மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே வைத்துக் கொண்டு சட்டசபை தொகுதிகளை மட்டும் கூட மறுவரையறை செய்யலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் யோசனை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதல்வர் விஜய், தமிழக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று ஆகஸ்ட் 8-ந் தேதி சென்னையில் கூட்டினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம கட்சியின் 37 எம்.பி.க்கள் புறக்கணித்தனர். காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக கட்சிகளின் 19 எம்.எபி.க்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் சுதா எம்.பி. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் “தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும்” என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.
முதல்வர் விஜய் கூட்டிய இந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் விசிக சார்பாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் முன்வைத்த கருத்துகள்:
- அமெரிக்காவில், நமது மக்களவைக்கு இணையான அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக 435 ஆக மாற்றமின்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை. எனவே, இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் மாற்றமின்றி இப்போதிருக்கும் அதே எண்ணிக்கையிலேயே தொடரலாம்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே வைத்துக்கொண்டு, தேவையெனில் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யலாம் .
இப்போதுள்ள அளவிலேயே விவாதங்களின்போது எல்லா கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. 5 உறுப்பினர்களுக்கும் குறைவாக உள்ள கட்சிகளுக்கு 2 அல்லது 3 நிமிடங்களே ஒதுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் முறையாக விவாதங்கள் நடக்க முடியாத நிலை ஏற்படும்.
தற்போதுள்ள அளவிலேயே ஒரு உறுப்பினர் தனது பதவிக் காலத்தில் 10 முறைகூட விவாதங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை. இது அவரது தனிப்பட்ட இழப்பு மட்டுமல்ல, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் இழப்பாகும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தத் தேவையில்லை எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

- நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து அரசியல் நிர்ணய சபையில் விவாதித்து முடிவு செய்தபோது, உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டம் எதுவும் இல்லை. தற்போது, அடித்தள நிலையில் மக்களின் ஜனநாயகத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகள் உதவுகின்றன. எனவே, புதிய சட்டங்களை இயற்றுவது, சட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது, ஆய்வு செய்வது ஆகிய சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் முதன்மைப் பணிகளுக்கு இப்போது முன்னுரிமை அளிக்கலாம். அவ்வாறு செய்யாத காரணத்தால் பஞ்சாயத்துத் தலைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் மக்களுக்கு வேறுபாடு தெரியாத நிலை தற்போது உள்ளது.
சட்டசபைத் தொகுதிகள் மறுவரையறை மேற்கொள்ளப்படும்போது, அதை மக்கள்தொகையின் அடிப்படையில் அல்லாமல், ஒரு மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடலாம்..
- கடந்தமுறை தொகுதி மறுவரையறையின்போது, முஸ்லிம்களின் வாக்குகளின் மதிப்பைக் குறைக்கும் வகையில் தொகுதிகள் வரையறுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. பட்டியலின மக்களிடமிருந்தும் இதுபோன்ற புகார்கள் எழுந்தன. எனவே, சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் வகையில் தொகுதி எல்லைகளை வரையறுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது பட்டியலின மக்களின் தனித் தொகுதிகளை வரையறுப்பதற்கும் பொருந்தும்.
- தொகுதி மறுவரையறையின்போதுதான் தனித் தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்றன. இதனால் ஒரு தொகுதி நீண்டகாலமாகத் தனித் தொகுதியாகவே இருக்கும் நிலை உண்டாகிறது. ஒப்பீட்டளவில் தனித் தொகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் ஆட்சியாளர்களும் மாவட்ட நிர்வாகமும் அக்கறை காட்டுவதில்லை. தற்போதுள்ள கட்சி அரசியல் சூழல் தனித்தொகுதி உறுப்பினர்கள் சுயமாக செயல்படுவதற்கு ஏதுவாகவும் இல்லை. இதனால் பெரும்பாலான தனித்தொகுதிகள் ஒப்பீட்டளவில் வளர்ச்சியில் பின்னடைந்த நிலையில் உள்ளன.
அதுமட்டுமின்றி, தனித் தொகுதிகளில் உள்ள எஸ்சி அல்லாத மக்கள் தமக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாத நிலையால் எஸ்சி மக்கள்மீது கோபமடைவதையும் பார்க்கிறோம்.
எனவே, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் கணக்கெடுப்பு முடிந்தபின் அதன் அடிப்படையில் தனித் தொகுதிகள் சுழற்சி செய்யப்படவேண்டும்.

- ஐம்பது ஆண்டுகளாக நீடித்து வரும் தொகுதி மறுசீரமைப்பு முடக்கத்தின் விளைவாக எஸ்சி, எஸ்டி மக்களுக்கான தனித் தொகுதிகள் போதுமான அளவில் உயர்த்தப்படவில்லை. நமக்குக் கிடைக்கும் கணிப்புகளின்படி, ஒவ்வொரு சென்சஸின் போதும் மறுசீரமைப்புச் செய்யாததால் எஸ்சி மக்களுக்கு 52 மக்களவை இடங்களும், எஸ்டி மக்களுக்கு 24 இடங்களும் பறிபோயுள்ளன. மொத்தத்தில், அரசமைப்புச் சட்டம் பாதுகாக்க விரும்பிய எஸ்சி எஸ்டி சமூகங்களுக்கு 76 நாடாளுமன்ற இடங்கள் “காணாமல் போயுள்ளன”. இதன் விளைவாக சுமார் 9.5 கோடி மக்களின் அரசியல் குரல் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமான எண்ணிக்கையாகும்.
- தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கும்போது மக்களவை மட்டுமின்றி மாநிலங்களவையின் பிரதிநிதித்துவமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒன்றிய ஆட்சியாளர்கள் தாங்கள் கொண்டுவரும் மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றப் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல், பண மசோதாக்கள் ( money bill ) அல்லாத மசோதாக்களையும் பண மசோதாக்களாக வகைப்படுத்தி, மாநிலங்களவையின் ஒப்புதல் பெறாமலேயே அவற்றை நிறைவேற்றுகின்றனர். மாநிலங்களவையைப் புறக்கணிக்கும் இந்த தந்திரம் மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒரு வழிமுறையே ஆகும்.
இந்தச் சூழ்நிலையில், மக்களவைக்கு இணையாக மாநிலங்களவைக்கும் முக்கியத்துவம் அளிக்க நாம் வலியுறுத்த வேண்டும். மாநிலங்களின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், அமெரிக்காவில் இருப்பதைப் போல, அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையிலான மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு ஒன்றிய அரசை நாம் வலியுறுத்த வேண்டும். அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான லோக்நாத் மிஸ்ரா, இது தொடர்பாக ஒரு திருத்தத்தை முன்மொழிந்து விவாதித்துள்ளார். அந்தக் காலச் சூழலில் அவரது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், தற்போதைய சூழலில், இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வாறு விசிக எம்.பி.க்களான அக்கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் கருத்துகளை முன்வைத்தனர்.
