39 தொகுதிகளைக் காப்பதே முதன்மை : முதல்வர் அழைத்த கூட்டத்துக்கு பின் மாணிக்கம் தாகூர் – சு.வெங்கடேசன் பேட்டி!

Published On:

| By Kavi

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 8) தமிழக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக, பாமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், ”

கடந்த எப்ரல் 16-ஆம் தேதி இந்த தொகுதி மறுவரையறை திருத்தத்தை எப்படி தோற்கடித்தோமோ அதுபோல இந்த முறையும் ஒற்றுமையோடு இருந்து தமிழகம் ஒரே குரலில் ஓட்டு போட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.எங்களைப் பொறுத்தமட்டில், 543 தொகுதிகளையும் , தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளையும் பாதுகாக்க வேண்டும். பாஜக பல ஏமாற்று வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. 

ADVERTISEMENT

‘50% கூட்டுவோம், 60% கூட்டுவோம்’ என்று ஆஃபர் கதை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த ஆஃபரில் ஏமாந்துவிடாமல் இருக்க வேண்டும். ஆஃபரில் ஏமாந்த கட்சிகள் வரலாற்றில் என்றைக்கும் மறக்கப்பட மாட்டாது.

இந்தக் கூட்டம் என்பது மிகப்பெரிய துவக்கம். தமிழக முதலமைச்சர் விஜய் எடுத்திருக்கக்கூடிய இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். எங்களைப் பொறுத்தமட்டிலும், தமிழகத்திற்கு எந்த விதத்திலும் துரோகம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்களுடைய வேலை” என்று கூறினார். 

ADVERTISEMENT

அவரிடம் ”திமுக, அதிமுக இந்த கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார்கள். 50 சதவிகிதம் சரிசமமாக உயர்த்துவது, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பங்கான 7.18 சதவீதத்தை மாற்றம் செய்யக்கூடாது. அப்படியென்றால் இது ஃபேர் டிலிமிட்டேஷனாக இருக்கும் என்று அதிமுக, திமுக கூறுகிறதே” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர்,

”இது தவறான புரிதல். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டிலும், ஒரு ‘ஃபேர் டி-லிமிடேஷன்’ (Fair Delimitation) கிடையாது. தமிழ்நாட்டை ஏமாற்றுவதற்கான வேலை.  இந்த சதியில் ஏமாந்துவிடக் கூடாது. ‘ஃபேர் டி-லிமிடேஷன்’ என்கிற ஒரு வேலையே கிடையாது. டி-லிமிடேஷனே ஒரு பெரிய கிம்மிக். தமிழகத்தினுடைய அதிகாரத்தைப் பிடுங்குவதற்காக நடக்கின்ற சதி. தமிழகத்துக்கான 39 இடங்களை காப்பாற்றுவது மிக முக்கியம். 

மோடியும் அமித் ஷாவும் தமிழ்நாட்டுக்கு எப்பொழுதுமே ஃபேரான டி-லிமிடேஷன் கொடுக்கப் போவதில்லை. அவர்கள் ஒரு ஃபேக்கான டி-லிமிடேஷன் தான் கொடுக்கப் போகிறார்கள்” என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய சு.வெங்கடேஷன் எம்.பி, ”தொகுதி மறுவரையறை சம்பந்தமாக 42-வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் 1976-லேயே கொண்டுவரப்பட்டது. 84-வது சட்டத் திருத்தம் 2001-ல் கொண்டுவரப்பட்டது. அது வருகிற டிசம்பரோடு காலாவதியாகப் போகிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாடு, தென் மாநிலங்களின் உரிமைகள், அதிகாரத்தினுடைய வலிமை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொடர்ந்து நாம் முயற்சி செய்து வந்தோம்.

கடந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான ஆட்சியில் மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தச் சூழலில் ‘ஃபேர் டி-லிமிடேஷன்’… நம்முடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட தீர்மானமாக நிறைவேற்றினோம்.

அதற்குப் பின்பு, ஏப்ரல் 16-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டுவந்தபொழுது – அரசியல் சாசனத்தின் 131-வது சட்டத் திருத்தம் கொண்டுவந்தபொழுது – உள் துறை அமைச்சர் சட்டத்தை முன்வைத்து உரையாற்றுகிற பொழுது- ‘அனைவருக்கும் 50% உயர்வு… அனைத்து மாநிலங்களுக்கும்’ என்று சலுகையைப் போல ஒரு விஷயத்தைச் சொன்னார். சட்டத்தில் அது இல்லை. ஆனாலும், சட்டத்தை நாம் முறியடித்தோம்.

அவர் அன்றைக்குச் சொன்ன அந்த ஆசை வார்த்தை, இன்றைக்கு மீண்டும் சட்ட வடிவம் பெறப்போகிறது என்ற செய்தியை நாடு முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும். எனவே அது ஒரு ஏமாற்று வேலை.

ஏனென்றால், ‘ஃபேர் டி-லிமிடேஷன்’ என்பது ‘நோ டி-லிமிடேஷன்’தான். அதான் ஃபேர் டி-லிமிடேஷன்.

ஏற்கனவே 1976-ஆம் ஆண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டபொழுதே தமிழ்நாட்டிற்கு ஒரு இழப்பு ஏற்பட்டது. அதாவது, இரண்டாவது தொகுதி மறுவரையறைக் குழு இந்தியா முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 522-லிருந்து 542 ஆக உயர்த்தியபொழுது, தமிழ்நாட்டினுடைய எண்ணிக்கை 41-லிருந்து 39 ஆகக் குறைந்தது. நமக்கு ஏற்கனவே ஒரு அநீதி இழைக்கப்பட்டிருந்தது. அந்த அநீதியை பெரிய வடிவமாக்கினால் நீதி கிடைத்துவிடாது.

அதுமட்டுமல்ல, இந்த 850… அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு என்று வந்தாலும், அடுத்து அரசியல் சாசனத்தினுடைய 82(1A)-ல் மீண்டும் சென்சஸின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்ற மிகப்பெரிய ஆபத்திலே போய் மாட்டும்.

எனவே, இப்போது இருக்கிற நிலைமை… அதே 543 என்ற எண்ணிக்கையும், மாநிலங்களுக்கான அதே எண்ணிக்கையும் தொடர வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் இன்றைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கின்றோம். இன்றைக்கு அனைவருமாக அந்தச் சிந்தனையில் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம். .

சட்டமன்றத்திலும் இது சார்ந்த தீர்மானத்தைக் கொண்டுசெல்கிறோம் என்றும் முதல்வர் தெரிவித்திருக்கிறார்” என்றார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share