மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன? என்று திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக திமுகவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: தொகுதி மறுவரையறையினால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை முதன்முதலில் வலியுறுத்தியது தி.மு.க.தான். தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு உணர்த்தும் வகையில் 5-3-2025 அன்று அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதற்கானத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுடமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்ததுவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக்கூடாது
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இருந்ததில்லை. அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளாக சமூகப் பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தியதற்கானத் தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்து விடக்கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று இவற்றுக்கு ஒப்புதல் அளித்த கட்சிகளின் எம்.பி.க்கள்தான் தற்போதைய முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மேலும், அன்றைய கூட்டத்தில் த.வெ.க சார்பில் அதன் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பங்கேற்று ஒப்புதலளித்துள்ளார்.
தி.மு.க. எப்போதும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. த.வெ.க. இந்த நிலைப்பாட்டை ஏற்கிறதா, தீர்மானங்களில் மாற்றம் செய்ய நினைக்கிறதா? ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறையை தவெக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? என்பதை முதலமைச்சரும் அமைச்சர்களும் வெளிப்படையாக விளக்குவார்களா? இவ்வாறு திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
