திமுகவின் ‘நியாயமான தொகுதி வரையறை’ கோரிக்கைக்குப் பின்னால் ஏராளமான ஆபத்துகள் இருப்பதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பட்டியலிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி, தொகுதி மறுவரையறை தொடர்பான திமுகவின் நிலைப்பாட்டை விவரித்தார்.
இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்ட அறிக்கை: நடக்க இருக்கும் தொகுதி மறுவரையில் மாற்றத்திற்குள்ளாவது தொகுதி எண்ணிக்கை மட்டுமல்ல, தொகுதியின் தன்மையும் மாற்றப்படுகிறது.
- உதாரணமாக முஸ்லீம்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் உடைக்கப்படும்
- முஸ்லீம்கள் இரண்டு, மூன்று தொகுதிகளுக்குள்ளாக பிரிக்கப்படுவார்கள்.
- இதனால் பாஜக எதிர்ப்பு தொகுதிகள் அழிக்கப்பட்டு மறுநிர்மாணம் செய்யப்படும்.
- இதை ஏற்கனவே அஸ்ஸாம், காசுமீரில் நடைமுறை செய்துள்ளார்கள்.
- அஸ்ஸாமில் இதனால் பாஜக எளிதாக வெற்றிபெற இயலுகிறது.
இதை வைத்து பாஜக நிரந்தரமாக அதிகாரத்தில் தக்கவைக்கப்படும். குறைந்தது அடுத்த 10 ஆண்டுகள் மோடி பிரதமராக நீடிக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.
மோடி ஆட்சியில் இருக்கும் வரை, பாஜக அதிகாரத்தை கட்டுப்படுத்தும்வரை தமிழ்நாட்டுக்கோ, தமிழருக்கோ, தமிழ் மொழிக்கோ விடிவு கிடையாது.
ஆகவே ‘தொகுதி மறுவரையறை’ என்பதில் ஒருபகுதி ‘தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம்’, மறுபாதி ‘பாஜகவின் நிரந்தர அதிகாரம்’…
தமிழ்நாட்டிற்கான விகிதத்தை குறைக்கமாட்டோம் என சொல்லிக்கொண்டே, பாஜக தன்னை நிரந்தரமாக ஆட்சியில் அமர்த்திக்கொள்ளும் வகையில் வட இந்தியாவில் தொகுதிகளை மறுகட்டுமானம் செய்துகொள்ளும்.
முஸ்லீம்கள் நிரந்தரமாக தமது பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்பார்கள். வடகிழக்கு மாகாணங்கள், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில கட்சிகள் பிரதிநிதித்துவத்தை இழக்கும்.
இதைத்தான் Fair Delimitation செய்யும்.
பாஜக என்றுமே தமிழின விரோதியே. இதில் ஒருபோதும் மாற்றம் கிடையாது.
‘தொகுதி மறுவரையறை’ என்பது ‘மோடி-பாஜக’ நிரந்தரமாக ஆட்சி-அதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சியே. இதில் கடந்த காலத்தைப் போல இந்தியாவிற்கே திமுக வழிகாட்டியாக நின்று, இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.
Fair Delimitation என்பது பாஜக சார்பான நிலைப்பாடகவே சென்றுமுடியும். பாஜகவின் கனவை வெற்றிபெறச் செய்யாதீர்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் பாஜக எதிர்ப்பின் தலைமைத்துவம் தமிழர்களிடமே உள்ளது. இதை எக்காலமும் கைவிடமாட்டோம் என உறுதி பூணுவோம். இவ்வாறு திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
