400 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை நீக்குவதா? இபிஎஸ் மீது எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்!

Published On:

| By Mathi

AIADMK: SP Velumani, Natham Viswanathan Criticize EPS

அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. அதிமுகவின் அதிருப்தி தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அ.தி.மு.கழகத்தில் கழகப் பொதுச்செயலாளராக நீங்கள் கழகத்தை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், இருவேறு கருத்துக்கள் காரணமாக 47 கழக சட்டமன்ற உறுப்பினர்களில், 25 கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவை சுட்டிக்காட்டி மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கை வழியில் தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ADVERTISEMENT

மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசீனப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

அன்று டிடிவி தினகரனுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்று நிராகரித்தீர்கள். 2019-ல் அ.தி.மு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள்.

ADVERTISEMENT

2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் செய்வதாக கூறிய போதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள்.

அது மட்டுமில்லாமல் உங்களுடைய இந்த தவறான முடிவால் பல கழக வேட்பாளர்கள் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள்.

ADVERTISEMENT

அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், ஒரு மாத காலம் அதை உறுதி செய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம்.

இப்படி தேடிவந்த பா.ஜ.க., பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள்.

அதுபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள்.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையிலிருந்து மீண்டுவரமாட்டோமா? என ஏங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்து வந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்கள், தாங்கள் தன்னிச்சையாக சுயநலத்தோடு தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தங்களை தமிழக முதலமைச்சராகவும், கழகப் பொதுச்செயலாளராகவும் அமர வைத்த கழகத்தின் மூத்த முன்னோடிகளை வெளியேற்றியும், புறக்கணித்தும், தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் முன்னெடுப்பதில் கழக முன்னோடிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதால், கழகத்தினர் கடும் வேதனையோடும், துயரத்தோடும் மாற்றுக் கட்சியில் கூட்டம் கூட்டமாக தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கழகம் தொடர்ந்து பலவீனப்பட்டு வரும் இந்த சூழ்நிலையிலும் சிறப்பாக கழகப் பணிகளில் செயல்பட்டு வந்த கோவை, திருப்பூர், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், தென்காசி, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள், எந்தவித காரணங்களுமின்றி கழக பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு புதியவர்களை நியமித்து வருவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இது கழகத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.

கழகப் பொதுச் செயலாளராகிய தாங்கள் கழக செயற்குழு, பொதுக்குழுவில் தங்களது கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்க கூடாது என்று செயற்குழு, பொதுக்குழுவில் அனைவரின் பொதுவான கருத்தை வெளிப்படுத்தவும், தங்களது செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் கழகம் எந்த நிலைக்கு தாழ்ந்தாலும் நான் சொல்லுவதை மட்டும்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கழக சட்டத்திட்டங்களுக்கு முரணாக கழகத்திலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள்.

தங்களால் நீக்கப்பட்டவர்கள் கழகம் தொடங்கப்பட்ட 1972 ம் ஆண்டு முதல் கழகப் பணியாற்றியவர்கள்- எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அவர்களின் விசுவாசிகள், காலம் காலமாக, கழக வளர்ச்சிக்காக சிறை சென்று, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டும், கழகம் சந்தித்த அனைத்து பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவர்கள்.

குறிப்பாக 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தந்ததும், கழக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கும் காரணமானவர்கள் ஆவார்கள்.

மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தெய்வங்களான தலைவர்களின் மீதும், கழகத்தின் மீதும் மாறாத பற்றும் விசுவாசம் கொண்டவர்கள் கழகம் சோதனை காலத்தை எதிர் கொண்ட போதெல்லாம், தங்களோடு பயணித்தவர்கள். கழக வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்கள் என்பதை எல்லாம் மறந்துவிட்டு கழகத்தை பலப்படுத்தும் வகையில், கழக பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்கப்படும் நடவடிக்கைகளை கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் மேலும் தொடரக்கூடாது.

கழகத்தின் நலன் கருதி இதுவரை பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டும்.

உங்களை தமிழக முதலமைச்சராக்கிய சசிகலா மற்றும் அண்ணன் டிடிவி தினகரன் ஆகியோரையும் கழகத்திலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் சேர்ந்தாலும் கூட அவர்களிடம் பேசி கழகத்தில் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டு 8 மாதம் இருக்கிறது, ஆனால் உள்ளாட்சி தேர்தல் 6 மாதத்தில் வர உள்ளது, இதில் கிளை கழக செயலாளர் மற்றும் அடிமட்ட தொண்டன் வரை உள்ளாட்சி பதவிக்கு வருவார்கள், இது ரொம்ப முக்கியமானதாகும். இதற்கு கட்சியை பலப்படுத்தியே ஆக வேண்டும்.

நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும், கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகள் குறித்தும் கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டத்திற்கு மாநில, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், அழைக்கப்படுவதில்லை.

சில மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மாநில, மாவட்ட, ஒன்றியங்களில் சிறப்பாக கழகப் பணியாற்றுபவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? அவர்கள் கலந்து கொள்ளாத வகையில் பொறுப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றனர்.

அ.தி.மு.கழகத்தினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல உண்மையான அக்கறையும், ஈடுபாடும் இருக்குமேயானால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மறப்போம், மன்னிப்போம் என்கிற அடிப்படையில் கழக நலன் கருதி கழகத்தினரிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படும் பொழுது அவற்றை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் 13.05.2026க்கு பிறகு கழகத்தின் பல்வேறு நிலைகளில் இன்று வரை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், கழகத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை வழங்கி கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், கழகத்தை வலுப்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share