தமிழ்நாட்டின் உயிர் நாடியான காவிரி நதி பிறக்கும் கர்நாடகாவின் குடகு மாவட்டம், பெருமழை வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கிறது.
காவிரியின் தாய்மடியான குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் தலைக்காவிரி (தலக்காவேரி), பாகமண்டலா திரிவேணி சங்கமம், காவிரியில் கலக்கும் ஹாரங்கி நதி என அத்தனை ஆறுகளிலும் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாகமண்டலா சிவன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குடகு மாவட்டத்தின் புஷ்பகிரி மலையில் பிறக்கும் ஹாரங்கி நதியின் குறுக்கே ஹாரங்கி அணை கட்டப்பட்டுள்ளது. ஹாரங்கி நதி, குடிகே பகுதியில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
குடகு மாவட்டத்தின் மடிகேரி, சோமவரம்பேட்டையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் குடகு மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சோமவரம்பேட்டை பகுதியில்தான் ஹாரங்கி நதி பாய்ந்தோடுகிறது.
குடகு மாவட்டத்தில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் வரத்து அதிகமாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
