“முன்பு புழுக்கள்… இப்போது பல்லி!” – தொடர் அலட்சியத்தால் பாதிக்கப்படும் தூய்மை பணியாளர்கள்!

Published On:

| By Kavi

ஆவடி மாநகராட்சியால் தூய்மைப் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ‘பாலாஜி குளோபல்’ என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுக்கு பருத்திப்பட்டு பூங்கா அருகில் உள்ள உணவளிக்கும் மையத்தில் காலை உணவு வழங்கப்படும். 

ADVERTISEMENT

அந்தவகையில் இன்று காலையும் உணவு வழங்கப்பட்டது. இன்று (ஜூலை 29) பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இது தூய்மை பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, குமட்டல், மயக்கம் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டன.  இதைத்தொடர்ந்து அவர்கள் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து ஆவடி ஆணையர் சரண்யா, ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூர்ய குமார், முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்லி விழுந்த சாம்பாரை ஆய்வு செய்தனர். 

ADVERTISEMENT

இந்த உணவு காலை 7 மணியளவில் ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் சமையலறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாலாஜி குளோபல் நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,   ”இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் கிடந்துள்ளன. இன்று சாம்பாரில் பல்லி இருந்தது. எங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் தொடர்ச்சியாக அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது” என்று கவலை தெரிவித்தனர். 

ADVERTISEMENT

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆர். சரண்யா கூறுகையில்,  ”அனைத்து 21 விநியோக மையங்களிலிருந்தும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  சமையல் செய்யும் போது உணவில் பல்லி விழுந்ததா அல்லது பரிமாறும் போது விழுந்ததா என ஆய்வு முடிவில் தெரியவரும். அலட்சியமாக செயல்பட்ட யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். 

மேலும் அவர்,  ”தற்போது உள்நோயாளிகளாக 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பெரும்பாலானோர் செத்த பல்லியைக் கண்டதும் ஏற்பட்ட அச்சத்தினாலேயே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அனைத்து தூய்மைப் பணியாளர்களின் உடல்நலத்தையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share