“என் பதவி பறிப்பிற்கான காரணம்…” : தோப்பு வெங்கடாசலம் பேட்டி!

Published On:

| By Kavi

திமுகவில் செயல்பட்டு வந்த தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றவர் தோப்பு வெங்கடாசலம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சுயேட்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார்.

ADVERTISEMENT

தேர்தலுக்கு பின்னர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஈரோடு திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த நிலையில் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 1) திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ”ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாசலம், ”அதிமுகவில் சிறிது காலம் விலகியிருந்த நான் திமுகவில் இணைந்தேன். 4 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு மாவட்ட கழக பதவியை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஓராண்டு காலத்துக்கு  இந்த பதவியை கொடுத்தாலும் எந்த விருப்பு வெறுப்பும் இன்றி அந்த பணியை நான் செய்தேன். ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் உழைத்தேன். 

இந்த இயக்கத்தில் சேர்ந்த பின்னால் நாடாளுமன்ற தேர்தல் வந்தது.  இந்த தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு சுப்புராயன் போட்டியிட்டார். அப்போது திமுகவில் நான் வெறும் உறுப்பினராகத்தான் இருந்தேன். இருந்தாலும் கூட நான் அவருக்காக பிரச்சார வாகனத்தை ஏற்பாடு செய்து, சொந்த செலவில் 20 நாட்கள் பிரச்சாரம் செய்து, சுப்புராயன் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தேன்.  என்னுடைய உழைப்பும் வேர்வையும் இந்த வெற்றியில் இருந்தது. இதனை நீங்கள் அவரிடம் கேட்கலாம். 

ADVERTISEMENT

பேரூராட்சி தேர்தலில் 80 சதவிகிதம் திமுக வெற்றி பெற்றது. இதிலும் என்னுடைய பங்கு இருந்தது. இது தலைமைக்கும் தெரியும், இங்கிருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் தெரியும். 

எனக்கு கொடுத்த வேலையை பிரதிபலன் பார்க்காமல் செய்தேன்.  இதெல்லாம் கடந்த கால  வரலாறு. 

அதன்பின் சட்டமன்றத் தேர்தல் வந்தது. பெருந்துறை, பவானி தொகுதிகளை சொல்லி இதில் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்களா என்று முன்னாள் முதல்வர் கேட்டுக்கொண்டே இருப்பார்.  அதனால் இந்த தொகுதியிலும், இடைப்பட்ட நாட்களில் பவானிக்கும் சென்று  என்னுடைய பணியை சிறப்பாக செய்தேன். தேர்தல் முடிவில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. 

இதன்பின்னர் ஆய்வு குழு வந்தது. அவர்கள் என்ன ஆய்வு செய்தார்கள், எந்த தகவலை தலைமைக்கு கொடுத்தார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியாது.  

ஆய்வு பணி முடிந்து ஒரு மாதம் கழிந்தது, அதன்பின்னர் என்னுடைய அலுவலகத்தில் பாக முகவர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தேன். அப்போது 75, 80 சதவிகித நிர்வாகிகள்,  நமது தொகுதியில் திமுகவை சார்ந்த சில பேர் இயக்கத்துக்கு எதிராக  வேலை பார்த்தார்கள் என்றனர். ஆகவே அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக சொன்னார்கள். அதன் பதிவுகள் எல்லாம் உள்ளது. நான்  எந்தவிதமான குற்றச்சாட்டும் யார் மீதும் சொல்லவில்லை.  

இடைப்பட்ட காலத்தில் நான் மாற்றுக் கட்சிக்கு செல்வதாக பல பேர் ஊடகத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட எண்ணம்  இல்லை.  யார் இந்த இயக்கத்துக்கு எதிராக வேலை பார்த்தார்களோ அவர்கள் தான் இப்படி பரப்பியிருக்கிறார்கள். 

இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றதே இல்லை. எனவே இம்முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும்  என்று வேலை பார்த்தோம். ஒரு 5000 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் நான் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால்  வெற்றி பெறாததற்கு இங்கிருக்கக்கூடிய நிர்வாகிகள் காரணம் என்று நான் சொல்லப்போவது இல்லை.  

எனக்கென்று சில கொள்கை இருக்கிறது. என்னை வளப்படுத்தி கொள்வதற்காக இந்த இயக்கத்துக்கு வரவில்லை.  வெற்றி பெறாத தொகுதியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது” என்று கூறினார். 

”அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்படி, திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு குளங்களில் தண்ணீர் நிரப்பப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை வைத்த காரணத்தால் பல வாக்குகளை இழக்க நேரிட்டது. அப்போது கூட எல்.என்.டி நிறுவனத்தை கடுமையாக பேசினேன். 5 ஆண்டுகாலம் இந்த ஒப்பந்தத்தை  கடைபிடிக்க வேண்டும்.  இதைத்தவிர மாவட்ட நிர்வாகத்துக்கு  வேறு வேலை கிடையாது. குளம் இருக்கிறது… திட்டம் இருக்கிறது… ஒரு உத்தரவு போட்டால் தண்ணீர் வந்திருக்கும். தண்ணீர் கொடுக்கப்படாததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது.  இப்போது விவசாயிகள் இந்த மாவட்டத்தின் அமைச்சர் செங்கோட்டையனிடம்  ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்கள்.  கடந்த ஆட்சி காலத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் படி தண்ணீர் விடாமல் விட்டுவிட்டார்கள்.  நாங்கள் தென்னை வைத்திருக்கிறோம்.  இப்போது விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. தண்ணீர் விட வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அன்றைக்கு அணையில் 120 அடி தண்ணீர் இருந்தது. அப்போது தண்ணீர் திறந்துவிட சொன்னேன். இன்றைக்கு 40 அடிதான் இருக்கிறது. வருவாய்த்துறை அமைச்சரிடம் மனு கொடுத்த பின்னர் இரண்டே நாட்களில் தண்ணீர் வருகிறது. தற்போது வறட்சி காலத்தில் தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து,  முன்னாள் அமைச்சர் முத்துசாமி  உத்தரவு போடாததால் தண்ணீர் திறந்துவிடப்படவில்லையா. அப்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டால் உங்களுக்கு  நல்லப் பெயர் கிடைத்துவிடும் என்பதால்  தடுத்துவிட்டார் என்று சொல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர்,  ”இது உங்களுக்கு கிடைத்த தகவலா… நான் களத்தில் என்ன நிலவரம் என்று சொல்லிவிட்டேன். யார் மனதில் என்ன இருக்கும் என்று பத்திரிகையாளராக உங்களுக்கு அத்துபடியாக இருக்கும்.  முத்துசாமி மிகப்பெரிய சீனியர். அவர் அமைச்சராக இருந்த காலத்தில்  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் நான் கோரிக்கை வைத்ததால் தண்ணீர் விடவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ” என்று தெரிவித்தார். 

மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவித்ததற்கான காரணம் குறித்து பேசிய தோப்பு  வெங்கடாசலம்,  ”தேர்தல் சமயத்தில் இந்த இயக்கத்தில் இருந்த சில முக்கிய நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை. இதை நான் சொல்லவில்லை.  ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் என்னிடத்தில் மனு கொடுத்தார்கள். எதிர்க்கட்சிக்காக அவர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்கள். அதை நான் மேலிடத்துக்கு அனுப்பினேன், இதை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். எனது மாவட்ட பொறுப்பு பறிக்கப்பட்டதற்கான காரணத்தை தலைமை தான் சொல்லவேண்டும். மீண்டும் அதிமுகவுக்கோ அல்லது வேறு கட்சிக்கோ செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை” என்றும் கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share