கோவை கார் குண்டுவெடிப்பு: 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையை உலுக்கிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 30) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பிற்கு மூளையாகச் செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த பெரோஸ், நவாஸ், அப்பாஸ், யூசுப் ஆகியோரது வீடுகளிலும், கேரள சிறையில் இருந்தபடி இவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக கைது செய்யப்பட்ட அசாருதீன் இல்லத்திலும் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அசாருதீன் ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு இருந்ததாக தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டவர். கைது செய்யப்பட்ட அசாருதீன் சிறையில் இருந்தபடியே கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், இந்த ஐந்து பேரின் இல்லங்களிலும் இன்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐந்து குழுக்களாகப் பிரிந்து கேரளாவில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது நிதி வசூல் செய்தது தொடர்பாக இந்த விசாரணையானது நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share