வருகிறது காவிரி நீர் … விஜய் அரசுக்கு நிம்மதி!

Published On:

| By Mathi

Cauvery Inflow Brings Much-Needed Relief to Vijay Govt

கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீரை கர்நாடகா அரசு இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி திறந்துவிட்டது. காவிரி ஆற்றில் கலக்கும் இந்த நீர் அடுத்த ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும்.

கர்நாடகாவின் குடகு மாவட்டம், கேரளாவின் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருமழை கொட்டி வருகிறது. குடகு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிலா ஆற்றுக்கான நீர்பிடிப்பு பகுதி கேரளா வயநாடு. அங்கு பெய்து வரும் கனமழையால் கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணை நிரம்பும் நிலைமையில் இருக்கிறது.

கபினி அணையின் மொத்த கொள்ளளவு 65 அடி. கபினி அணைக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து கபினி அணையில் இருந்து வினாடிக்கு 8,000 முதல் 10,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டுக்கு எப்படி வரும்?

கபினி அணையில் திறந்துவிடப்பட்டுள்ள இந்த நீர், திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. அங்கிருந்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வந்தடைந்தது ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை காவிரி நீர் சென்றடையும்.

தற்போது கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் அடுத்த ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு என்ன?

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடிநீர் வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. ஆனால் அணைகளில் நீர் இருப்பே இல்லை; வறட்சி நிலவுவதாக கூறி வந்த நிலையில் தற்போது கபினி அணையில் இருந்து மட்டும் 10,000 கன அடிநீரை திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. ஆனாலும் திறக்கப்பட வேண்டிய 4 டிஎம்சி நீரை முழுமையாக கர்நாடகா திறந்துவிடுமா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது.

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி குடகு மாவட்டம். குடகு மாவட்டத்தில் காவிரியின் கிளைநதிகளில் ஒன்று சிக்லி ஹோலி. இதன் குறுக்கே குடகு மாவட்டத்தில் சிக்லி ஹோலி அணை கட்டப்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழையால் குடகு மாவட்டத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிக்லி ஹோலி அணை நிரம்பிவிட்டது. இந்த அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியின் கலக்கும் சிக்லி ஹோலி துணை ஆற்றின் நீர் கிருஷ்ணராஜ சாகர் அணையை சென்றடையும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share