Data Story: நியாயமே இல்லாத நீட்- அதிர்ச்சி தரவுகள்!

Published On:

| By R Vijaya Sankar

The NEET Injustice: Shocking Data Revealed

கரப்பான் பூச்சிகள் என்றாலே முதலில் தோன்றுவது அருவெறுப்புதான். ஆனால் அவற்றின் பெயரால் தன்னிச்சையாக உருவான ஓர் இணையவெளி இயக்கம் தோற்கடிக்கப்பட முடியாதவர் என்கிற பிம்பத்தை வைத்துக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவரும் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் அரசுக்கு ஒரு அச்சத்தைக் கொடுத்துப் பணிய வைத்திருப்பது உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கடந்த நீட் (Neet) தேர்வில் வினாத்தாள்கள் கசியவிடப்பட்டதால் 23 லட்சம் மாணவர்கள் மறு தேர்வு எழுத நேர்ந்ததற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்கிற பிரதான கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நடத்திய போராட்டமும், அதன் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த மாணவர் எழுச்சிகளும், போராட்டங்களின் முடிவில் பிரதான் பதவி விலகியதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகக்  கொண்டாடப்படுகின்றன.

ADVERTISEMENT

அதே நேரத்தில் காக்ரோச் கட்சியின் கோரிக்கையான ‘நியாயமான நீட்’ என்பது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி அவர்களில் சிலரை தற்கொலை துயரத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் கொடுமைக்கு ஒரு சரியான தீர்வாக இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

காக்ரோச் கட்சியே லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் அழுத்திக் கொண்டிருக்கும் கோபத்தையும், விரக்தியையும், இயலாமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பாதுகாப்பு வால்வ்தான், இந்தப் போராட்டத்திற்குப் பிறகு அந்தக் கோபமெல்லாம் நீராவி போல் வெளியேறிய பின்னும் நீட் என்கிற மோசடி தொடரும் என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

ADVERTISEMENT


காக்ரோச் ஜனதா கட்சிக்கு ரகசிய அஜெண்டா?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஒரு ரகசிய அஜெண்டா இருக்கிறதா என்கிற சந்தேகத்திற்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் நியாயமான நீட் என்கிற அதன் கோரிக்கை சரியானதல்ல,  அந்தத்  தேர்வை நியாயமாக நடத்த முடியாது என்பதற்கான ஏராளமான தரவுகள் இருக்கின்றன. திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு நியமித்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை இந்த உண்மையை சந்தேகத்திற்கிடமின்றி நிறுவியிருக்கிறது.  

ஆயினும் இந்த மாணவர் எழுச்சி திடீரென்று ஏற்பட்டதா? கரப்பான் பூச்சி என்கிற ஒரு குறியீடு இவ்வளவு பெரிய கோபத்தைக் கிளறிய தீப்பொறியாக மாறியது எப்படி? நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளின் திரட்சி ஒரு கட்டத்தில் பெருவெடிப்பாக மாறுகிறது என்பதுதான் உலக அனுபவம்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்ட Gen Z என்று அழைக்கப்படும்  15 வயதிலிருந்து 26 வயது வரையில் இருக்கும் தலைமுறையைப் பொறுத்தவரையில் பெரும்  பிரச்சினைகளாக இருப்பவை கல்வியும் வேலைவாய்ப்பும்தான். ஆனால் இன்றைய சூழலில் அவை இரண்டுமே அவர்களுக்கு எளிதாக, தரமாகக் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. முதலில் கல்வி எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.  

கட்டாய கல்வி- அடிப்படை உரிமை

ஒரு வயதிலிருந்து 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 45- ஆவது பிரிவு தெளிவாக வரையறுத்திருக்கிறது. அதாவது, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் 14 வயது வரையான குழந்தைகள் அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வியை அரசு வழங்கவேண்டுமென்று கூறுகிறது. 

ஆயினும் அது அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இருந்ததால் (Directive Principles of State Policy) அதனை நீதிமன்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்த முடியாது. இந்தக் குறையை அரசியலமைப்புச் சட்டத்தின் 86வது திருத்தம் (2002) நீக்கியது.

  • அரசியலமைப்புச் சட்டத்தில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு  இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கிய பிரிவு 21(A) சேர்க்கப்பட்டது. 
  • பிரிவு 51A(k) 6 முதல் 14 வயது உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதை அவர்களின்  பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் அடிப்படைக் கடமையாக வரையறுத்தது.  

இலவச, கட்டாய கல்வி என்கிற அடிப்படை உரிமையை உறுதி செய்ய வேண்டிய அரசு தன் நிதியாதாரங்களை குழந்தைகள் எளிதில் எட்ட முடிகிற சுற்று வட்டாரத்தில் பள்ளிக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், ஆசிரியர்களை நியமிப்பது போன்ற செலவுகளுக்கு எந்த அளவு ஒதுக்குகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி.

கோத்தாரி கமிஷன்

கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக ஒன்றிய அரசு, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரான டி.எஸ். கோத்தாரியை ஜூலை 14, 1964 அன்று நியமித்தது. கோத்தாரி கமிஷன் ஒரு விரிவான அறிக்கையை ஜூன் 29, 1966 அன்று அளித்தது. அதன் பரிந்துரைகளில் முக்கியமானது பொதுப் பள்ளி அமைப்பை உருவாக்குவதுதான்.

  • “தேசத்தின் வளர்ச்சிக்கான வலுவான கருவியாக கல்வி அமைப்பு உருவாக வேண்டுமெனில், குறிப்பாக சமூக மற்றும் தேசிய ஒருமைப்பாடு உருவாக வேண்டுமெனில், நாம் பொதுக் கல்விக்கான ஒரு அமைப்பை உருவாக்கும் லட்சியத்தை நோக்கி நகரவேண்டும்- அந்த அமைப்பு ஜாதி, மதம், சமூகம் மற்றும் பொருளாதார அடையாளங்களையோ அல்லது அந்தஸ்தையோ பொருட்படுத்தாமல் அனைத்துக் குழந்தைளையும் அனுமதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்,” என்று கோத்தாரி கமிஷனின் அறிக்கை கூறியது.  
  • கல்வி வாய்ப்புகளில் சமத்துவம் வேண்டும் என்பதை கோத்தாரி கமிஷன் இவ்வாறு வலியுறுத்தியது: பிற்படுத்தப்பட்ட அல்லது வசதி வாய்ப்புகள் இல்லாத வர்க்கங்கள் மற்றும் தனிமனிதர்கள் கல்வியை தாம் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான நெம்புகோலாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கல்வி வாய்ப்புகளைச் சமமாக்குவதுதான் கல்வியின் முக்கியமான சமூக நோக்கங்களில் ஒன்று. பிற்படுத்தப்பட்டோருக்கு, குறிப்பாக பழங்குடியினருக்கு, கல்வியளிப்பது சமத்துவத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்குமான பெரிய திட்டமாகும். இந்த நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த செலவும் அதிகமானது என்று கருதத் தேவையில்லை.” 

பொதுப் பள்ளிகள் அல்லது சுற்று வட்டாரப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டும்; அவை ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்காகத் திறந்திருக்க வேண்டும் என்பது கமிஷனின் முக்கியப் பரிந்துரையாகும்.

ஆனால் அரசியலமைப்புச் சட்டமும் கல்வி உரிமைச் சட்டமும் அமுலுக்கு வந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட நிலைமை என்ன? பொதுப் பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. 

ஒன்றிய பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் Unified District Information System for Education Plus (UDISE+) என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் தரவுகளின் படி (2024ஆம் ஆண்டுக்கானது)

  • இந்தியாவில் இருக்கும் 24 கோடி பள்ளி செல்லும் குழந்தைகளில் 40% தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
  • 2010ஆம் ஆண்டில் 15% பேர்தான் தனியார் பள்ளிகளில் படித்தனர்.  
  • 2014 முதல் 2024 வரை  தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 15% கூடியது.
  • மொத்தமிருக்கும் 14.5 லட்சம் பள்ளிகளில் 3.5 லட்சம் தனியார் பள்ளிகள். இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் (Tier-2 and Tier-3 cities) ஒப்பீட்டு அளவில் குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளிகளை நோக்கி நடுத்தர வர்க்க குடும்பங்களும் நகர்வதாக கல்வியாளர்கள் கூறுவதாக தி இந்து நாளேட்டில் வெளியான செய்தி ஒன்று கூறுகிறது. அவை அரசுப் பள்ளிகளை விட  “தரம் உயர்ந்தவை”, சிறந்த ஆங்கில வழி கல்வி தருபவை என்கிற பார்வை இதற்குக் காரணமாக இருக்கிறது.   

ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கத் துறை சென்ற ஆண்டு Comprehensive Modular Survey on Education என்கிற கணக்கெடுப்பை நடத்தியது. அதன் முடிவுகள்: 

  1. கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 66% பேரும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 24.3% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8.9% பேரும், அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் 0.6% பேரும் படிக்கின்றனர்.  
  1. நகர்ப்புறம் என்று வரும்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் 24.3% பேரும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 51.4% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 17.6% பேரும் , அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் 0.8% பேரும் படிக்கின்றனர். 

கல்விக் கட்டணம், போக்குவரத்து, சீருடைகள், பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், மற்றும் இதர செலவுகளைக் கணக்கிட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆகும் சராசரி செலவு ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவு (கிராமப்புறங்களில் ரூ. 2801; நகர்ப்புறங்களில் ரூ. 4374 ). 

அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் உள்ள ஒரு மாணவனுக்கு ஆகும் சராசரி செலவு ரூ. 22,919 (கிராமங்களில்) ரூ. 35,798  (நகரங்களில்). அதாவது அரசுப் பள்ளிகளில் ஆகும் செலவை விட சுமார் 8 மடங்கு அதிகம்.

நன்கொடை என்கிற பெயரில் மழலைப் பள்ளிகள் முதல் அனைத்து நிலைகளில் நடக்கும் கொள்ளை இந்தக் கணக்கிற்கு வெளியேதான். தனியார் நடத்தும் மழலையர் பள்ளிகளில் நகர்ப்புறங்களில் சராசரி ஆண்டுக் கட்டணம் ரூ. 26,188. இது அரசு நடத்தும் பள்ளிகளை விட 16 மடங்கு அதிகம்.  

எந்த வகைப் பள்ளியாக இருந்தாலும் 97% செலவு என்கிற சுமை குடும்பங்களின் மீதுதான் விழுகிறது. இந்தியாவில் கல்விக் கடன், உதவித் தொகை போன்றவை மிகக் குறைவு. 

ரூ.14 லட்சம் கோடி செலவு

தேசிய அளவில்

  • தனியார் பள்ளிக் கட்டணத்துக்கு ஆகும் வருடாந்திர செலவு ரூ. 5 லட்சம் முதல் 6 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • இதைத் தவிர டியூஷன், கோச்சிங் போன்றவற்றிற்காக ஆகும் செலவு சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி.
  • புத்தகம், சீருடை, போக்குவரத்துக்கான செலவு தோராயமாக ரூ. 1.5 லட்சம் கோடி.
  • இதர செலவுகளையும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு பெற்றோர்கள் செலவு ரூ. 14 லட்சம் கோடி ஆகிறது என்று கூறப்படுகிறது.  

கோத்தாரி கமிஷன் தான் பரிந்துரைத்த நோக்கங்களை நிறைவேற்ற நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் (Gross Domestic Product) 6 சதவீதத்தை அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவிட வேண்டும் என்று கூறி 60 ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த இலக்கு வெகு தூரத்திலேயே இருக்கிறது. கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் கூட அது 2% என்ற அளவிலேயே இருக்கிறது.

கல்விக்கான அரசின் செலவு அதிகரிக்காத வரையில் பொதுப் பள்ளிகளின் தரம், உள்கட்டுமானம் போன்றவை குறைந்து குடும்பங்களின் கல்விச்  செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. கல்வியில் அரசின் முதலீடு குறையும்போது உள் கட்டுமானம் மற்றும் பிற கல்வி வசதிகள்-  ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்றவை பாதிக்கப்பட்டு, இந்த இடைவெளியை நிரப்ப குடும்பங்கள் அதிகம் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அரசின் கல்விச் செலவுக்கும், குடும்பங்களின் கல்விச் செலவுக்கும் இடையில் இருக்கும் உறவை பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.  


அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 94,000 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் கூறுகிறது. அதாவது ஒரு நாளுக்கு 25 பள்ளிகள் என்கிற விகிதத்தில் மூடப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2.26 கோடி குறைந்திருக்கிறது. மொத்த மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை 2005-ஆம் ஆண்டில் 71% ஆக இருந்தது. 2024-25-ல் அது 49.24% ஆக வீழ்ந்திருக்கிறது.  

”94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் அதே நேரத்தில் 43,000 தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்புகளால் நடத்தப் படுகின்றன” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தி இந்து பத்திரிக்கையில் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  

அச்சுறுத்தும் நீட்  

இத்தகைய தடைகளையெல்லாம் கடந்துதான் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் வருகிறார்கள். அதில் இன்று பூதாகரப் பிரச்சினையாக வெடித்திருக்கிறது நீட். கல்விச் செலவு என்கிற பெரும் பொருளாதாரத் தடையை மீறி நீட் நுழைவுத் தேர்வுக்குள் வருபவர்களுக்கு கோச்சிங் அல்லது பயிற்சி என்கிற அடுத்த பெரும் செலவு பிரம்மாண்டமாக முன்னே நிற்கிறது.  

நீட் தேர்வுக்காக செலவிடப்படும் தொகை குறித்து அதிகாரபூர்வ மதிப்பீடு எதுவும் இல்லையென்றபோதிலும் நீட் பயிற்சி மையங்கள் குறித்த செய்திகள், இப்போது பொது வெளியில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒரு தோரயமான மதிப்பீட்டைச் செய்ய முடியும். 

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை 22 அல்லது 23 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களில் 70-80 சதவீதம் பேர் இணையவழியிலும், நேரடி வகுப்புகளிலும், பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களிலும் பயிற்சி பெறுகிறார்கள்.

  • இணையவழி பயிற்சிக்கு ஒரு மாணவனுக்கு ரூ. 80,000 வரை செலவாகிறது.
  • பயிற்சி வகுப்புகளுக்கு ஆகும் செலவு ரூ. 1 லட்சம்.
  • பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கு இதை விடப் பலமடங்கு அதிகம் செலவு.
  • பயிற்சிக்காக மட்டுமே ஓர் ஆண்டில் சுமார் 25,000 கோடி மொத்தம் செலவாகிறது.  

இது போக தங்குமிடம், பயணம், புத்தகங்கள், பயிற்சி வினாத்தாள்கள் போன்றவற்றின் செலவுகளையும் இதில் சேர்க்க வேண்டியுள்ளது. சராசரியாக ஒரு மாணவன் இவற்றுக்காக ரூ. 1 லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.  

  • நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 50,000 கோடி குடும்பங்களால் செலவிடப் படுகிறது.
  • 2025-26இன் ஒன்றிய பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையான ரூ. 78,572 கோடியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நீட் பகாசுரனின் அளவு புரியும்.   

பாகுபாடுகளை ஆழமாக்கும் “நீட்”

நாட்டிலிருக்கும் பள்ளிகளுக்கிடையே நிலவும் பாகுபாட்டை ”நீட்” மேலும் ஆழமாக்குகிறது. நீட்டின் கேள்வித்தாள்கள் சுமார் 30,000 சிபிஎஸ்ஈ (CBSE) பள்ளிகளும், 2500 ஐசிஎஸ்ஈ (ICSE) பள்ளிகளும் பின்பற்றும் பாடத்திட்டங்களை அடிப்பைடயாகக் கொண்டவை. மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் இந்த ஒரே விஷயத்தில் கழித்துக் கட்டப்படுகின்றனர். 

திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நீட் தேர்வுமுறையை ஆராய்வதற்காகக நியமித்த நீதிபதி. ஏ.கே. ராஜன் ஆணையம் இந்தப் பாகுபாட்டையும் பாதிப்பையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.

  • 2010-11 கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் படித்த 2,232 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்தனர்; 14 சிபிஎஸ்ஈ மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. 
  • 2013இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.
  • 2020-21 கல்வியாண்டில் 1,604 சிபிஎஸ்ஈ மாணவர்கள் தேர்வுபெற்றனர். 

அதே போல,

  • நீட் அறிமுகமாவதற்கு முன் பயின்ற 65.17% கிராமப்புற மாணவர்கள் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது.
  • 2020-21இல் இது 49.91% ஆகக் குறைந்தது.  

இத்தகைய தரவுகளை முன்வைத்த ஏ.கே. ராஜன் ஆணையம் நீட் மாநில கல்வித் திட்டங்களில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரியாக முனைபவர்களுக்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பயிற்சி நிலையங்களுக்கு சென்று பயிலும் வசதியில்லாதவர்களுக்கும் எதிராக பாரபட்சம் காட்டுகிறது என்கிற உண்மையை தரவுகளுடன் நிறுவியது. மேலும் நீட் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய ஆரம்ப சுகாதார நிலையங்களுகுத் தேவையான அளவு மருத்துவர்கள் கிடைக்கமாட்டார்கள், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு மருத்துவ நிபுணர்களும் இருக்கமாட்டார்கள் என்று எச்சரித்திருக்கிறது. 

நீட் தேர்வு தொடர்பாக வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அகில இந்திய அளவிலும் இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்று தெளிவாகக் காட்டுகின்றன. 


கொள்ளை லாபம் கொட்டி தரும் நீட்

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் சுமார் 11.5 லட்சம் பேர்தான் தேர்வு பெறுகிறார்கள்.

  • நாட்டில் இருக்கும் மொத்த மருத்துவக் கல்லூரி இடங்கள் 1,36,939.
  • இவற்றில் 63,296 இடங்கள் அரசுக் கல்லூரிகளிலும்
    73,643 இடங்கள் தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் இருக்கின்றன.
  • இவற்றில் குறைந்தது 50%  இடங்கள் நிறுவன நிர்வாகத்திற்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றனர்.
  • இந்த ஒதுக்கீடுகளில் ரிசர்வேஷன், “மெரிட்” என்றெல்லாம் எதுவும் இல்லை.
  • பணம் என்பதுதான் ஒரே கடவுச் சொல். தோராயமான கணக்கீடுகளில் படி நிர்வாக ஒதுக்கீட்டில் வரும் ஒரு இடத்துக்கு ரூ.15 லட்சம் முதல் 25 லட்சம் வரை கட்டணம்-
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் ஒரு இடத்துக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை கட்டணம்.
  • இதனால் மேற்கூறிய நிறுவனங்கள் ரூ. 10,000 கோடி வரை கொள்ளையடிக்கின்றன. இதனுடன் ஹாஸ்டல் கட்டணம் போன்ற இதர செலவுகளும் சேரும். 

’கரப்பான்’களின் கோபம் ஏன்? 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு மாணவரிடையே  கிடைத்த மாபெரும் ஆதரவுக்கு மேற்கூறிய அமைப்புரீதியான பிரச்சினைகளின் நீண்டகாலத் திரட்சி காரணம் என்ற போதிலும் நீட் வினாத்தாள்கள் கசிந்து 23 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டிய துயரத்துக்கு ஆளாக்கபட்டனர் என்பது உடனடிக் காரணம்.  

லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீட் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (NTA) என்பதை ஒன்றிய அரசு எவ்வளவு அலட்சியமாக நடத்தி வருகிறது என்கிற உண்மையும் இப்போது வெளியாகியிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலங்களவை உறுப்பினர் வி. சிவதாசன் ஜுலை 22 அன்று எழுப்பிய கேள்விக்கு துணை கல்வி அமைச்சர் சுகந்த மஜூம்தார் அளித்த பதில்: இந்த முகமையின் நிர்வாகத்திற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை 39. இதில் 15 இடங்கள் காலியாக இருக்கின்றன. மீதமிருக்கும் 24 பேரும் இந்த அமைப்புக்கென்றே தனியாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு அரசுத் துறைகளிலுருந்து தற்காலிகமாக அங்கு பணிக்கு அனுப்பப்பட்டவர்கள். இந்த  24 பேருக்கு உதவியாக 73 நபர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது தவிர, 124 வெளியாட்களும் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றுகின்றனர். 

2018ல் நியமிக்கப்பட்ட இந்த அமைப்பு, மருத்துவம் மற்றும்  பொறியியல் படிப்புகளுக்கான் நுழைவுத் தேர்வுகள், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் யூஜிசி-நெட் போன்ற 270 தேர்வுகளை இதுவரை நடத்தியுள்ளது. இதை நம்பி இதுவரை 6.6 கோடி மாணவர்கள் பல்வேறு தேர்வுகளை எழுதியிருக்கின்றனர் _ கடந்த ஆண்டு மட்டும் 65 லட்சம் பேர். இதுவரை குறைந்தபட்சம் 5 முறை நீட் வினாத்தாள்கள் கசிந்திருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கேள்வித்தாள்களின் தரமும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. வினாத்தாள் தயாரிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோர் பெரும்பாலும் கல்விப் புலத்தில் சிறப்பு பெற்றவர்கள் அல்ல என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 


‘வேலையின்மை’ எனும் கொடுமை 

கல்வி, டியூஷன், கோச்சிங் ஆகியவற்றுக்கான செலவுகள் என்று பெரிய பொருளாதாரத் தடைகளையும், விவரிக்க இயலாத சிரமங்களையும் தாண்டி நுழைவுத் தேர்வுகளை லட்சக் கணக்கானோர் எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம் கண்ணியமான வேலை வாய்ப்புதான். 

நரேந்திர மோடி 2014இல் பிரதமரான போது ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவேன் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் 47 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கும் இந்திய உழைப்பாளர்களில் 82% பேர் முறைசாரா தொழில்களில் பணிப் பாதுகாப்பு, வருங்கால வைப்புநிதி, காப்பீடு, சமூகப் பாதுகாப்பு வசதிகளின்றிதான் இருக்கின்றனர்.

சுயதொழிலில் 58.2% பேரும், தற்காலிக வேலைகளில் (casual labour) 19.8% பேரும் இருக்கிறார்கள். முறையாக அமைக்கப்பட்ட ஆலைத் தொழிலாளர்களில் 42% பேர் பெரும்பாலும் பணி நிரந்தரமில்லாத ஒப்பந்த தொழிலாளர்கள். இந்த வகையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 8% என்கிற அளவில் அதிகரித்து வருகிறது. 

பொதுவான இந்தச் சூழலில்தான் 15 வயதிலிருந்து 26 வயது வரையிலான Gen Z  தலைமுறையும், 27 வயது முதல் 42 வயது வரையிலான Gen Y தலைமுறையும் தம் வாழ்க்கையைத் தேட  வேண்டியிருக்கிறது. இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை 37 கோடி என்று ஐக்கிய நாடுகளின் சபையின் 2025ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு கூறுகிறது.. உலகிலேயே அதிக அளவு இளைஞர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் இவர்களின் உழைப்பு சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் வளர்ச்சி என்பது பேச்சளவில் இல்லாது நாம் உண்மையில் கண்ணால் காணக் கூடியதாக இருக்கும்.  

ஆனால் அதற்கான கொள்கைகள் இல்லை. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கத் துறை அவ்வபோது Periodic Labour Force Survey என்கிற கணக்கெடுப்பை நடத்துகிறது. 2023-24 ஆண்டிற்கான கணக்கெடுப்பின் படி 29.94% Gen Z தலைமுறையினர் உழைப்பதற்குத் தயாரான வயதில் இருக்கிறார்கள். இவர்களில் 12.3% பேர் சம்பளமில்லாமல் குடும்பங்கள் நடத்தும் வேலைகளிலும், 12.3% பேர் தற்காலிக, முறைசாராப் பணிகளிலும் இருக்கின்றனர். 11.9% பேர் வேலையின்றி இருக்கின்றனர். 

இந்தச் சூழலில்தான் அதிகம் படித்தால் நல்ல வேலை கிடைக்குமென்கிற நம்பிக்கையில் இந்த இளைஞர் பட்டாளம் நம்பிக்கையுடன்  நுழைவுத் தேர்வுகள் எழுதுகின்றது.  

ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டி வருவது போல் பள்ளிப் படிப்பை முடித்து வரும் இளைஞர்களுக்கு நீட் தேர்வு போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகளும், ஊழல்களும் ஏற்படுத்தியிருக்கும் அயர்ச்சியும், விரக்தியும் பெருகிப் பெருகி இன்று ஒரு மாபெரும் போராட்ட வடிவத்தை அடைந்திருக்கிறது.  

நியாயமான நீட் என்கிற கோரிக்கையுடன் நடந்திருக்கும் போராட்டம் நோயின் அறிகுறியைக் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு நீட் என்கிற நோயை முற்றிலும் ஒழிப்பதில்தான் இருக்கிறது.  

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் என்று செயல்பட்டுவரும் ஒரு அரசின்  ஒரு அமைச்சரை நீக்குவதின் மூலம் அந்த நோயை ஒழித்துவிட முடியாது.  

கல்வியை அரசியலமப்புச் சட்டத்தின்  மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது தீர்வுக்கான முதல் படி.  அது நடக்கும் வரை நீட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிப்பது மட்டுமே மாநிலத்தின் இளைஞர்களையும், மருத்துவக் கட்டமைப்பையும் காப்பாற்றுவதற்கு ஒரே வழி. 

Photo of author
R Vijaya Sankar

(ஆர். விஜயசங்கர், மேனாள் ஆசிரியர், ஃப்ரண்ட்லைன் (Frontline); எழுத்தாளர்- மொழிபெயர்ப்பாளர், தமிழில் இருந்து ஆங்கிலத்திலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்த்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share