தொகுதி மறுவரையறையே கூடாது.. விஜய் நடத்திய எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்- திருமாவளவன்

Published On:

| By Mathi

No need for delimitation: Resolution passed in Vijay's MP meeting - VCK Thirumavalavan

தொகுதிகளை மறுவரையறை (Delimitation) செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் விஜய் நடத்திய தமிழக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக சென்னையில் இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி தமிழக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் விஜய் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீமவின் 37 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் மட்டும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது: நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் அழைப்பை ஏற்று காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் சார்பாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் சார்பாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றோம்.

ADVERTISEMENT

ப.சிதம்பரமும் அவர்களும் இதிலே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் சார்பாக பேசினோம். நிறைவாக முதலமைச்சர் விஜய் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறோம். ”நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறையைக் கைவிட வேண்டும். இப்போதுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்பது தொடர வேண்டும். மாநிலங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கையும் தொடர வேண்டும். அதாவது தமிழ்நாட்டில் 39 எம்பிக்கள் இருக்கிறோம் என்றால் அந்த எண்ணிக்கை தொடர வேண்டும்” என்கிற இந்த ஒரே கருத்து இந்தக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

அனைத்து மாநிலங்களுக்கும் 50% அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தலாம் என்கிற எண்ணமோ, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்கிற நிலைப்பாடோ கூடாது என்பதுதான் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிற தீர்மானம்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்தோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூடுதலாக சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்.

மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இன்றைக்கு இருக்கிற நிலையை மாற்றி சமமான எண்ணிக்கையைக் கொண்டுவருவதற்கு ஏற்ப அரசமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தோம்.

அதேபோல தனித்தொகுதிகளுக்கான சுழற்சி முறையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். இதை தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்கிற கருத்தையும் முன்வைத்திருக்கிறோம்.

சட்டமன்றத்திலும் இந்த தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற வேண்டுகோளையும் வைத்திருக்கிறோம்.

தொகுதி மறுவரையறையே கூடாது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 அப்படியே இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் நீண்ட காலமாக 50 மாநிலங்கள் இணைக்கப்பட்ட பிறகும்கூட 13 மாநிலங்களாக இருந்தபோது தொகுதிகளின் எண்ணிக்கை எப்படி இருந்ததோ அதே எண்ணிக்கைதான் இருந்தது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக அந்த எண்ணிக்கையை அப்படியே அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இந்தியாவுக்கும் பொருந்தும். தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும். யாரும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையில் கருத்துக்களைக்கூட பகிர்ந்து கொள்ள முடியாது.

எனவே தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணத்தை முற்றாக கைவிட்டு 543 என்கிற எண்ணிக்கை தொடர்வதற்கு இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநிலம் வலியுறுத்துகிறது என்பதை இந்தக் கூட்டத்தில் உறுதி செய்துள்ளோம். இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share