”முதல்வர் விஜய்க்கு சுயமாக பேச வராதா என்ன? பதுமை போல தெரிகிறார்” என்று மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாஸந்தி (Vaasanthi கடுமையாக சாடியுள்ளார்.
”இந்தியா டுடே” பத்திரிகையின் தமிழ் பதிப்பின் ஆசிரியராக பணியாற்றியவர் எழுத்தாளர் வாஸந்தி. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவர்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “முதல்வர் விஜய்க்கு சுயமாக பேச வராதா என்ன? பதுமை போல தெரிகிறார்” என இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி வாஸந்தி பதிவிட்டுள்ளார். இந்த பதிவை முன்வைத்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விவாதங்கள் களைகட்டி உள்ளன.

இதில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை (Kavignar Thamarai), “இல்லை, அவர் (விஜய்) இயல்பிலேயே மிக மிக மிகக் குறைவாகப் பேசக்கூடியவர். தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன். நாம் பத்து வார்த்தை பேசினால் அவர் பார்த்துக் கொண்டிருப்பார். இருபது வார்த்தை பேசினால் தலையசைப்பார். ஐம்பது வார்த்தை பேசினால் ஓரிரு வார்த்தைகளில் பதிலளிப்பார். பேச மாட்டாரே தவிர, கூர்மையானவர். எல்லாவற்றையும் சட்டென்று உள்வாங்கிக் கொள்பவர். மிக நெருங்கிய நண்பர்களிடம் கலகலப்பாகப் பேசுவாரோ என்னவோ !!!. (ஆனால் அரசியலுக்கு வந்தபிறகு அதுவும் முதலமைச்சரான பின்பு பேசாதிருத்தல் சரியில்லை. இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும்) “என எழுதி உள்ளார்.
பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் (Rajan Kurai Krishnan), ”கருத்துகளை வெளிப்படுத்தவோ உருவாக்கவோ திறன் இல்லாதவர் என அச்சப்படுகிறேன். ஆலோசகர்கள், செயலாளர்கள் உதவியுடன் மட்டுமே செயல்படுகிறவர். எதுவுமே அறியாதவராக இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். (I am afraid that he is not capable of coherent thought processes and hence not capable of generating or articulating ideas. He operates only with the help of advisors and secretaries; all heads of offices do so but in this extreme instance, the head is perhaps totally blank.)
Rebel Ravi என்பவர், “நான் அவரோடு மூன்று படங்களில் பணியாற்றி இருக்கிறேன்..எழுதிக் கொடுத்த வசனம் தப்பாக இருந்தாலும் பேசுவார். அவருக்கு எதுவும் தெரியாது.நடனத்தில் மட்டும் ஆர்வம். அரசியல் பொருளாதாரம் சமூக நீதி எதுவும் புரியாது. இந்தப் பதவி அவருக்கு மிகப் பெரும் தண்டனை. அவர் எதிர்பாராத சோகம்” என பதிவிட்டுள்ளார். இதேபோல ஏராளமானோர் வாஸந்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
