தமிழ்த் தாய் வாழ்த்து கட்டாயம்- சட்டசபையில் நாளை தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் விஜய்!

Published On:

| By Mathi

Tamil Thai Vazhthu mandatory - CM Vijay to move resolution in Assembly tomorrow

”தமிழ்நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்” என்ற தனித் தீர்மானத்தை சட்டசபையில் நாளை ஆகஸ்ட் 10-ந் தேதி முதல்வர் விஜய் முன்மொழிய இருக்கிறார்.

தமிழக சட்டசபையின் நாளைய நிகழ்ச்சி நிரலில், அரசினர் தனித் தீர்மானம் என்ற தலைப்பில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் தொடர்பான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன் மொழிவார் என இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் நாளை முன்மொழிய இருக்கும் தீர்மானம்: தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது.

மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

2021 டிசம்பர் 12 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் 9-ந் தேதி கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்’ முதலில் பாடப்படுவது மரபுத் தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆகவே, “தமிழ்த்தாய் வாழ்த்து” தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது. முதல்வர் விஜய் இத்தீர்மானத்தை நாளை முன்மொழிய இருக்கிறார்.

பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் ஆளுநர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தற்போது வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுகிறது; இதன் பின்னர் தேசிய கீதமும் 3-வதாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலும் பாடப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் உரை வாசித்த போதும் இதே போல தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அண்மையில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலைத்தான் முதலில் பாட வேண்டும் என 2021-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது போல ஒரு தீர்மானம் சட்டசபையில் நாளை நிறைவேற்றப்பட உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share