சென்னை உயர் நீதிமன்றத் தலைமை அமர்வு மற்றும் மதுரை கிளைக்கு 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் உட்பட மொத்தம் 91 வழக்கறிஞர்களை மாநில அரசு வியாழக்கிழமை நியமித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், பி.வி. பாலசுப்பிரமணியம், டி. கௌதமன், பி. சரவணன், ஏ. அப்துல் ஹமீது, ஜே. பரதன், எஸ். அர்ஜுன் சுரேஷ், எஸ். குமரேசன் மற்றும் கவிதா நித்யானந்தன் ஆகிய 8 பேர் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாலசுப்பிரமணியம் மற்றும் கௌதமன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக ஏற்பாடாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு மற்றும் மதுரை கிளைக்காக மாநில அரசு வழக்கறிஞர் (State Government Pleader), சிறப்பு அரசு வழக்கறிஞர் (Special Government Pleader), கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional Government Pleader) மற்றும் அரசு வழக்கறிஞர்கள் (Government Advocates) ஆகிய பதவிகளுக்கு 83 வழக்கறிஞர்களை அரசு நியமித்துள்ளது. வழக்கறிஞர் எம். குருபிரசாத் மாநில அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
