தொகுதி மறுவரையறை மசோதா: திமுக வெளிநடப்பு செய்கிறதா? – நிர்மல் குமார் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nirmal kumar

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இம்மசோதாவிற்கு எதிராக வாக்களிக்காமல் திமுக வெளிநடப்பு செய்யப்போவதாகத் தகவல்கள் வெளிவருவது மிகப்பெரிய துரோகம் எனத் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சாடியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தைச் சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 8) முதல்வர் விஜய் நடத்தினார்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தை அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் 37 எம்.பி.க்கள் புறக்கணித்தனர். அதேநேரம் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதா எம்.பி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:

ADVERTISEMENT

“அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசு தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்திற்கான எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புள்ளது. அவசியமற்ற இந்த காலகட்டத்தில் தொகுதி மறுவரையறையைக் கொண்டுவருவது சிறுபான்மை மக்களை ஒதுக்கும் செயலாகும். தமிழக உரிமையைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்,” என்றார்.

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக திமுக வெளிநடப்பு செய்ய வாய்ப்புள்ளதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்:

ADVERTISEMENT

“கடந்த ஏப்ரல் மாதம் அனைவரும் இணைந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தத் தீர்மானத்தின்படி திமுக இந்த மசோதாவிற்கு முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்; நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

ஆனால், தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படும்போது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யப்போவதாகத் தகவல்கள் வருகின்றன. திமுக வெளிநடப்பு செய்தால் அது மசோதாவை மறைமுகமாக ஆதரிப்பதற்குச் சமம். அப்படிச் செய்வது தமிழகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

தனது குடும்பத்தைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவுமே ஸ்டாலின் பாஜகவோடு இணக்கமாகச் செயல்படுகிறார். இதுவரை மறைமுகமாக ஆதரித்தவர்கள், இனி நேரடியாகவே ஆதரிக்கிறோம் என்று கூறிவிடலாம்.

அதேசமயம் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக சொன்னார்கள். பேரவையில் காவிரி விவகாரத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சிகளிடமும் அதுதொடர்பான தெளிவு இருக்கிறது. அதனால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை.

எனவே, தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக தனது தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share