இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு செயல்படுவதாக ஆளும் தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வினோத், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள, வேளாண் பட்ஜெட் வரைவு நகலைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ,பல்வேறு மதங்கள், வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் நாத்திகர்களும் உள்ள ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதம், ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விவகாரமாக இருக்க வேண்டும். அரசோடு, அரசியலோடு அவற்றை கலகக் கூடாது.
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் என்பது அரசு ஆவணமாகும். அதை ஒரு குறிப்பிட்ட மதத்தின், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வணங்கும் வழிபாட்டுத் தலத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தது நமது அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், பன்மைத்துவத்திற்கும் எதிரானதாகும்.
மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராக அமைச்சர் வினோத் அவர்கள் செயல்பட்டது கண்டனத்திற்குரியது.
தவெக அரசும்,அமைச்சர்களும் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும். சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு அரசு ஆவணத்தை,அதற்கு முன்பாகவே பொதுவெளியில் வைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான, ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
- விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி ஒத்தக் கருத்தை உருவாக்க முயலாத தவெக அரசு
- விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசு
வேளாண்மையை, விவசாயிகளை பாதுகாக்க வேளாண்மை பட்ஜெட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளதாக தவெக அரசின் அமைச்சர் கூறுவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.
எனவே, இத்தகையப் போக்குகளை தவெக அமைச்சர்களும், அரசும் கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
