GPay, PhonePe, Paytm மூலம் பணம் செலுத்தினால் சேவை கட்டணத்தையும் நுகர்வோர் செலுத்த வேண்டும் என்கிற தகவல் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தது.

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணமா?
சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள், “எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள்; வங்கிகளுக்கு அலைய வேண்டாம்” என்றார் பிரதமர். தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இருந்தார். பொதுமக்கள் மீதான அக்கறை என்று கருதினோம்.இப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய அரசு.
மோடி எதைச் சொன்னாலும் அதில் மக்கள் நலன் கடுகளவும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற யோசனையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனவும் வலியுறுத்தி இருந்தன.
அதுவும் ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது பெரும் அநியாயம் என்றும் இடதுசாரி கட்சிகள் விமர்சித்திருந்தன.

டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம் இல்லை- பாஜக
ஆனால் பாஜக, “மோடி தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2016-ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, சாமானிய மக்கள் UPI மூலம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன. வரும் காலங்களிலும் சாமானிய மக்களிடமோ அல்லது சிறு கடைக்காரர்களிடமோ ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கப்படாது என்பதே உண்மை.
உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை அமைப்பான UPI-ன் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தமே தவிர, இது சாமானிய மக்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.
வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், இது குறித்து நிபுணர் குழு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவெடுக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் யுபிஐ மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் விளக்கம்
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள விளக்கம்:
GPay, PhonePe, Paytm போன்ற யுபிஐ (UPI Unified Payments Interface) செயலிகள் மூலமான பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இலவசமாகவே தொடரும்.
யுபிஐ செயலி வாயிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
தனிநபர்களுக்கு இடையேயான அனைத்துப் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும்.
வர்த்தகர்களுக்கான குறைந்தபட்ச தள்ளுபடி விகிதம் தொடர்பான கட்டண விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், அவை குறிப்பிட்ட வரம்பிற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் இந்தக் கட்டண விகிதம் மிகக் குறைவாகவும், பற்று அல்லது கடன் அட்டைகளுக்கான குறைந்தபட்ச விகிதம், கட்டணங்களை விட பல மடங்கு குறைவாகவும் இருக்கும்.
யுபிஐ செயலியில், வணிகர்களுக்கான பெரும்பாலான பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். குறைந்தபட்ச வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது குறிப்பிட்ட வரம்பின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும், அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பொதுவான கட்டணமாக விதிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பணப் பரிவத்தனைகள், தீர்வு அமைப்புகள் சட்டம், 2007′-ன் பிரிவு 10 ஏ -வை திருத்துவதற்கான வரிவிதிப்பு, பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026′-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிறகு, குறைந்தபட்ச கட்டணம் ஏதேனும் விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தேசிய பரிவத்தனைக் கழகம் தலைமையிலான யுபிஐ சேவைகள் வழிநடத்தல் குழு முடிவெடுக்கும்.
மேலும் இது தொடர்பான கொள்கை மாற்றங்களுக்குப் பின்னணியில் அதன் தாக்கங்கள் இருக்கலாம் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆதாரமற்றது, முற்றிலும் பொய்யானது மற்றும் தவறான வழிகாட்டுதல் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஜூலை 2026 மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 2,366 கோடி பணப் பரிமாற்றங்கள் ரூ. 29.9 லட்சம் கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது 11 வெளிநாடுகளில் யுபிஐ நடைமுறையில் உள்ளதுடன், பல நாடுகளும் இதனைப் பெற ஆர்வம் காட்டி வருகின்றன.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல், நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் NPCI வழங்கும் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
