கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 9) அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:
“எங்களைப் பொறுத்தவரை அதிமுகவே முதன்மையானது; அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, அடுத்த தேர்தலில் ஏன் ஆளும் கட்சியாக வர முடியவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது அதிமுக ஆளும் கட்சியாகத் தொடர்ந்தது. ஆனால், இந்த முறை ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதை ஆராயவே பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்தினோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவைக் கூட்டுவதாக உறுதியளித்திருந்தார்.
அதிமுக, திமுகவுடன் இணக்கமாகச் செல்வதாகக் கருத்துகள் எழுந்தபோதுதான் சிக்கலே தொடங்கியது. தவெகவுக்கு வாக்களித்ததற்காக எங்களைத் துரோகி என்று கூறுகிறார்கள். ஆனால், திமுகவை எதிர்ப்பதற்காகவே தவெகவுக்கு வாக்களித்தோம்; அது அன்றோடு முடிந்துவிட்டது. அதன்பின்னர் பொதுச்செயலாளருடன் இணைந்து அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம்.
கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டதில் சில முரண்பாடுகள் உள்ளன. இதற்காகக் கமிட்டி அமைத்து ஆலோசிக்க வேண்டும் என்றே வலியுறுத்தினோம். மற்றபடி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உரிமையோடு தலைமைக்குச் சுட்டிக்காட்டி கோரிக்கைகளை வைத்து இயங்கி வருகிறோம்.
பொள்ளாச்சி ஜெயராமன் மீது விமர்சனம்:
பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து நான் வெளிப்படையாகப் பேசுகிறேன்; அவர் சில கசப்பான வேலைகளைச் செய்து வருகிறார். இருப்பினும், பொள்ளாச்சி ஜெயராமன் குறித்தோ அல்லது அவரது மகன் குறித்தோ கட்சியினர் யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளேன்.
முன்பு அவரது மகனுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது, நான்தான் 25,000 மகளிரைத் திரட்டி அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினேன். ஆனால், தற்போது அவர் மகன் தவறான பாதையில் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியைக் வழிநடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றார். அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன் தான் சென்று ஓ.பி.எஸ்-ஐ அழைத்து வந்தார். இவர் என்ன பெரிய விசுவாசியா? நடந்த சம்பவங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாதா? திமுகவில் என்னுடன் பேசிய நிர்வாகிகள் பலர் உள்ளனர். ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்குச் சென்றபோது நாகரிகமாகவா நடந்துகொண்டார்கள்?
நாங்கள் தீவிரமான திமுக எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். திமுகவை எதிர்ப்பதில் தவெகவும் அதே நிலையில் உள்ளதால், அந்த அடிப்படையில் செயல்பட்டோம். எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், ‘திமுகவுடன் செல்லலாம்’ என்று கூறியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
எனவே, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் குறித்து நமது தரப்பிலிருந்து யாரும் எந்தப் பதிவையும் இணையத்தில் வெளியிட வேண்டாம். அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நாம் இங்கு சகோதரத்துவத்துடன் பழகி வருகிறோம். பொதுச்செயலாளரிடம் ஆரோக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துச் செயல்படுகிறோம்.
புதிய தலைமுறைக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்:
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்க சி.வி. சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், அன்பழகன், வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட பலர் உறுதுணையாக இருந்தனர். இவர்களுக்கெல்லாம் மீண்டும் பழைய பதவிகளை வழங்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, நான் 21 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிவிட்டேன். எனக்குப் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; அடுத்த தலைமுறைக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என தெரிவித்தார்.
முன்னதாக பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் உயிரிழந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், கந்தசாமி உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே எஸ்.பி.வேலுமணி வந்த போது, கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ‘துரோகிங்க அண்ணா இவனுக எல்லாம்’ என குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி எஸ்பி வேலுமணி இன்றைய கூட்டத்தில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
