கேரளாவில் இன்று அதிகாலை முதல் கனமழை வெளுத்து வருகிறது. இந்த கனமழையால் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். மேலும் 9 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு கேரளா அரசு இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
கேரளாவில் கனமழை பெய்யக் கூடும் என 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது வானிலை ஆய்வு மையம்.
இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முண்டக்காயத்தில் பாலம் நீரில் மூழ்கி உள்ளது.
இடுக்கி மாவட்டத்தின் அடூர்மலை, வாகாமன் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடூர்மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு மண்ணில் புதையுண்டது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். வாகமனில் மண்ணில் புதையுண்ட ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு எல்லையில் தாமரசேரி சுரம், கோட்டயம் மூனிலவு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை கொட்டுவதால் 9 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
