விஜய் அரசுக்கு எதிராக ஆக.14-ல் அதிமுக போராட்டம்- தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

Published On:

| By Mathi

AIADMK to hold Protest on August 14 Against Vijay's Govt.

விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் மேகதாது அணை பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 14-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: 2026, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவீகிதம் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.

மேற்கண்டவாறு, பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்தும், அனைத்துந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்துந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.

ADVERTISEMENT

எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சினையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்துந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 – வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை ஏற்க உள்ளேன்.

விவசாயிகள் நலனை முன்னவைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share