எஸ்.பி.ஐ வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் முக அழகிரி மகள் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ -என்.ஆர்.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் லிஃப்ட் பழுதானதால் இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்தநிலையில் வங்கிக்கு வந்த கயல்விழி, மேலாளர் ஹர்ஷன் சிங்கிடம் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது வங்கி மேலாளர் ஹர்ஷன் சிங் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இதுதொடர்பாக எஸ்பிஐ ஆர்.பி.ஓ-II முதன்மை மேலாளர் நமச்சிவாயம் ஜூலை 21ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், சாஸ்திரி நகர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். வழக்குதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி, அவர் இன்று (ஜூலை 28) மாலை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.
அவரிடம் வங்கி மேலாளரை அறைந்தது ஏன்? என்ன பிரச்சினை? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.
இந்த விசாரணை 2 மணி நேரம் நீடித்த நிலையில், முடிவில் வழக்குத் தொடர்பாக கயல்விழியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சில நிமிடங்களிலேயே அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். இதனால் கயல்விழி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
