ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் அப்துல்லா தம்பதிக்கு உச்சநீதிமன்றம் விவகாரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உமர் அப்துல்லா- பாயல் திருமணம் 1994-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே, உமர் அப்துல்லாவின் விவகாரத்து மனுவை குடும்ப நல நீதிமன்றம் 2016-ல் டிஸ்மிஸ் செய்தது. இதன் பின்னர் டெல்லி உயர்நீதிமன்றமும் அவரது விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உமர் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
உச்சநீதிமன்ற மத்தியஸ்த மையம் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் குடும் விவகாரங்களை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொண்டனர்.
இதையடுத்து, அரசியல் சாசனத்தின் 142-ன் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் தங்கள் திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் இணைந்து கூட்டாக விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு முன்பு நேற்று ஜூலை 31-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உமர் அப்துல்லா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இருவரும் அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உமர் அப்துல்லா- பாயல் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
