தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம கட்சிகளின் மொத்தம் 37 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளின் 19 எம்.பி.க்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசித்துக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையரைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது (ஆகஸ்ட் 8) நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியின் திமுக, தேமுதிக மநீ கட்சிகளின் 32 எம்.பி.க்கள், அதிமுகவின் 4 எம்.பி.க்களுடன் பாமகவின் ஒரே எம்.பியான அன்புமணியும் பங்கேற்கவில்லை. தமிழகத்தின் மொத்தம் 57 எம்.பி.க்களில் 37 பேர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 12, விசிக 2, சிபிஐ2, சிபிஎம் 2, மதிமுக-1, முஸ்லிம் லீக்-1 எம்.பி.க்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சுதா எம்.பி. இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தற்போதைய நிலையில் மொத்தம் 19 எம்.பி.க்கள் மட்டுமே முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
