ராஜன் குறை
கட்டப்பா என்பது பாகுபலி திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற கதாபாத்திரம். புரட்சித் தமிழர் என்றழைக்கப் படும் நடிகர் சத்யராஜ் ஏற்று திறம்பட நடித்த பாத்திரம். அந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து, இந்தியா முழுவதும் பெருவெற்றி பெற்றது. அதில் முதல் பாகத்தின் இறுதியில் பாகுபலியின் விசுவாசமான தளபதியான கட்டப்பா அவரை முதுகில் குத்தி கொல்லும் காட்சி காட்டப்படும். கட்டப்பா ஏன் பாகுபலியை முதுகில் குத்திக் கொன்றார் என்ற கேள்வி இரண்டாவது பாகத்தை எதிர்நோக்கி அனைவரையும் காத்திருக்க வைக்கும் உத்தியாக மாறியது.
எட்டப்பர் எட்டயபுரத்து மன்னர். அவருக்கும் கட்டபொம்மனுக்கும் எல்லைத் தகராறு போன்றவை இருந்ததால் அவர் ஆங்கிலேயர் துணையுடன் கட்டபொம்மனுடன் போரிட்டுள்ளார். கட்டபொம்மனை ரகசியமாகக் காட்டிக் கொடுத்து துரோகம் இழைக்கவில்லை. ஆனால் 1959-ஆம் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் புனைவாக அவ்வாறு சித்தரிக்கப் பட்டதால் எட்டப்பர் என்ற பெயரை துரோகத்தின் உருவகமாகக் கூறும் வழக்கம் உருவாகிவிட்டது. அது தவறானது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கருத்து.

சமீபத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேச சென்னை வந்த ராகுல் காந்தியிடம் யாரோ இதைக் கூறியிருக்கிறார்கள். அதனால் அவர் ஊடகங்களிடம் பேசும்போது ‘தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தமிழ்நாட்டில் யாராவது ஆதரித்தால் அவர்கள் எட்டப்பர் ஆகிவிடுவார்கள்” என்று கூறினார். அவருக்கு அதைச் சரியாக உச்சரிக்க வராமல் கட்டப்பாவையும், எட்டப்பரையும் கலந்து முதலில் உச்சரித்தது சுவாரசியமாக இருந்தது.
தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து த.வெ.க-வை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வந்ததும் தவெக-விற்கு பாய்ந்து சென்று ஆதரவு அளித்ததுடன், 2029 தேர்தல் கூட்டணிக்கும் உடன்படிக்கை செய்து கொண்டது. இதனைப் பலர் கட்டப்பா முதுகில் குத்தியதுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் தி.மு.க முதுகில், தமிழ்நாட்டு முதுகில் குத்துவது இது முதல் முறையல்ல. இந்தி திணிப்பில் இருந்து அதனை பட்டியல் போட்டால் பெரிய புத்தகமே எழுதலாம்.
ஆனாலும், இந்திய கூட்டாட்சி அமைப்பில் பாஜக-வின் இந்துத்துவத்திற்கு எதிராக மதச்சார்பின்மை பன்மைத்துவம் ஆகியவற்றை ஆதரிப்பதாலும், வெவ்வேறு காலங்களில் செயல்படுத்திய மக்கள் நல, சோஷலிஸ நோக்குள்ள திட்டங்கள் ஆகியவற்றாலும் தி.மு.க-வும், பிற மாநில முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அதனுடன் கூட்டணி காண்பது தவிர்க்க முடியாததாக இருந்து வந்துள்ளது எனலாம். ஆனால் காங்கிரஸ் அடிப்படையில் மாநில கட்சிகளுக்கு எதிராகவே இயங்கும்.
தி.மு.க அதன் வரலாறு முழுவதும் தமிழ்நாட்டு நலனுக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் ஓயாது போராடி வரும் கட்சி. தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடத்தில் நிறுத்தி திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சி என்பதை சாதித்துக் காட்டிய கட்சி. இந்துத்துவ பார்ப்பனீய அடிப்படைகளை எதிர்த்து இந்திய அளவில் சமரசமின்றி போராடி வரும் கட்சி.
சென்ற வாரம் கூட வந்தே மாதரம் பாடலின் விரிவடிவை தேசிய பாடலென்று வரையறுத்து, அதனை அவமதிப்பது குற்றம் என்று நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்த போது அதனை எதிர்த்து கடுமையாக வாதிட்ட கட்சி தி.மு.க-தான். கனிமொழி அவர்கள் கடுமையான மொழியில் கண்டித்தார். ராஜா இந்திய தேசப்பிரிவினைக்கே அந்த பாடலும், சாவர்க்கரும்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். நேர் மாறாகக் கேரள காங்கிரஸ் அரசின் தலைமைச் செயலர் சுதந்திர தினத்தன்று வந்தே மாதரம் முழு பாடலையும் பாட சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

காங்கிரஸின் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான செயல்பாடுகளின் முக்கிய வெளிப்பாடுதான் தவெக மூலம் அது நட த்திய தொகுதி மறுவரையறைக்கு எதிரான நாடாளு மன்ற உறுப்பினர் சந்திப்பு. அதன் நோக்கம் தி.மு.க தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக பாஜக-வின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு தி.மு.க ஆதரவு அளிக்கப்போகிறது என்ற புரளியைப் பரப்புவதுதான். இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நாம் விரிவாகப் புரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் எது தமிழ்நாட்டு நலன், யார் அதற்காக நிற்கிறார்கள் என்பது புரியும்.
காங்கிரஸ் தமிழ்நாட்டு நலனுக்காக நிற்பதாக இருந்தால் ராகுல் காந்தி டி.கே.சிவகுமாரிடம் காவிரி ஆணைய தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் திறந்தவிட சொல்லியிருக்கலாமே? அதுதானே ஒரு தேசியத் தலைவருக்கு இருக்க வேண்டிய மாண்பு? செல்லுமிடமெல்லாம் அரசமைப்பு சட்டப் புத்தகத்தை கையிலேந்திக் காட்டும் ராகுல் காந்தி, அந்த அரசமைப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட ஆணையத்தின் தீர்ப்பினை மதிக்கச் சொல்ல வேண்டாமா? காவிரி விஷயத்தில் கட்டப்பா வேலை பார்த்துவிட்டு, தமிழ்நாட்டு நலனைத் தவிர வேறு அரசியலே அறியாத தி.மு.க-வை எட்டப்பர் என்று பேச என்ன துணிச்சல் இந்த காங்கிரஸ்காரர்களுக்கு?
தொகுதி மறுவரையறையின் உண்மை நிலை என்ன?
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்பது ஒவ்வொரு பத்தாண்டும் சென்சஸ் என்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தபிறகு, அதன் தரவுகளின்படி செய்யப்பட வேண்டியதாகும். அதுதான் அரசமைப்பு சட்ட விதிகள் கூறுவது. இதில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன. ஒன்று மக்கள் தொகை அடிப்படையில் எல்லா மாநிலங்களிலும் கூடியவரை ஒரே சீராக இத்தனை இலட்சம் பேர்களுக்கு ஒரு பிரதிநிதி என்று வரையறுக்க வேண்டும். உதாரணமாக 1950 ஆண்டு குறைந்த பட்சம் ஐந்து இலட்சம் பேர் அதிக பட்சம் ஏழரை இலட்சம் பேருக்கு ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் என்று வரையறை செய்யப்பட்டது. இரண்டாவது, தொகுதிகளின் புவிப்பரப்பு எல்லைகளை தேவைப்படும்படி திருத்தி அமைக்க வேண்டும். மூன்றாவது தனித்தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றையும் அறுதியிட வேண்டும்.
குடும்பக் கட்டுப்பாடு திட்ட த்தை மாநிலங்கள் செயல்படுத்த பிரதிநிதிகள் எண்ணிக்கை பற்றிய கவலை தடையாக இருக்க க் கூடாது என்பதால் 1976-ஆம் ஆண்டு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை 25 ஆண்டுகளுக்கு மாற்றக் கூடாது என்று உறைநிலை ஒன்று அரசமைப்பு சட்ட திருத்தம் மூலம் ஏற்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மொத்த எண்ணிக்கையும் அதிகபடம் 550 என்று வரையறுக்கப்பட்டது.
அந்த 25 ஆண்டுகள் முடிந்தபோது தென் மாநிலங்கள் மக்கள் தொகையை குறைத்திருக்க, வட மாநிலங்கள் பலவற்றில் மக்கள் தொகை அதிகரித்து இருந்ததால், 2001 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு நடந்தால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று மீண்டும் உறைநிலை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. ஆனால் மாநில வாரியாக தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், தொகுதிகளின் எல்லைகளை மட்டும் மறுவரையறை செய்ய ஒரு குழு 2002-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட து. அதன் அறிக்கை 2008-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

இப்போது 2026-ஆம் ஆண்டு வந்துவிட்ட து என்பதால் இதன்பிறகு எப்போது சென்சஸ் நட த்தி முடிக்கப்பட்டாலும், உடனே மறுசீரமைப்பு குழு அமைத்து மாநிலங்களின் புதிய மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளை மறுவரையறை செய்தாக வேண்டும். அதாவது அரசமைப்பு சட்டப்படி கட்டாயம் செய்தாக வேண்டும். அது தேர்வல்ல. சட்டம். அப்படி செய்தால் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள், வேறு சில மாநிலங்கள் பாதிக்கப்படும். அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும். உத்திரப் பிரதேசம், பீஹார் போன்றவற்றின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.
கவனத்திற்குரிய விஷயம் என்னவென்றால் 2021-ஆம் ஆண்டு சென்சஸ் கோவிட் நோய் காரணமாக அந்த ஆண்டு நடைபெறவில்லை. எந்த காரணத்திலோ கோவிட் நோய் ஒய்ந்தபிறகும் பாஜக அரசு சென்சஸ் எடுக்கவில்லை. இப்போது 2027-ஆம் ஆண்டுதான் எடுக்கப்போகிறது. அப்படி எடுக்கும் சென்சஸ் 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகானது என்பதால் அதன் முடிவுகள் தெரிந்தவுடன் தொகுதி மறுசீரமைப்பை பாஜக அரசு மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்பதுடன் செய்தே ஆகவேண்டும் என்பதுதான் நிலமை. அதைத் தடுக்க வேண்டும் என்றால்தான் அரசமைப்பு சட்ட சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பங்கு ஆதவுடன் செய்ய வேண்டும்
பொதுவாக சென்சஸ் எடுத்து தரவுகள் தொகுக்கப்பட சில ஆண்டுகள் ஆகும். பின்னர் அதன்படி தொகுதி மறுசீரமைப்பைச் செய்யவும் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போது எல்லாமே கணணி மயமாக இருப்பதால் 2027-ஆம் ஆண்டே சென்சஸ் இறுதி செய்து, 2028-ஆம் ஆண்டே தொகுதி மறுவரையறையைச் செய்து, அதன்படி 2029-ஆம் ஆண்டு தேர்தலை பாஜக நட த்தாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இவ்வாறு செய்ய அது எந்த அரசமைப்பு சட்ட சீர்திருத்தமும் செய்ய வேண்டியதில்லை.
அப்படி துரிதமாக முடிக்க முடியவில்லை என்றாலும், 2029-ஆம் தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சி தொகுதி மறுவரையறையை 2027 சென்சஸ் படி செய்துதான் ஆகவேண்டும். அதில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது. அப்படி பாதிப்பு நிகழ்ந்தால் எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் தொகையை அதிகரிக்க முற்படலாம். ஏற்கனவே சந்திரபாபு நாயுடு அவ்வாறு பேசியுள்ளார். அது பெரும் விபரீதத்தில்தான் கொண்டு போய் விடும்.
அதைத் தடுக்க வேண்டும் என்றால் மீண்டும் அரசமைப்பு சட்ட சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். மேலும் 25 ஆண்டுகளுக்கு/ 50 ஆண்டுகளுக்கு மாநில வாரி தொகுதி எண்ணிக்கை உறைநிலை என்று கூற வேண்டும். அல்லது நிரந்தரமாகவே 1975 விகிதாசாரம் தொடரும் என்று நிர்ணயிக்க வேண்டும். அவ்வாறு செய்ய மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். அப்போது இன்னொரு கேள்வி எழும். மொத்த எண்ணிக்கை 543 என்பதே தொடர வேண்டுமா என்ற கேள்வி.

மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பதா, வேண்டாமா?
துவக்கத்தில் அதிக பட்சம் ஏழரை இலட்சம் பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று அரசமைப்பு சட்டம் கூறியது. இன்றைக்கு சராசரியாக 22/26 இலட்சம் பேருக்கு ஒரு உறுப்பினர் என்று மாறியுள்ளது. இது மக்களின் வாக்கின் மதிப்பை குறைக்கிறது. இது ஒரு விழுமியம்.
அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும், எல்லா மாநிலங்களிலும், எத்தனை பேருக்கு ஒரு உறுப்பினர் என்ற மதிப்பு அதிகம் வேறுபடக் கூடாது என்றும் அரசமைப்பு சட்டம் கூறுகிறது. இது மாநிலங்களிடையே மக்கள் தொகைப் போட்டிக்கு வழிவகுத்துவிடும் என்பதால் கூட்டாட்சி விழுமியத்திற்கு எதிராக உள்ளது.
அதாவது மக்களாட்சி விழுமியம் என்று பார்த்தால் நாடு முழுவதும் சமச்சீராக பிரதிநிதித்துவத்தின் மதிப்பு இருக்க வேண்டும். கூட்டாட்சியம், மாநில உரிமைகள் என்று பார்த்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. இந்த இரண்டு விழுமியங்களையும் எப்படி இணைப்பது என்று பலரும் விவாதித்துள்ளார்கள். ஆங்கில ஆய்வேடுகளில் ஏகப்பட்ட கட்டுரைகளைக் காணலாம். சிக்கலான தத்துவக் கேள்வி.
இப்போது பாஜக அரசு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டியுள்ளது. அதில் 850 பேர் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிக்க விரும்புகிறது. அதற்கான அரசமைப்பு சட்ட சீர்திருத்தத்தை அது ஏப்ரல் மாதம் கொண்டுவந்தது. மிகவும் தந்திரமாக அதனை மகளிருக்கான தனித்தொகுதி ஒதுக்கீட்டுடன் இணைத்துக் கொண்டுவந்தது.
அந்த சட்ட திருத்தத்தில் மாநிலங்களுக்கான பிரதிநித்துவ விகிதாசாரம் (proportionate representation) மாறாது என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை என்பதால் தி.மு.க மிகக் கடுமையாக எதிர்த்தது. சட்ட நகலை முதல்வர் ஸ்டாலினே எரித்தார். தமிழ்நாடு முழுவதும் மறுசீரமைப்பு வேண்டாம் என்ற முழக்கம் ஒவ்வொரு வீட்டிலும் கோலங்களில் எழுதப்பட்டது. கருப்புக் கொடி பறக்க விடப்பட்டது.
அந்த சட்டத்தை மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. அப்போது உள்துறை அமைச்சர் திடீரென்று அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதி அதிகரிப்பு செய்கிறோம். அப்போது விகிதாசாரம் மாறாது என்றார். ஆனால் இது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை தாற்காலிக ஏற்பாடா, நிரந்தர ஏற்பாடா என்று தெளிவாக இருக்கவில்லை.
தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிலைபாடு மாநிலங்களின் விகிதாசார பிரதிநிதித்துவம் மாறக்கூடாது என்பதாகவே இருந்தது. கூடவே மொத்த தொகுதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்கத் தேவையில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இங்கேதான் நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு தனித்தனி பிரச்சினைகள் உள்ளன.
ஒன்று, மாநிலங்களின் 1975 பிரதிநிதித்துவ விகிதாசாரத்தைக் காப்பதன் மூலம் கூட்டாட்சியம் சீர்குலையாமல் பாதுகாப்பது.
இரண்டு, ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுப்பது.
(மூன்றாவதாக இன்னொரு பிரச்சினையை சிலர் கூறுகிறார்கள். அது தொகுதிகளின் பரப்பினை, எல்லைகளை பாஜக தனக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் என்பது. ஆங்கிலத்தில் ஜெர்ரிமாண்டெரிங். இந்த பிரச்சினை யார் மறுவரையறை செய்தாலும் வரும்; காங்கிரஸ் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் அறுபதுகளில் எழுந்துள்ளன. இதற்கு தலமட்டத்தில்தான் பேசி/போராடி தீர்வு காண முடியும்)
கவனம்: உண்மையான சிக்கல் என்ன? மறுவரையறை என்பது ஏன் ஒரு டைம் பாம்?
டைம் பாம் என்பது என்னவென்றால் ஒரு சிறிய கடிகாரத்துடன் வெடிகுண்டின் திரியை பிணைத்து விடுவார்கள். அந்த கடிகாரத்தில் செட் செய்யப்பட்ட, நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தவுடன் திரி கொளுத்தப்பட்டு குண்டு வெடித்துவிடும்.

தொகுதி மறுவரையறை என்பதை 2026-க்கு பிறகான சென்சஸ் முடிந்தவுடன் செய்தே ஆகவேண்டும் என்று டைம் பாம் செட் செய்தாகிவிட்டது. அடுத்த ஆண்டு சென்சஸ் நடக்கப்போகிறது. அதன் முடிவுகள் வந்தவுடன் மறுசீரமைப்புக் குழு அமைத்து இப்போதுள்ள 543 தொகுதிகளை மறுபங்கீடு செய்துதான் ஆகவேண்டும்.
அப்படி செய்தால் மாநில விகிதாசார பிரதிநிதித்துவம் மாறக்கூடாது என்று விரும்பும் கட்சிகள், மீண்டும் அரசமைப்பு சட்ட சீர்திருத்தம் செய்தாக வேண்டும். 2029 தேர்தல் வரை அது நிச்சயம் முடியாது. ஒருவேளை அதற்குள் மறுசீரமைப்பு செய்யமுடியவில்லை என்றாலும், அதற்குப் பின் அமையும் நாடாளுமன்றத்திலும் ஆட்சி மாறினாலும், பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் வலுவாக இடம்பெற்றால் அரசமைப்பு சட்ட சீர்திருத்தம் செய்ய முடியாது. டைம் பாம் வெடித்துவிடும்.
மாறாக இப்போதே பாஜக அரசு 850 உறுப்பினர்களாக மாற்றுவோம். மாநிலங்களின் 1975 விகிதாசார பிரதிநிதித்துவத்தை நிரந்தர விகிதாசாரமாக மாற்றுவோம் என்று கூறினால் அது மாநில நலனுக்கு உகந்த தீர்வா என்பதை பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதாவது மக்கள் தொகை எப்படியெல்லாம் கூடினாலும் குறைந்தாலும், மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 7.2% தமிழ்நாட்டு உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அரசமைப்பு சட்டம் மாற்றப்பட்டால் அது மாநில நலனுக்கு உகந்ததா இல்லையா என்பதுதான் கேள்வி.
இந்த வாய்ப்பு இருப்பதால்தான் தி.மு.க மசோதா வரைவு எப்படியிருக்கிறது என்பதை பார்த்த பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்று கூறுகிறது. தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பின் மூலம் டைம் பாம் வெடிப்பது தடுக்கப்படுமானால் அதுதானே நல்லது? எண்ணிக்கை அதிகரிப்பு+ மாநில விகிதாசார உறைநிலை என்பதை பல மாநில கட்சிகளும் ஏற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் காங்கிரஸ் திடீரென்று 543 மாறவே கூடாது, மாறினால் பேராபத்து என்று கூக்குரலிடுவதும், இந்த மாற்று சாத்தியத்தை பரிசீலிப்பதே மாநில நலனுக்குத் துரோகம் என்பதும் மிக மோசமான நாடகம் என்பது மட்டுமல்லாமல், உண்மையான மாநில நலனுக்கு எதிராகவும் உருவாக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் மாநில கட்சிகளின் முதுகில் குத்தும் காங்கிரஸின் போக்கினால், பாஜக-வை 2029 தேர்தலில் அதனால் வீழ்த்த முடியுமா என்பதே பெரிதும் ஐயத்திற்குரியதுதான். வேறு புதிய கட்சிகள், காக்ரோச் கட்சி போன்றவை தோன்றி அதனைச் செய்யலாம். ஆனாலும் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் சாத்தியமாகுமா என்று தெரியாது.
சாத்தியமாகவில்லை என்றால் டைம் பாம் வெடித்தே தீரும். வெடித்தாலும் தி.மு.க போராடும். இந்தி திணிப்பை எதிர்த்து போராடவில்லையா? அப்படி ஒரு போராட்டம் வெடித்தால் அது மாநில சுயாட்சிக்கான போராட்டமாகவும் இருக்கும். ஆனால் அந்த போராட்ட த்திற்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும்.
காங்கிரஸ் போராடுமா என்று தெரியாது. காலனி ஆதிக்கத்திற்கு எதிராக 1942-ஆம் ஆண்டு போராடிய பிறகு, அது எந்த போராட்டத்தை மேற்கொண்டது என்று சிந்திக்க வேண்டியுள்ளது. சுதந்திர இந்தியாவில் பெரும்பாலான போராட்டங்கள் காங்கிரஸை எதிர்த்துதான் நடந்துள்ளன. மேலும் மாநிலங்களுக்கு இடையிலான விகிதாசாரம் பாதிப்பதால் காங்கிரஸிற்கு பெரிய பிரச்சினை கிடையாது. ஆனால் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கு கடுமையான பிரச்சினை ஏற்படும். இங்கேதான் காங்கிரஸ் நலனுக்கும், தமிழ்நாட்டு நலனுக்கும் முக்கியமான முரண்பாடு தோன்றுகிறது.
அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. கட்டப்பா யார்? எட்டப்பர் யார்?
