”மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டின் 21-ம் நூற்றாண்டு எட்டப்பன்கள்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: தமிழக மக்களின் வாக்குகளைப் பறிக்கும்- அதிகாரத்தைப் பறிக்கும் சதித் திட்டத்துடனேயே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது பாஜக.
தமிழ்நாட்டின் வரலாற்றில் “எட்டப்பன்” என்ற கதாபாத்திரம் உண்டு. தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தால் எட்டப்பன் என அழைப்பது வழக்கம்.
பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறவர்கள்தான்; தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்கிறவர்கள்தான்.
ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவை தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன காலத்தின் எட்டப்பன்கள். 21-ம் நூற்றாண்டின் எட்டப்பன்கள்தான்.
எந்த ஒரு தமிழரும் தொகுதி மறுவரையறை ஆதரிக்கக் கூடாது. ஒவ்வொரு தமிழரும் தொகுதி மறுவரையை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு தமிழ்நாட்டு கட்சியும் தேசியக் கட்சியும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
அதேநேரத்தில் காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது அணை குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார்.
தொகுதி மறுவரையறை மசோதாவைப் பொறுத்தவரையில் தென் மாநிலங்களைப் பாதிக்கும் என முதன் முதலில் குரல் கொடுத்தது திமுக. இந்தியாவிலேயே அம்மசோதாவை முதன் முதலில் தீயிட்டு எரித்தவர் தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் டெல்லியில் கடந்த ஜூலை 19-ந் தேதி மத்திய அரசு கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துவிட்டதாக வட இந்திய ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பின.
ஆனால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா ஆகியோர், “மாநிலங்களின் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அல்லது 50 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள்தான் செய்திகளை வெளியிடுகின்றன. மத்திய அரசு இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
தொகுதி மறுவரையறை மசோதா பற்றி மத்திய அரசு எதுவும் சொல்லாத நிலையில் எங்கள் நிலைப்பாட்டையும் சொல்ல முடியாது. அப்படி மத்திய அரசு, விளக்கம் அளித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் சொல்வோம்” என விளக்கம் அளித்திருந்தனர்.
தொகுதி மறுவரையறை மசோதாவில் திருத்தங்களுடன் அதாவது அனைத்து மாநிலங்களின் தொகுதிகளையும் ஒரே சீராக 25% அல்லது 50% அளவில் அதிகரித்தால் அம்மசோதாவை திமுக ஆதரிக்கக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த பின்னணியில், “தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்” என ராகுல் காந்தி, திமுகவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
