காவிரி நதிநீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறதா? என்பதே தெரியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: முதல்வர் விஜய்யின் தமிழக அரசு, காவிரி நதிநீரைப்பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதே தெரியவில்லை.
காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டினுடைய நிலைமையை தெரிவிக்க, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து பேசி கருத்துக்களைக் கேட்க வேண்டும்; காவிரி டெல்டா மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு முக்கிய விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களுடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்கிறோம்.
அதேபோல மூத்த சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து காவிரி நதிநீர் பிரச்சனைக்கும், மேகதாது அணை பிரச்சனைக்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்று நான் வலியுறுத்தி இருக்கிறேன்.
ஆனால், இந்த அரசு அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை; இதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. இது மிகுந்த வேதனையளிக்கிறது.
இதற்கு முன்னர் அதிமுக, திமுக ஆட்சிகளில் காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது பிரச்சனை ஆகியவற்றுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவசாய சங்க பிரதிநிதிகளுடைய கூட்டத்தைக் கூட்டி அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, சட்ட வல்லுநர்கள் மூலமாக சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்திலே சந்திப்பதுதான் நடைமுறை. அப்படித்தான் கடந்த காலங்களில் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளன.
அப்படி பெற்ற தீர்ப்பைக் கூட இந்த அரசு காப்பாற்ற முடியாத ஒரு நிலையிலே இருக்கின்றது என்பதுதான் வேதனை தருகிறது.
கர்நாடகா அரசு, மாநில அரசியல் கட்சித் தலைவர்களை மதிக்கிறது; விவசாயிகளை மதித்து செயல்படுகிறது; இங்கு இருக்கிற அரசாங்கம் செயல்படுகிறதா என்பதே கேள்விகுறியாக இருக்கிறது.
இந்த அரசாங்கத்திற்கு எந்த அனுபவமுமே கிடையாது. கட்சி தொடங்கியே 2.5 வருஷம்தான் ஆகிறது.. இவர்களுக்கு காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி எல்லாம் முழுமையாக எதுவுமே தெரியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
