முதல்வர் விஜய் கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? முடிவு என்ன?

Published On:

| By Mathi

Delimitation Issue: What was the decision in the TN MPs meeting convened by Vijay?

மத்திய பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் விஜய் நடத்திய தமிழக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன்; காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ எம்.பி சுப்பராயன், சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன், முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி, மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில்

ADVERTISEMENT
  • இந்திய தேசிய காங்கிரஸ் (11)
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2)
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2)
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2)
  • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1)
  • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

எம்.பி.க்கள் முன்வைத்த கருத்துகள் என்ன?

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் நாடாளுமன்றத்தில் பேசுக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது எனவும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினார்.

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கப்படவில்லை எனவும் கூறினர்.

தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் பாதிக்கும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துத் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த ஒன்றிய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

தொகுதி மறுவரையறை ஆணையம்

மேலும், 2026-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2)(a)-ன் கீழ் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், சட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. இந்த அதிகாரம் குறித்து நாடாளுமன்றத்திற்கே இறுதிசெய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

50% வரை உயர்த்துவது திசை திருப்பல்

அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர்.

மாநிலங்கள் பிரதிநிதித்துவம் பாதிப்பு

இந்தக் கூட்டத்தின்போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுமென்பதால், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மேலும், தற்போது மக்களவை : மாநிலங்களவையினுடைய விகிதம் 2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் எதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்தனர்.

கூட்டத்தின் முடிவு என்ன?

இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

முதல்வர் விஜய் வேண்டுகோள்

கூட்டத்தின் இறுதியில், முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் பாதிக்கும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துத் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share