திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று (ஆகஸ்ட் 3) எம்.எல்.ஏ. அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது, “அதிமுக சார்பில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சிக்காகவும், அதிமுக ஆட்சி அமைவதற்காகவும் உழைத்தவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். மேலும், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் வருவதற்காக உழைத்தவர்களையும் இணைக்க வேண்டும் எனக் கோரினோம். ஆனால், அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த தேர்தல் தோல்வி குறித்துக் கட்சிக்குள் உரிய ஆய்வு நடத்தப்பட வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என அதிமுக தலைமைக்குக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை பொதுச்செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தினமும் கட்சியில் இருந்து தொண்டர்கள் நீக்கப்படுகின்றனர். வரவிருக்கும் காலங்களில் கட்சியைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைத்து அவர்களுக்கும் உரிய பொறுப்புகளை வழங்க வேண்டும். எங்களுக்கும் முன்பு இருந்தது போன்ற பொறுப்புகளை வழங்கினால் நாங்களும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று ஏற்கனவே தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தோம். அந்த நிலைப்பாட்டில் தற்போதும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
