முதல்வர் அழைத்த எம்.பி.க்கள் கூட்டம்… கேலிக்கூத்து :  ஆ.ராசா சாடல்!

Published On:

| By Kavi

தொகுதி மறுவரையறை குறித்து என்னவென்றே தெரியாதவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள். இது கேலிகூத்தாக இல்லையா என்று திமுக எம்.பியும் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். 

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். 

ADVERTISEMENT

இந்த கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,  ”தமிழ் நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?

CauveryIssue-க்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.

ADVERTISEMENT

உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் பெரம்பலூரில்,  திமுக எம்.பி. ஆ.ராசாவிடம்,  ”எம்.பி.க்களே இல்லாத கட்சி இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர்,  ”எம்.பி.க்கள் இல்லை என்றாலும் கூட்டத்தை கூட்டலாம். ஆனால் தொகுதி மறுவரையறை  என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டத்தை கூட்டுவதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது. இதெல்லாம் நியாயமா… சிரிப்பாக இல்லையா உங்களுக்கு” என்று விமர்சித்துள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share