‘கலைஞர் பற்றி அவதூறு பேசினால்..’ அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக பகிரங்க எச்சரிக்கை!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டை, காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய், இன்னும் சொல்லப்போனால் விவசாயிகளின் துரோகி விஜய். விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி என திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. தற்போதும் அதே விஷயத்தை திமுக தொடர்கிறது என்றார்.

ADVERTISEMENT

இது குறித்து திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் எங்கெல்லாம் மைக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்கிறார். காவிரி நீர் பிரச்சனை என்றால் என்ன, மேகதாது அணை விவகாரம் என்றால் என்ன என்பதன் அடிப்படை கூட தெரிந்து கொள்ளாத விஜய் தலைமையிலான அமைச்சரவை தான் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. காரணம், இந்த பிரச்சனை குறித்து இதுவரை முதலமைச்சரோ, நீர்வளத்துறை அமைச்சரோ வாய் திறக்கவில்லை. சட்டத்துறை அமைச்சர் இன்று வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தவெகவின் நிலைப்பாடு என்ன என்று சொல்ல இவர்களுக்கு வழியில்லை. மேகதாது அணை கட்டுவதைத் தடுப்பது குறித்து இவர்களின் நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்ல வழியில்லை. ஆனால், முத்தமிழறிஞர் கலைஞர் செய்த தவறு என்று கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல், நாக்கில் எலும்பு இல்லை’ என்பதற்காக வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறார் அதிகப்பிரசங்கி அமைச்சர் நிர்மல் குமார். நிர்மல் குமார் உசிலம்பட்டியில் இருந்த காலத்திலேயே காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரத்தில் தீர்ப்பாயம் கண்டவர் கலைஞர். அப்படிப்பட்ட நிர்மல் குமாருக்கு எல்லாம் கலைஞரைப் பற்றி பேசுவதற்குத் தகுதி துளியும் இல்லை என்பதை நான் எச்சரிக்கிறேன்.

ADVERTISEMENT

இன்று தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் வேண்டும் என்றே முதல்வர் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைச் சொல்கிறார். “அனைத்துக் கட்சி கூட்டத்தை நாங்கள் எப்படி கூட்டுவது? ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு நான் எப்படி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியும்?” என்று ஒரு விஞ்ஞானி நிர்மல் குமார் கேட்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பதனால் தான் அது அரசியல் கட்சி. அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வதுதான் முதலமைச்சரின் வேலை. இதற்கு முன் தமிழக முதலமைச்சர்களாக இருந்த கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, கருத்துக்களைக் கேட்டு, ஒரு முடிவெடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்புவதோ அல்லது அவர்களைச் சென்று சந்திப்பதோ வழக்கமாக வைத்திருந்தார்கள்.

நேற்று சில ஊடகங்களில் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்தும், மேகதாது விவகாரம் குறித்தும் முதலமைச்சர் கோட்டையில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்தது. செய்தியாளர்களை யாராவது அழைத்து என்ன முடிவெடுத்தோம் என்று முதலமைச்சரோ, தலைமைச் செயலாளரோ, நீர்வளத்துறை அமைச்சரோ அல்லது செயலாளரோ சொல்லி இருக்கிறார்களா? அதைச் சொல்வதற்கு இவர்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? எதுவும் இல்லை. ஆனால் ஜூன் 19-ஆம் தேதி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்களைக் கொடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அந்தத் திருத்தத்தையும் ஏற்றுக்கொண்ட இந்த அரசு, 19.06.2026 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இன்று வரை ஒவ்வொரு நாளும் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்தும், மேகதாது விவகாரம் குறித்தும் நாட்டு மக்களுக்கு என்ன நடவடிக்கையை மேற்கொண்டார்கள் என்பதை இந்த அரசு விளக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் உள்ளது.

ADVERTISEMENT

தீர்மானத்தைப் போட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருக்கும் முதலமைச்சர்; தூங்குமூஞ்சி தவெக அரசாங்கம். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து “டி.கே. சிவகுமாரைக் கட்டுப்படுத்துகிறது” என்று சொல்கிறார்கள். “காங்கிரஸ் சொல்வதையே டி.கே. சிவகுமார் கேட்பதில்லை” என்று சொல்கிறார். நான் வெளிப்படையாக நிர்மல் குமாருக்கு சவால் விடுகிறேன்; காங்கிரஸ் கட்சி என்ன பேசியது என்பதைப் பொதுவெளியில் சொல்ல வேண்டும். ராகுல் காந்தி நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தாரே, அவர் என்ன கருத்துருவை டி.கே. சிவகுமாருக்குச் சொல்லி, அவர் கேட்கவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். காங்கிரஸோடு கூட்டணியில் இருக்கும் தவெக கட்சித் தலைவர் விஜய், காங்கிரசினுடைய நிலைப்பாடு என்ன, காங்கிரஸ் எதைச் செய்யவில்லை என்பதை இங்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆனால் எங்களது எதிர்க்கட்சித் தலைவர் “அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள்” என்றார், அதை நீங்கள் செய்யவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய பிறகு அதைக் கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்புவது பிரயோஜனம் இல்லை. “அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லிக்குச் செல்வோம், பிரதமரைச் சந்திப்போம், நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திப்போம், இந்த பிரச்சனையில் தமிழ்நாடு ஒருமித்த கருத்தோடு ஒன்றாக இணைந்திருக்கிறது என்பதை புரிய வைப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கு இதுவரை பதில் சொல்லியிருக்க வேண்டிய முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. இவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை இந்த காலகட்டம் வரை சொல்லவில்லை.

மேகதாது அணை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன கருத்திற்கு, “அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு டெல்லிக்குச் செல்வோம்” அல்லது “செல்ல மாட்டோம்” என்று சொல்லுங்கள். அமைச்சர் நிர்மல் குமார் மேகதாது பிரச்சனையில் ஃபிலிம் காட்டிக்கொண்டு தான் போகிறாரே தவிர, இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை இதுவரை நாட்டு மக்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் திமுக தலைவர் எச்சரித்தார், தீர்க்கதரிசனமாக தனது அனுபவத்தை வைத்து “நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்வது தவறான முடிவு; யாராவது உங்களுக்கு அப்படி ஆலோசனை சொல்லி இருந்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார். அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்றார். கர்நாடகாவில் இருக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒன்றாக இருக்கிறார்கள்.

துரோகி விஜய்

ஆனால் இன்று முதல்வர் விஜய்க்கு என்ன வெட்கம், என்ன கௌரவம்? ஏன் அனைத்துக் கட்சி தலைவர்களைக் கூப்பிட மாட்டேன் என்கிறார்? நாட்டு மக்களின் பிரதிநிதிகளாகத் தானே வந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன ஈகோ? இந்த ஈகோவை, உங்கள் தாந்தோன்றித்தனத்தைச் உங்கள் சினிமாவில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டிற்கு என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றீர்களோ அன்று முதல் நாட்டு மக்களின் மீதான அக்கறையும் நலனும் தான் உங்களுக்கு முக்கியமே தவிர, ஈகோ முக்கியமல்ல. தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் வரும் வசனங்களைப் போல உங்களது அமைச்சர்கள் பேசிச் செல்கிறார்களே தவிர, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

நாம் அரசியல் ரீதியாக ஒன்றாக நின்று போராடினால் தான் அரசியல் ரீதியான அழுத்தத்தைத் தர இயலும். இதில் திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவாக உள்ளது. அரசியல் ரீதியாகவோ, ஒன்றிய அரசு இதற்குத் தீர்வு காண இயலாது. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று மாநிலங்களுக்கிடையான நதிநீர் பங்கீடு சட்டத்தின் கீழ், மேகதாது அணையைக் கட்டக்கூடாது’ என்பதற்குத் தீர்ப்பாயம் அமைப்பதுதான் ஒரே வழி. இதை அவர்கள் மேற்கொள்ளாத வரை தமிழ்நாட்டிற்குப் பின்னடைவு தான். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் விஜய். ஒரு முதல்வர் இன்னொரு மாநிலத்திற்கு வருவதை “வேண்டாம்” என்று சொல்லும் அவமானத்தை முதன்முதலில் கொண்டுவந்து சேர்த்த பெருமை பழி விஜய்யை சாரும். அவர் தமிழக முதல்மைச்சராக தேர்ந்தெடுக்கபப்ட்டவர். இது விஜய் என்ற தனிமனிதன் சம்பந்தப்பட்டது அல்ல, ஒட்டுமொத்த கோடிக்கணக்கான தமிழர்களின் மானம், மரியாதை,.. இது அவமானம் இல்லையா? இதைவிடப் பெரிய அவமானத்தை விஜய் தேடிக்கொடுக்க முடியாது. தமிழ்நாட்டை, காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய், இன்னும் சொல்லப்போனால் விவசாயிகளின் துரோகி விஜய். விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி.

இந்தப் பேட்டி கண்ட 24 மணி நேரத்திற்குள் தமிழக முதலமைச்சர் அல்லது, நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், அல்லது அமைச்சர் நிர்மல் குமார் ஆகிய மூவரில் ஒருவர் திமுக வைக்கும் இந்தக் கேள்விக்குக் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

மேகதாது விஷயத்தில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா? இதில் அரசின் நிலைப்பாடு என்ன? என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நீதிமன்றத்தை நாடுவதற்கான என்ன முயற்சியை எடுத்து இருக்கிறீர்கள்? 19.06.2026 அன்று தீர்மானம் போட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருக்கும் முதலமைச்சர் இன்று வரை உச்ச நீதிமன்றத்தில் ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை?

திமுக தீர்ப்பாயம் கேட்பது ஏன்?

ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் நதிநீர் பிரச்சனை ஏற்படுமேயானால், அணை கட்டுவதில் பிரச்சனை ஏற்படுமேயானால், மாநிலங்களுக்கிடையான நதிநீர் பங்கீடு சட்டம் 1956 படி தீர்ப்பாயம் அமைக்கலாம் என்பதைக் கேட்கும் உரிமை அந்தந்த மாநிலங்களுக்கு உள்ளது.

ஏன் திமுக தீர்ப்பாயம் கேட்கிறது என்றால், அதில் மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் எந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற இருக்கிறாரோ, அவரது தலைமையில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு அமையும். இந்த அமர்வு எந்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலோ, எந்த அரசின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஒன்றிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. நீதிபதிகள் மூன்று பேர் அமர்ந்து இதை விசாரிப்பதால் ஒரு தீர்வு கிடைக்கும் என்பதால் தான் திமுக இதை வலியுறுத்தி வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது பிப்ரவரி மாதமே இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அரசு அதன் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் பெரிய கஷ்டமா என்ன? ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம்; ஏன் நீங்கள் ஒரு வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை? அப்படியென்றால் நாடகமாடுகிறார் முதலமைச்சர், நடிக்கிறார் முதலமைச்சர். இதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் எண்ணம் முதலமைச்சருக்குக் கிடையாது. பெஞ்ச் தேய்க்கும் முதலமைச்சராகத்தான் இருக்கிறாரே தவிர, ‘பெஞ்ச் மார்க்’ ஆட்சியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு துளியும் இல்லை.

திமுக சும்மா விடாது

கலைஞரைப் பற்றி விமர்சிப்பதற்கு நிர்மல் குமாருக்கோ, இந்தத் தவெகவில் இருக்கும் எவருக்குமோ அதிகாரம் கிடையாது. கலைஞரைப் பற்றிப் பேசுகிற அல்லது அவதூறு பேசுகிற யார் ஒருவராக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகம் சும்மா விடாது; இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். மிஸ்டர் நிர்மல் குமார், நீங்கள் வாயில் விரல் வைத்து உசிலம்பட்டியில் சுற்றிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு காவிரித் தீர்ப்பாயம் என்றால் என்ன என்பதைக் கொண்டுவந்து காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். யாரிடம் வந்து நீங்கள் பேசுகிறீர்கள்? நாகரிகம் இருக்க வேண்டும், வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக்கூடாது.

தமிழகத்தின் மூத்த தலைவர், இந்தியாவே பார்த்து உயர்ந்து நின்ற தலைவர், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுத்த தலைவர். ‘205 டி.எம்.சி’ என்ற வார்த்தை உங்களது காதில் கேட்டிருக்கிறதா? இதை நீங்கள் சின்ன வயதில் படித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்போது தமிழகத்தில் இல்லை, காக்கி டிரவுசர் போட்டுக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தீர்கள். நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் தான், பல வண்ண வேஷ்டிகளை மாற்றினாலும் காக்கி டிரவுசரில் தான் இருக்கிறீர்கள். அந்தப் புத்தி உங்களை விட்டுப் போகாது.

பேசுவதெல்லாம் அவதூறான கருத்துகள்.

நீங்கள் பேட்டி கொடுப்பது என்றால் தரவுகளோடு பேட்டி கொடுங்கள். அரசின் பிரதிநிதியாக இருந்து முறையாக மக்களுக்கான பதிலைக் கொடுங்கள். இந்த நாட்டு மக்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி காவிரி நீர் திறந்திருக்க வேண்டும்; அதற்கு என்ன நடவடிக்கை என்று சொல்ல முடியாமல் இன்று குறுவை சாகுபடி இப்போது தண்ணீர் வருகிறது என்றால் மழை பெய்ததால் வருகிறது; உபரி நீரைத் தான் கொடுக்கிறார்கள். இதற்கு மேல் பூட்டி வைத்தால் அணை உடைந்துவிடும் என்பதால் வடிகாலாகத் தான் தமிழகத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை எங்களது தலைவர் அழகாகச் சொல்லியுள்ளார். இந்த ஆட்சியாளர்களுக்கு இதுகுறித்த அறிவில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். “பெங்களூரில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் செட்டப் இருக்கிறது” என்று பேசுவதெல்லாம் அவதூறான கருத்துகள். நிர்மல் குமார் வாய்க்கு வந்தபடி பல அவதூறுகளைப் பேசியிருக்கிறார். அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். என்றார்.

ராகுல் காந்திக்கு தைரியம் இருந்ததா?

மேலும் “தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒத்த கருத்துடன் இல்லை; இவர்கள் எல்லோருக்கும் அரசியல் செய்வதுதானே தவிர தண்ணீர் வாங்கும் அக்கறை இல்லை” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் இருந்து ஒருவர் வந்துவிட்டு ‘எட்டப்பன், குட்டப்பன்’ என்று சொல்வதற்குக் கூட தெரியாமல் சொல்லிவிட்டுச் சென்றாரே, காவிரி நதிநீர் பிரச்சனை பற்றிப் பேச ராகுல் காந்திக்கு இங்கு தைரியம் இருந்ததா? ராகுல் காந்திக்கு அந்தக் கருத்துருவை எழுதிக் கொடுக்க உங்களுக்குத் துணிச்சல் இருந்ததா? ‘நீட்டிற்கு நீங்கள் தான் தாத்தா’ என்பது போல் பேசுகிறீர்கள். தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு காவிரி பிரச்சனை குறித்துப் பேசாமல் போகும் ஒருவரைத் தலைவராக வைத்திருக்கும் மாணிக்கம் தாகூருக்கெல்லாம் திமுகவையோ அல்லது தமிழக அரசியல் கட்சியையோ குறித்துப் பேச கொஞ்சம் கூட தகுதி இல்லை. உங்களது ஆட்சிதானே கர்நாடகாவில் இருக்கிறது; காங்கிரஸ் சொல்வதையே கேட்கவில்லை என்றால், காங்கிரஸ் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூர், நீங்கள் என்ன சொல்லி யார் கேட்கவில்லை?

தமிழக முதலமைச்சர் விஜயின் வாயாக இருக்கக்கூடிய மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுங்கள்.” என்றார்.

திமுகவின் 3 கேள்விகள்

  • எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் பேசிய பிறகு, சட்டமன்றத்தில் தீர்மானம் படித்த பிறகு, இன்று வரை மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கத் தீர்ப்பாயம் அமைப்பதற்கு என்ன நடவடிக்கைகளை நீங்கள் எடுத்தீர்கள்?
  • நேற்று முதல்வர் கோட்டையில் அமர்ந்து அதிகாரிகளுடன் காவிரி நீர் பிரச்சனை குறித்து விவாதித்த விஷயத்தில் முடிவு என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
  • தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா பயணம் விவகாரத்தில் கோரிக்கை வைத்தது குறித்த கடிதத்தைப் பொதுவெளியில் நீங்கள் வெளியிட வேண்டும்.

இந்த மூன்றையும் விளக்கக்கூடிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share