மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பது போல சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எஃப்சிஆர்ஏ (FCRA) மசோதாவையும் தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய உள்ள, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (08.08.2026) மதியம் 3 மணியளவில், கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கலந்துகொண்டேன்.

மிகக்குறிப்பாக, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவில் உள்ள பாதகங்களை அலசி ஆராய்ந்தோம். அதை நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதித்தோம்.
எல்லா மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தாலும், குறிப்பாக அதனால் தமிழ்நாட்டிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படவுள்ள பாதகங்களை மிக விரிவாக எடுத்துரைத்து, அதை நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்.
அத்துடன், சிறுபான்மை மக்கள் முதல்வர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள, வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறினேன்.
தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசும், தோழமை கட்சிகளும் வலுவாய் எதிர்ப்போம் என்று ஒருமித்த குரலோடு, இரண்டு மணிநேரம் தொடர்ந்த இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது.
தமிழ்நாடு மாநில உரிமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தனது தலைமையிலான தமிழ்நாடு அரசு முழுமையாக எதிர்க்கும் என்றும், அதற்கான தீர்மானத்தை எதிர்வரும் நாட்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். இவ்வாறு துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
