தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. விளக்கி உள்ளார். மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்தால் 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்ததற்கும் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது, தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சிகளுடைய கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காக, ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் தவெக சார்பிலே இன்று அமைச்சராக இருக்கக்கூடிய தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு, அங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.
அந்த தீர்மானங்களின் அடிப்படையிலே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது, அத்தனை கட்சிகளும் பாஜக நீங்கலாக மற்ற கட்சிகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த தீர்மானத்திற்கும் இன்றைக்கு நடந்து முடிந்திருக்கக்கூடிய இந்த கூட்டத்திலே எடுத்திருக்கக்கூடிய முடிவுகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
5 முதல்வர்களுடன் ஆலோசனை
திராவிட முன்னேற்றக் கழகம் மிகத் தெளிவாக, முதன் முதலில் டிலிமிடேஷன்- தொகுதி மறுவரையறை அப்படிங்கிற பேச்சு வந்தபோதே எங்களுடைய கழகத் தலைவர், அன்று முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின், 5 முதலமைச்சர்களை அழைத்து, மற்ற கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படக்கூடிய அத்தனை மாநிலங்களில் இருந்தும் எல்லோரையும் அழைத்து, சென்னையிலேயே ஒரு கூட்டத்தை நடத்தினார்.
நியாயமான தொகுதி மறுவரையறை
அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களும் கலந்துகொண்டு தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டனர். ஃபேர் டிலிமிடேஷன்- நியாயமான தொகுதி மறுவரையறை அப்படிங்கறதுதான் அந்த கூட்டத்தின் முடிவு.
தொகுதி மறுவரையறையை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை. நியாயமான ஒரு டிலிமிடேஷன்- தொகுதி மறுசீரமைப்பு நடைபெற வேண்டும் என்பதுதான் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாக, தீர்மானமாக இருந்தது. அதில் கலந்துகொண்ட அத்தனை பேரும் அதில் ஒருமனதாக கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி, தேர்தல் நேரத்தில டிலிமிடேஷன் கொண்டு வரப்பட்டபோது, தேர்தல் உச்சத்தில் இருந்த அந்த நேரத்திலே கூட முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின், எங்களுக்கு தேர்தல் முக்கியம் இல்லை, தமிழ்நாட்டின் உரிமைகள் தான் முக்கியம், நாங்கள் பாதிக்கப்படக்கூடாது அப்படிங்கிற ஒரு முடிவோடு தொகுதி மறுவரையறைக்கு எதிரான அந்த பிரச்சாரத்தை கையில் எடுத்தார்கள்.

பாஜக மசோதாவை தோற்கடித்தவர்கள்
அதுமட்டுமல்ல தேர்தல் பணியில இருக்கக்கூடிய அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீங்க போய் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அத்தனை பேரையும் அனுப்பினார்.
பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அவர்கள் கொண்டுவந்த ஒரு மசோதா முறியடிக்கப்பட்டது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கங்கள் எதிர்த்த அந்த டிலிமிடேஷன் என்கிற மசோதாதான்.
இந்த அளவிற்கு தொடர்ந்து அதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களுடைய தொடர் கோரிக்கையாக இருக்கிறது.
கடந்த முறை தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது எங்களுக்கு எதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மிகத் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறோம்.
அந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது, தமிழ்நாட்டின் சதவீதம் எந்த காலகட்டத்திலும் மாறாது என்று உள்துறை அமைச்சர் வாய்மொழியாக நாடாளுமன்றத்தில் சொன்னார். ஆனால் மசோதாவில் அது இல்லை. அதனால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்தோம்.
மத்திய அரசு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை
இந்த பின்னணியில் தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா வரப் போகிறது என பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரைக்கும் ஒன்றிய அரசாங்கம் எங்களை அழைத்தோ, எதிர்க்கட்சிகளை அழைத்தோ பேசியதாக எங்களுக்கு தகவல் இல்லை.
ஒருவேளை ஒரு சில பேரிடம் பேசியிருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை இதுவரை அவர்கள் அழைத்து, இந்த மசோதாவை நாங்கள் மாற்றி அமைத்து தாக்கல் செய்கிறோம் என எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
மசோதா தாக்கல் இல்லை?
நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான வாய்ப்பு என்பதுதான் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய செய்தி.
தற்போது மசோதா கொண்டுவரப்படவும் இல்லை; அப்படியான மசோதாவில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலும் இல்லை. மசோதாவின் நகல் யாருக்கும் வழங்கப்படவும் இல்லை.

என்ன என்று தெரியாமலேயே ஆலோசனை கூட்டமா?
இப்படியான நிலையில் பழைய மசோதாவுக்கும் புதியதாக வரக் கூடும் என நினைக்கக்கூடிய மசோதாவுக்கும் என்ன பெரிய மாற்றம் இருக்க முடியும்? எதற்காக இன்று முதல்வர் விஜய் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்? யார் இந்த கூட்டத்திற்கு பின்னணியில் இருக்கிறார்கள்? யார் இவர்களை இந்த அரசாங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்?
தலைமை செயலாளரா? தவெக தலைமை நிலைய செயலாளரா?
ஒரு கூட்டம் நடத்துவதானால் ஒரு அரசாங்கம் கட்சித் தலைமைக்கு தான் கடிதம் எழுத வேண்டும். ஆனால் தலைமைச் செயலாளரோ, தனிப்பட்ட முறையில் எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்புகிறார். அப்ப தலைமைச் செயலாளர் யாருக்காக பணியாற்றி வருகிறார்? தமிழ்நாடு அரசாங்கத்திற்கா? தவெகவின் தலைமை நிலையச் செயலாளர் போல ஒவ்வொரு எம்.பி.க்கும் கடிதம் எழுதுகிறாரே தலைமை செயலாளர்.. இதுவே முறை இல்லாத செயல்.
எங்களுடைய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைத்தபோது கட்சியின் தலைவர்களுக்கு தான் கடிதம் எழுதினார். யாரை அனுப்புவது என்று கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதனால எம்.பி.க்களுக்கு தனியாக நீங்கள் கடிதம் எழுதுவது என்பதே முறை இல்லாத ஒன்று.
ஆகையால் எந்த தேவையும் இல்லாத நேரத்தில எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த எம்.பி.க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

மேகதாதுவை திசை திருப்பவே எம்.பிக்கள் கூட்டம்
மேகதாது பிரச்சனை மிக மோசமாக இருக்கிறது. விவசாயிகளுடைய பிரச்சனைகள், மேகதாது பிரச்சனையை திசை திருப்பக்கூடிய ஒரே எண்ணத்தோடு, அவங்க கூட்டணியில் இருக்கக்கூடியவர்களுக்கு (காங்கிரஸுக்கு) எந்தவிதமான சங்கடமும் வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு திசை திருப்புவதற்காக இன்று எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காகவே தொகுதி மறுவரையறை பிரச்சனையை எடுத்துள்ளனர். இவ்வாறு கனிமொழி கூறினார்.
செய்தியாளர்களின் கேள்விகளும் கனிமொழி பதில்களும்:
கேள்வி: தொகுதி மறுவரையே தேவையில்லை. தற்போதைய எண்ணிக்கையிலே இருக்கணும், எண்ணிக்கையை உயர்த்தவும் கூடாது, மக்கள் தொகை அடிப்படையிலும் வேண்டாம், 50%ங்கிறது வேண்டாம், மறுவரையே தேவை இல்லை, இந்த எண்ணிக்கையே இருந்தா போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்கான வாய்ப்பே எங்கே கிடைக்கல. 543 பேர் இருக்கும்போது 5 நிமிஷம் கிடைக்க மாட்டேங்குது, எண்ணிக்கையை உயர்த்தினா அதற்கான வாய்ப்பே இல்லை அப்படின்னு சொல்லி பல கட்சிகள் தெரிவிச்சிருக்காங்க.
கனிமொழி: நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் தான் நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுயேட்சையாக இருக்கக்கூடியவர்களுக்கு தான் பேசுவதற்கு நேரம் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதை எல்லாம் ஒரு காரணமாக சொல்லக் கூடாது. திமுகவைப் பொறுத்தவரை தொகுதிகளை மறுவரையறை செய்துதான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை.
நாங்க கேட்கக்கூடிய ஒன்றே ஒன்று, 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று. அதுதான் எங்களுடைய தொடர் கோரிக்கையாக இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு கொண்டுவந்தால் நமக்கு மிகப்பெரிய முக்கியமா தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பு இருக்கும். அதனால் மக்கள் தொகை அடிப்படையிலே அதை கணக்கீடு செய்யக்கூடாது என்பதுதான் நாங்கள் வலியுறுத்துவது. தமிழ்நாட்டிற்கு எந்த விதத்திலும் பிரதிநிதிகளுடைய எண்ணிக்கை குறைந்து விடக் கூடாது என்கிறோம். நாம் மக்கள் தொகையை குறைத்துவிட்டதற்காக பழிவாங்கக் கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்துடைய வலியுறுத்தல்.

ராகுல் காந்தியுடன் பாஜக பேச்சுவார்த்தை
கேள்வி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் போன்ற தலைவர்கள், “தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுகவை பாஜக அழைத்து பேசியிருக்கிறது”ன்னு சொல்றாங்க?
கனிமொழி: பாஜக எல்லோரையும் தான் அணுகி இருக்கிறார்கள். . எனக்கு வந்த செய்தி, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரடியாக சென்று சந்தித்தார் என்பது.
ஒரு மசோதாவை சுமூகமாக நிறைவேற்ற வர அனைத்து கட்சிகளின் தலைவர்களிடம் பேசுவது வழக்கம்.
அதே நேரத்தில் கடந்த முறை தோற்கடிக்கப்பட்ட மசோதாவை மறுபடியும் கொண்டு வருகிறோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை இதுவரை யாரும் அழைத்து பேசவில்லை.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதாவை கொண்டு வரும் வாய்ப்பு இல்லை என்பதுதான் எங்களுக்கு வந்துள்ள செய்தி.
தற்போதைய நிலையில் மசோதாவும் இல்லை – மசோதாவில் என்ன திருத்தங்கள் என்பதும் தெரியவில்லை. மசோதாவின் நகலும் சுற்றுக்கு விடப்படவில்லை. அதனால் முதல்வர் விஜய் எதற்காக இந்த கூட்டத்தைக் கூட்டினார்? இந்த அரசாங்கத்தை யார் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்?
யார் எட்டப்பர்கள்? என தமிழருக்கு தெரியும்
கேள்வி: தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்று ராகுல் காந்தி சொல்லி இருக்கிறாரே?
கனிமொழி பதில்: யார் எட்டப்பர்கள், யார் எட்டப்பர்கள் இல்லைன்னு தேர்தல் முடிவுக்கு பிறகு யார் யார் எப்படி நடந்துகிட்டாங்கிறதை பார்த்து மக்களுக்கு மிகத் தெளிவாக தெரியும்.
யார் எட்டப்பர்கள் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும், யார் முதுகில் குத்தியவர்கள், யார் வந்து நேர்மையாக மக்களோட அரசியல் செய்கிறார்கள்ன்னு தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
கேள்வி: திமுக- அதிமுக இரண்டும் இன்றைய எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; புதிய நட்பு உருவாகி இருக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் சொல்லி இருக்கிறாரே?
பதில்: மேகதாது விஷயத்திலும் திமுக அதிமுக ஒரே கருத்துதான் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு தொடர்பான பல விஷயங்களில் ஒரே கருத்தைதான் கொண்டிருக்கிறோம். தற்போதைய தவெக அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களையோ பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துக் கொண்டு போய் நீர்வளத்துறை அமைச்சரையோ மற்ற அமைச்சர்களை சந்தித்தால் திமுகவும் உடன் வரும்.
இன்றைய தவெக அரசின் எம்.பி.க்கள் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? திசை திருப்புவது தவிர வேற எனக்கு எதுவும் தெரியவில்லை.
கூட்டம் முடிந்தும் தீர்மானம் வெளியிடவில்லையே? முதல்வராவது வெளியே வந்து என்ன நிலைப்பாடு என சொன்னாரா? என்ன நோக்கம்னு எங்களுக்கும் தெரியலை.. அவங்களுக்கே தெரியுமான்னும் தெரியவில்லை.
சட்டசபையில் தீர்மானமா?
கேள்வி: சட்டசபையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரப் போகிறார்கள் என்கிறார்களே
கனிமொழி: ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபையில் இதே போல தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே.. அனைத்து கட்சி ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிராகரித்துவிட்டு புதிய தீர்மானம் கொண்டு வரப் போகிறீர்களா? அதற்கும் இப்போது கொண்டுவருவதாக சொல்கிற தீர்மானத்துக்கும் என்ன வித்தியாசம்?
கேள்வி: காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி, பாஜக மீதான பயத்தால் திமுக கலந்து கொள்ளவில்லை என்கிறாரே?
கனிமொழி: தேர்தல் நேரத்தில திமுகவும் காங்கிரஸும் ஒன்றாக இருக்கக் கூடாது என நினைத்த சில பேர், “யாருக்காக அதையெல்லாம் செய்தார்கள்” என்ற கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது; அதற்கான பதில்கள் இன்னும் கிடைக்கவும் இல்லை. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
