடித்திட்ட அந்த தனித் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின்படி, 2021 டிசம்பர் 12-ல் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டு அதை நிலைநிறுத்திய பெருமையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையே சாரும்.
செம்மொழியாக்கிய கலைஞர்
அதுமட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியின் பெருமையைச் சொல்லக்கூடிய வகையில் ‘நீச மொழி’ என்று பேசப்பட்ட தமிழ்மொழியைத் தேச மொழியாக்கி, செம்மொழியாக்கியது அன்புத் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்.
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி உலகிற்குத் தமிழின் பெருமையைச் சொன்னது அன்புத் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்.
சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைக் கொண்டுவந்து தமிழ்மொழி சிறக்க அரிய பல பணிகளைச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல..
கரந்தையில் பாடப்பட்ட அந்தத் தமிழ்ச்சங்கப் பாடல், இன்றைக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்வது போல, எந்தப் பாடலை இந்த உலகிற்கு ஈன்று தந்தாரோ அந்தப் பல்கலைக்கழகத்திலேயே தாய்மொழியின் அடையாளமாக இருக்கிற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் 3-ம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
அனைத்துக் கட்சிகளும் கண்டித்த நிலையில், எங்கள் கழகத்தின் தலைவர் கடுமையான முறையில் கண்டித்தார், எதிர்த்தார். அதற்கும் ஒரு செயல்வடிவம் கொடுக்கக்கூடிய வகையில் தான் இன்றைக்குத் தனித் தீர்மானத்தை நாம் கொண்டுவந்திருக்கிறோம் என்பதை இந்தச் சட்டப்பேரவை என்றைக்கும் நினைத்துப் பார்க்கும். எனவே, இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை ஆதரிக்கிறேன்.
திமுக ஆதரவு
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் தந்தது அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைக் கொண்டுவந்தது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்.
அதைச் சட்டப்படி கொண்டுவர வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது தளபதி மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்.
அதைத் தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்று அதைக் கட்டிக் காக்கின்ற பெருமை எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சாரும்.
இவ்வளவு சிறப்புகளையும் தமிழ்மொழிக்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கும் பெற்றுத் தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் இதை முழுமையாக ஆதரிக்கிறோம்.
ஆனால், அடிக்கடி மாறப்படுகிற இந்தச் சூழலை மாற்றிட மாண்புமிகு முதலமைச்சரும், இந்த அவையும், பேரவைத் தலைவரும் அதைச் சட்டமாக்கித் தந்தால் எவரும் இந்தத் தவறுக்குத் துணைபோக மாட்டார்கள்.
அதற்கு நிலையான, உறுதியான, இரும்புத் தன்மையான அதிகாரம் கிடைக்கும் என்ற நிலையில் இதை ஆதரிக்கிற அதே நேரத்தில், இதனைச் சட்டமாக்கித் தாருங்கள் என்ற வேண்டுகோளை வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதை வரவேற்று அமர்கிறேன். இவ்வாறு கோவி.செழியன் பேசினார்.
அதிமுக ஆதரவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தமிழ் மொழியின் பெருமையும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ் தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் அனைவரின் உணர்வாகும்.
தமிழினத்தின் மரியாதை
தமிழ் தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல. அது தமிழ் மொழியின் தொன்மை மொழி, நமது மொழியின் பெருமை, நமது பண்பாட்டின் அடையாளம், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வை ஒன்றிணைக்கும் தமிழினத்தின் மரியாதை.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாடு தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் எங்கள் இயக்கம் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பைச் செய்துள்ளது.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா
1968-ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை பேரறிஞர் அண்ணா நடத்தினார்கள்.
1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடத்தினார்கள்.
1995-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடத்தினார்கள்.
தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்கள். இம்மாநாடுகள் தமிழ் மொழி குறித்து உலகளாவிய ஆய்வுகள் வளர்வதற்கு பெரும் பங்களிப்பைச் செய்தன.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக அம்மாவின் அரசு, 2017-ல் நடைபெற்ற மாநிலத்தின் மொழிவாரி மறுசீரமைப்பைக் குறிக்கும் வகையில், 2019-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஐ ‘தமிழ்நாட்டின் நாள்’ என்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்ததை இந்த சட்டமன்றத்தில் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கீழடியும் அதிமுக அரசும்
கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று, அதற்கு நிதியின் ஆதரவு வழங்கப்பட்டு, தமிழர்களின் தொன்மையான நாகரிகம் குறித்து சான்றுகள் உலகறியச் செய்யப்பட்டன. எனவே, உலகத் தமிழ் மாநாடுகள் முதல் தமிழ் பல்கலைக்கழகம் வரை, தமிழ்நாடு நாள் முதல் தொல்லியல் ஆய்வுகள் வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் வரலாற்றின் பெருமைக்கும் தொடர்ந்து பங்களித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் என்பதைப் பெருமையோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன்.
தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. அது தமிழுக்கு நாம் செலுத்தும் மரியாதை மற்றும் நமது தாய்மொழிக்கு செலுத்தும் வணக்கம் ஆகும். இது தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தின் வெளிப்பாடு ஆகும். தேசப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல.
அதிமுக ஆதரவு
நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்; நாம் தமிழர்கள் என்பதில் அதே அளவு பெருமை கொள்கிறோம்.
அரசியலில் நமக்குள்ள ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் தமிழர்கள். தமிழின் உரிமை என்று வரும்போது இந்தப் பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும் என்ற இந்த அரசின் தனித் தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முழுமனதோடு ஆதரிக்கின்றேன். தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்வர் விஜய்யின் இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
