காவிரி நதிநீர் பிரச்சனை தீவிரமாகி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பணியிடம் உடனடியாக வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. ஆனால் இந்த உத்தரவை மதிக்கமாட்டோம்; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடமாட்டோம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் கூறி வருகிறார்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. கபினி அணை நிரம்பும் நிலையில் வினாடிக்கு 10,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டது.
தமிழகத்தில் காவிரி பிரச்சனையில் முதல்வர் விஜய் அரசு மீது பெரும்பாலான அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
- முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த கடிதம் அனுப்பியது
- கர்நாடகாவுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல்வர் விஜய் வருகிறார் என அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தது
- பின்னர் ‘எங்க மாநிலத்துக்கு வர வேண்டாம்’ என அதே டி.கே. சிவகுமார் கூறியது
- தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு தரப்பில் தெளிவான விளக்கம், பதில் எதுவும் தரப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் கூறி வந்தார். ஆனால் காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி திடீரென மனுத் தாக்கல் செய்துள்ளது.

நீர்வளத்துறை செயலாளர் திடீர் மாற்றம்
இந்த பின்னணியில் இன்று தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகு, முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த மே 18-ந் தேதியன்று நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட 75 நாட்கள்- இரண்டரை மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் அதுவும் காவிரி பிரச்சனை உச்சத்தில் இருக்கும் நிலையில் நீர்வளத் துறை செயலாளர் சத்யபிரதா சாகு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, பிரசாத் வடநரே நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் பிரசாத் வடநரே ஏற்கனவே வகித்து வரும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் செயலாளர் பணியுடன் கூடுதல் பொறுப்பாக நீர்வளத்துறை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சத்யபிரதா சாகுவுக்கு எந்த பணியிடமும் வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
