கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான ஈவிஎம் இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி மறு ஆய்வு செய்யும் பணி கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோரும், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 1) செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என் ஆர் இளங்கோ, “சிந்தாதிரிப்பேட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் 29ஆம் தேதியிலிருந்து மின்னணு இயந்திரங்களை சரி பார்க்கும் முறை நடந்து வருகிறது.
இது மறுவாக்கு எண்ணிக்கை அல்ல.
விவி பேட் இயந்திரத்தில் பயன்படுத்தக்கூடிய சிம்பிள் லோடிங் யூனிட் என்ற கருவி சரியாகத்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு உள்ளாக இரண்டாம் இடம் பெற்றவரோ மூன்றாம் இடம் பெற்றவரோ ஈவிஎம் மெஷின்களுடைய நம்பகத்தன்மையை சரி பார்க்கலாம் என்று 2024 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
திமுக சட்டத்துறையின் சார்பில் தலைவரின் அனுமதியைப் பெற்று தமிழகத்தில் கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் உள்ளிட்ட தொகுதிகளில் இந்த சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.
அதன்படி கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் இந்த வெரிஃபிகேஷன் பணிகள் நடைபெற்ற வருகின்றன.
இந்த வெரிஃபிகேஷன் ப்ராசஸ் என்னவென்றால், முதலில் மெஷின்கள் எல்லாம் சரியான பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கப்படும்.
இரண்டாவதாக எல்லா மெஷினையும் கனெக்ட் செய்துவிட்டு சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும்.
மூன்றாவதாக, மாதிரி வாக்குப்பதிவு போட வேண்டும். அதாவது எல்லா சின்னங்களிலும் ஒவ்வொரு ஓட்டு போட்டு பார்க்க வேண்டும்.
இது பெல் நிறுவன இன்ஜினியர்களின் தலைமையில் நடக்கும்.
அதன் பிறகு 500 வாக்குகளில் இருந்து 1400 வாக்குகள் வரைக்கும் போட்டு பார்க்கலாம். இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதனை செய்வதற்காக. இது மறுவாக்கு எண்ணிக்கை அல்ல.
அதன்படி இதுவரை ராஜபாளையத்தில் பத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இன்னும் இரண்டு நாட்கள் இந்த பணிகள் நடக்கும்.
காஞ்சிபுரத்தில் 10 இயந்திரங்களை சரி பார்க்க வேண்டும் என்று கேட்டதில், நேற்று ஒரு மிஷினில் விவி பேட் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்குகள் பதியப்படும் கண்ட்ரோல் யூனிட் என்று சொல்லக்கூடிய மெஷினும் வேலை செய்யவில்லை. பேலட் யூனிட் அதுவும் வேலை செய்யவில்லை.
கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 14 இயந்திரங்களை நாங்கள் சரி பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். 29ஆம் தேதி 2 மெஷின் சரிபார்க்கப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை சரியாக இருந்தது.
30ஆம் தேதி இரண்டு மெஷினை எடுத்தோம். அதில் ஒரு மெஷினில் விவி பேட் ஒர்க் ஆகவில்லை. அதனால் அதை பாதியிலேயே நிறுத்தி விட்டோம்.
நேற்றைய தினம் இன்னொரு விவிபேட் மெஷின் வேலை செய்யவில்லை. இதுவரை சரிபார்க்கப்பட்ட ஆறு மெஷினில் இரண்டு மெஷின்களில் விவி பேட் வேலை செய்யவில்லை.
இன்று காலையில் அடுத்த இரண்டு மெஷின்கள் சரி பார்ப்பதற்காக எடுத்து வந்து வைக்கப்பட்டது.
இதில் வாக்குச்சாவடி 75ல், ஒவ்வொரு மிஷினையும் சீல் வைத்து, அதற்கு மேல் ஒரு அட்ரஸ் டேக் ஒட்டி அதையும் சீல் செய்து இருப்பார்கள். அதில் நம்பரையும் எழுதி வைத்திருப்பார்கள்.
இந்த சூழலில் வாக்கு செலுத்தக்கூடிய அந்த இரண்டு பேலட் யூனிட்டில் எண்கள் மாறுபட்டு இருந்தன. அது மனித தவறு. அந்த அறைக்கு நியமிக்கப்பட்டவரை நீங்கள் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டு எனக்காக கொடுக்கப்பட்ட அறைக்கு சரிபார்க்க வந்து விட்டேன். அது பூத் எண் 157.
அங்கு சரி பார்ப்பதற்கு மிஷின்களை எல்லாம் எடுத்து வந்து வைத்தார்கள். ஒரு கண்ட்ரோல் யூனிட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான மூன்று பேலட் யூனிட் ஆகியவை வைக்கப்பட்டன. இந்த நான்கு மெஷின்களிலும் அட்ரஸ் டேக் புதிதாக இருந்தது.
அந்த மெஷின் எந்தத் தொகுதியைச் சார்ந்தது, பேலட் மெஷின் நம்பர், எந்த வாக்குச்சாவடி என்பது அந்த அட்ரஸ் டேக்கில் இருக்கும். அதில் ஆஃபீஸரும் கையெழுத்து போட்டு இருப்பார்.
ஒவ்வொரு மெஷினிலும் இரண்டு பக்கம் தாழ்ப்பாள் இருக்கும். இரண்டு பக்கமும் டேக் இருக்கும். அதன்படி மூன்று பேலட் யூனிட்டில் 6 டேக்குகள், கண்ட்ரோல் யூனிட்டில் 1 டேக் என மொத்தம் ஏழு டேக் இருக்க வேண்டும்.
இந்த ஏழும் புத்தம் புதிதாக இருந்தது. ஏற்கனவே பயன்படுத்தியது போன்று இல்லை. எந்தத் தகவலும் நிரப்பப்படாமல் இருந்தன.
இந்த அட்ரஸ் டேக்கின் பின்பக்கம் அரக்கு சீல் வைத்திருப்பார்கள், அந்த அட்ரஸ் டேக்கில் தகவலை எழுதிவிட்டு எழுத்துக்கள் மறையக்கூடாது என்பதற்காக பின்புறம் அரக்கு சீல் வைத்திருப்பார்கள். ஆனால் இங்கே முன்பக்கம் வைத்திருக்கிறார்கள்.
எனவே இந்த மொத்த தேர்தலிலுமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை அல்லது சரியாக பாதுகாக்கப்படாததால் இந்த தேர்தல் முறையான தேர்தல் இல்லை என்பதை எங்களால் அறிவியல் பூர்வமாகவும் சட்டரீதியாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது.
இதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 30ஆம் தேதி ஒரு கடிதம் கொடுத்திருக்கிறோம். பெல் நிறுவன இன்ஜினியர்களிடம் 19 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் தருமாறு கேட்டிருக்கிறோம்.
29, 30, 31 மற்றும் இன்றைய தேதி வரை இது முழுவதுமாக வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த முழு வீடியோ ரெக்கார்டிங்கையும் சர்டிபிகேட்டோடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம்.
இன்றைக்கு அட்ரஸ் டேக்கே இல்லாமல் இருந்த போலிங் ஸ்டேஷன் 157 உடைய மெஷினை பாதுகாப்பாக வைக்க வேண்டும், நாங்கள் உரிய நீதிமன்றத்தை அணுகுவோம். அப்போது இது எவிடன்ஸாக தேவைப்படும், எனவே இதை சீலிட்டு பத்திரமாக வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
30%க்கும் அதிகமான இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இல்லாததனால் எங்களுக்கு இந்த மொத்த நடைமுறையிலுமே நம்பிக்கை இல்லை.
இந்த தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை என்பதை நிரூபிப்பதற்கு இதுவரைக்கும் கிடைத்திருக்கிற சாட்சியமே போதுமானது. தேவை என்றால் உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ நாடி சரியான தீர்வை பெறுவோம்” என்று கூறினார்.
