அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்! – திமுக எம்பி தயாநிதி மாறன் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்திற்கு நேற்று வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காவிரி விவகாரம் குறித்துப் பேசாமல் சென்றதற்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மகாபலிபுரத்தில் நேற்று நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களின் 2 நாள் பயிற்சி முகாமில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் மேகதாது அணை விவகாரம் குறித்து எந்தப் பதிலும் தெரிவிக்காத ராகுல் காந்தி, ” பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறவர்கள்தான்; ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவை தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன காலத்தின் எட்டப்பன்கள். 21-ம் நூற்றாண்டின் எட்டப்பன்கள்தான். என்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ராகுல் காந்தி காவிரி விவகாரம் குறித்துப் பேசாமல் சென்றது குறித்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று தனது எக்ஸ் தளப் பதிவில், “நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!

தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு Cauvery Rights குறித்துப் பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!

ADVERTISEMENT

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் Mekedatu Dam-க்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!

நீட் (NEET) தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!

ADVERTISEMENT

பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!

ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!

டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீட் எதிர்ப்பு (NEET Protest) மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!

தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது!

அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!”

என ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share