விஜய் அரசுக்கு ஷாக் கொடுத்த திமுக! உச்ச நீதிமன்றத்தில் ’சம்பவம்’!

Published On:

| By Mathi

DMK Urges Supreme Court to Direct Karnataka to Release Cauvery Water

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை (Cauvery Water) கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு பிறந்து விட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இதனை ஏற்க முடியாது என்று கர்நாடகா அரசு பிடிவாதம் பிடித்தது.

ADVERTISEMENT

இந்நிலையின் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 8,000 முதல் 10,000 கன அடி நீரை கர்நாடகா, காவிரியில் திறந்துவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், ”காவிரியில் உரிய பங்கை பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை” என்பதுதான் நிலைப்பாடு என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ”காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்; வழக்கு தொடருவோம் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் திமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் திமுக மனு விவரம்

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து திமுக அளித்துள்ள விளக்கம்: காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர தாக்கல் செய்த மனு, மூத்த வழக்கறிஞர் பி. வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அதன் விவசாயிகள் அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண் 2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்றுஉச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்த மனுவில் உச்சநீதிமன்றத்திடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன:

I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதி செய்ததுமான உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.

அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டநாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.

II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில்அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும்.

IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம்பிறப்பிக்க வேண்டும்.

கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரை திறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடி தலையீடு செய்யுமாறு உச்சநீதிமன்றத்திடம் இம்மனு கோருகிறது.

மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும் , காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக் கொள்ளுமாறும் திமுக கோரியுள்ளது. இவ்வாறு திமுக விளக்கம் அளித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share