விஜய் அழைப்பு- திமுக கூட்டணி, அதிமுக, பாமக.. 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பா?

Published On:

| By Mathi

Vijay's Call: DMK Alliance and AIADMK's 36 MPs Boycott?

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக கூட்டணி மற்றும் அதிமுகவின் மொத்தம் 36 எம்.பி.க்கள் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் விஜய் அழைப்பு

”மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசித்துக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையரைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் புதுதில்லியுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

திமுகவின் நிபந்தனை

இந்தக் கூட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் தி.மு.க. இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.

ADVERTISEMENT

நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே தி.மு.க.வும் எங்கள் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும்தான் என்பதை நாடறியும்.

சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம்.

ADVERTISEMENT

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான்; தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்ப்பதுதான் எங்களது முதல் பணி” எனப் பிரகடனம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள இல்லங்களின் முன் கருப்புக் கொடியேற்ற அழைப்பு விடுத்து, அந்தச் சட்டமுன்வரைவின் நகலை எரித்து எதிர்ப்புக் காட்டியவர்தான் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.

ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசிடம் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைக்கிறது.

புதுக் கூட்டாளியான காங்கிரசின் மனம் புண்படும் என்பதால் மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது!

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது; பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகதாது அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் எம்.பி. எல்.கே.சுதீஷ் தாம் டெல்லியில் இருப்பதால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளதாகவும் மநீம தலைவர் கமல்ஹாசன் வெளிநாட்டில் இருப்பதால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் திமுக கூட்டணியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மொத்தம் 32 பேரும் முதல்வர் விஜய்யின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக புறக்கணிப்பு?

இதேபோல மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவும் இன்றைய முதல்வர் விஜய்யின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் என கூறப்படுகிறது.

தமிழகத்தின் மொத்தம் 57 எம்.பி.க்களில் திமுக கூட்டணி, அதிமுகவின் 36 எம்.பி.க்கள் இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கக் கூடும் என தெரிகிறது.

சிபிஎம் சண்முகம் வேண்டுகோள்

அதேநேரத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு காவிரி, மேகதாது அணை ஆகிய பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இது குறித்து விவாதிக்க, தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதேபோல், “தொகுதி மறுவரையறை” தொடர்பான பிரச்சினையும் மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் எக்காரணம் கொண்டும் குறைவதை அனுமதிக்க முடியாது.

ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலங்கள் பலனடைய வேண்டுமே தவிர, பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது.

இதில் தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தை ஒன்றிய அரசுக்கு வெளிப்படுத்தும் விதமாக, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டியுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை. எனவே, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

இதேபோல விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யும், அனைத்து கட்சி எம்.பி.க்களும் முதல்வர் விஜய்யின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் பாராட்டு

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி, “கடந்த 12 ஆண்டுகளில் 5 முதலமைச்சர்களை எம்பியாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், முதல்முறையாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து, கட்சி வேறுபாடு இன்றி ஆலோசனை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்திருக்கும் இந்த சிறப்புமிக்க முடிவை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

மத்திய பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்நாடு ஒரே குரலாக டெல்லியில் ஒலிக்க அனைவரும் இணைந்து நிற்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையுடன், அழைப்பு இந்த நல்ல மரபு தொடரட்டும்” என ஆதரவு தெரிவித்துள்ளார்.

அன்புமணி பங்கேற்பாரா?

முதல்வர் விஜய்யின் இந்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, “காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து திமுகவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளதான் முதல்வர் விஜய் தலைமையிலான எம்.பி.க்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது” என விமர்சித்துள்ளார். இதனால் அன்புமணியும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share