தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமையையும் காக்கும் பொருட்டு, முதல்வரின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் நாளை அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ள நிலையில், “தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர்” எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில்,”கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கும், திமுக குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகக் கட்சியையும் தாண்டிய நெருங்கிய உறவு இருந்து வருகிறது. திமுக என்ன சொல்கிறதோ அதையே அவர் செய்வார். டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் தலைமையின் சொல்லைக் கேட்பதை விட, திமுக குடும்பமும், ஸ்டாலினும் சொல்வதையே அதிகமாகக் கேட்டு வருகிறார். கடந்த ஒரு வார காலமாக இரு மாநில அரசியல் களத்திலும் நடைபெறும் நிகழ்வுகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. டி.கே. சிவக்குமார் சொல்ல நினைப்பதைத் திமுக சொல்கிறது; திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில், அவருக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக அன்று கருணாநிதி கர்நாடகா நீரை திறக்க கூடாது என முட்டுக்கட்டை போட்டார். அதேபோன்ற ஒரு அணுகுமுறையையே தற்போதைய திமுகவும் தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், அனைத்துத் தரப்பு ஆலோசனைகளையும் முடித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முதல்வர் நேற்று காலை முடிவு செய்தார். பல ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் உமாபதி அவர்களுடன் கலந்தாலோசித்து, நாளை வழக்குப்பதிவு செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால், இந்தச் சூழலை அறிந்த திமுக அரசு, அவசர அவசரமாக நேற்று மாலை 5 மணிக்கு மேல் தனியாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. ஒரே மாநிலத்திலிருந்து ஒரே விவகாரத்திற்காகப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது, அது உச்சநீதிமன்றத்தில் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி, மாநிலத்தின் உரிமைகளைப் பின்னோக்கித் தள்ளும். கடந்த ஐந்து ஆண்டுகளில் காவிரி உரிமைக்காக எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத திமுக, தற்போது அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய குழப்பத்தை விளைவிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குப் பல பின்னடைவுகளை ஏற்படுத்தியது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். இப்போதும் அதே குழப்பத்தைத்தான் விளைவிக்கிறார்கள். மற்றொரு புறம், அதிமுக தனது வலுவான கொள்கைகளை மறந்து, கர்நாடகா மற்றும் பாஜகவின் ஆதரவுக் குரலாகச் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமையையும் காக்கும் பொருட்டு, முதல்வரின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் நாளை அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. டி.கே. சிவக்குமாருக்கும் திமுக தலைமைக்கும் இடையே இருக்கும் மறைமுக உறவே, தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதற்கு முதன்மைக்காரணம் என்பது தற்போதைய நிகழ்வுகள் மூலம் வெளிப்படையாக உறுதியாகியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
