மத்திய பாஜக அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை (FCRA) திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன் தலைமையில் சிறுபான்மையின அமைப்புகளின் குழு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த 6-ந் தேதி சந்தித்தது.

அப்போது, மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா 2026-ஐ (FCRA Amendment Bill 2026) திரும்பப் பெற வேண்டும் அல்லது மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்; மேலும் எஃப்சிஆர்ஏ பிரிவின் 15-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள விதிகள், பல்வேறு வகையில் தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன; அதனால் தொடக்கம் முதலே இந்த மசோதாவை திமுக எதிர்க்கிறது.
ஆகையால் சிறுபான்மையினரின் உரிமைகளின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
