புதுவை: அமித்ஷா நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்

Published On:

| By Mathi

Police Personnel Faint During Amit Shah’s Event in Puducherry

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து காவலர்கள் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாலை சென்னை வருகை தந்தார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் திருவண்ணாமலைக்கு சென்றார்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்த அமித்ஷா, பின் ரமண மகிரிஷி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அமித்ஷா, நேற்று இரவு புதுச்சேரி சென்றடைந்தார்.

இது பற்றி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூஜை செய்தேன். நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுமாறு பகவான் மகாதேவனின் ஆசீர்வாதங்களை வேண்டி பிரார்த்தனை செய்தேன்.

ADVERTISEMENT

ஞானி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கையும் போதனைகளும், மனிதகுலத்தின் பாதையை என்றென்றும் ஒளிரச் செய்யும் ஞான ஊற்றாகும். தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள புனித தலமான ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு சென்றேன். அந்த மகான் அவர்களின் ஆசிகள் அனைவருக்கும் நல்வாழ்வையும் செழிப்பையும் வழங்கட்டும்” என கூறியிருந்தார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய அமித்ஷா இன்று காலை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி காவல்துறையினருக்கான ”ஜனாதிபதியின் வண்ண கொடி” விருதை மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது கடுமையான வெயிலின் தாக்கத்தால் காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share