முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி இன்று (ஜூலை 29) எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதில் எஸ்.பி.ஐ வங்கி என்.ஆர்.ஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுதானதால், இதுகுறித்து வங்கி மேலாளர் ஹர்சன் சிங், கயல்விழியிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி வங்கிக்கு வந்த கயல்விழி மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இது வங்கி அதிகாரிகளிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி கயல்விழி நேற்று, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவில் கைது செய்யப்பட்டார். பின்னர் காவல் நிலைய பிணையில் நேற்றிரவே வெளியில் வந்தார்.
இந்தசூழலில் கயல்விழி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை அண்ணா நகர் கிளை எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயல்விழியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். வங்கி ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதுபோன்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக கிளை பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி, கயல்விழியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
” கயல்விழியின் செயல், வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்குரிய கண்ணியம் குறித்து கவலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பணிபுரியும் இடத்தில் அவர்களின் கண்ணியத்தை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
