”லத்தி”யை தூக்கும் போலீசுக்கு ‘லாடம்’ கட்டும் உச்சநீதிமன்றம்- என்ன நடந்தது? முழு விவரம்!

Published On:

| By Mathi

SC Directive on Police Crackdown During Delhi Protests

நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராகவும் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரியும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி- CJP தொடர் போராட்டங்களை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கிய முற்றுகைப் பேரணி நடத்தப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அடக்குமுறைகளை டெல்லி போலீஸ் கட்டவிழ்த்துவிட்டது. மாணவர்கள் மீது தடியடிகளை நடத்தியது; கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மாணவர்கள், இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போலீஸ் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த போராட்டங்களையும் மாநிலங்களில் போலீசார் அடக்கினர்.

இத்தகைய போராட்டங்களின் மீது சட்டவிரோதமாக பெல்லட் குண்டுகளை போலீசார் பயன்படுத்தினர்; மின்சார லத்திகளால் தாக்கினர்; சீருடை அணியாத நபர்களை கொண்டு போலீசார் தாக்குதல் நடத்தினர் என குற்றச்சாட்டுகள் அணிவகுத்தன.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்திருந்தார். மாணவர்கள் மீதான அடக்குமுறை வீடியோக்களை மூத்த வழக்கறிஞர்கள் காட்டிய போதும், “அந்த வீடியோக்களை பார்க்க எங்களுக்கு நேரமில்லை” எனவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

ADVERTISEMENT

இந்த பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “போராடினாலே லத்திகளை தூக்கி அடிப்பீர்களா? போராடுவதற்கு அரசியல் சாசனம் உரிமை தந்துள்ளது. போராட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டுமே தவிர ஒடுக்கக் கூடாது” என போலீசாரை சாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று ஜூலை 28-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் முழு அளவிலான விசாரணை நடைபெற்றது.

இன்று காலை உச்சநிதிமன்றம் விசாரணையை தொடங்குவதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தின் பயிற்சி வழக்கறிஞர் மணிக் குப்தா ஒரு மனு அளித்தார். அதில், ஜூலை 23-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுவிக்க நிஜாமுதீன் காவல் நிலையத்துக்கு தாம் சென்ற போது தம்மை போலீசார் தாக்கியதாக குற்றம் சாட்டி ஏற்கனவே உள்ள ரிட் மனுக்களுடன் தம்மையும் இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தார்.

மணிக் குப்தா தமது மனுவில், போலீசார் தம்மை கழுத்தைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து தாக்கியதாகவும் வழக்கறிஞர் என்று சொன்ன பிறகும், ‘உனக்கும் பாடம் புகட்டுவோம்’ என மிரட்டியதாகவும் இதன் பின்னர் சக வழக்கறிஞர்களால் தாம் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அம்மனுவில் மணிக் குப்தா கூறியிருந்தார்.

இதேபோல டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களுக்கு உணவு வழங்கிய ஜூனைத் மாலிக்கும் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு வழங்கிய தம்மை போலீசார் அழைத்து சென்று ஒரு போலீஸ் வாகனத்தில் 6 மணி நேரம் அடைத்து வைத்தனர்; அதன் பின்னர் டேராடூன் பகுதியில் திக்கு தெரியாத திசையில் ஒரு இடத்தில் போலீசார் இறக்கிவிட்டனர். உ.பி. காசியாபாத் போலீசார் என் தந்தையை கஸ்டடியில் வைத்து மிரட்டினர்; என் சகோதரி வீட்டுக்கு சென்று அவரது மாமனார், மைத்துனரையும் போலீசார் அழைத்து சென்று கஸ்டடியில் வைத்தனர்.. தமது குடும்பத்தினர் மீதான இந்த தாக்குதல்களை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இப்படி உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கும் முன்னரே நீதிமன்ற வளாகம் பரபரக்க தொடங்கியது.

இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது.

அப்போது மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த பிரச்சனை நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பானது; டெல்லியில் மட்டுமில்லாமல் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவின் நாக்பூர், பீகார் உள்ளிட்ட பல இடங்களிலும் இத்தகைய போலீஸ் அடக்குமுறைகள் நிகழ்ந்துள்ளன என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், “அனைத்து மனுக்களிலும் பொதுவான சில குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக
19 வயது இளைஞர் ஒருவர் கண் பார்வையை இழக்கக் காரணமாக இருந்த பெல்லட் குண்டுகள், மின்சார லத்திகள் உள்ளிட்டவை மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இளம் பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்… ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளால் அவர் தாக்கப்பட்டதால் அந்த இளம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரும் இரக்கமின்றி தாக்கப்பட்டுள்ளார்… சாதாரண உடையில் வந்த காவல்துறையினர் நடத்திய வன்முறையும் நிகழ்ந்துள்ளது. எந்தவொரு காரணமுமே இல்லாமல் இளம் பெண் ஒருவர், போலீசாரால் அறையப்பட்டதாகவும் ஒரு புகார் உள்ளது” என்றார்.

மேலும், “இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான வாதங்கள் எதுவும் தேவையில்லை என்றுதான் நாங்கள் கருதுகிறோம்… சில கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முழுவதும் அமைதிவழியில் நடத்திய போராட்டம்தான் இது. அரசியல் சாசனம் என்ன உரிமையை வழங்கி இருக்கிறதோ அதன் அடிப்படையில்தான் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினார்கள்.

பொதுவாக இத்தகைய அமைதியான போராட்டங்களில் சிலர் தங்களுக்கான அஜெண்டாவுடன் உள்ளே நுழைந்து, ஒருகட்டத்தில் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் போல மாறிவிடுவார்கள்.

ஆனால் மாணவர்கள், அரசியல் சாசன உரிமை எங்களுக்கு வழங்கப்பட்ட போது இப்படி தாக்கப்பட்டுள்ளோம்” என்கின்றனர் என கருத்து தெரிவித்தார் தலைமை நீதிபதி சூர்யகாந்த்.

அப்போது மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ”டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. முதலில் போலீசார் தாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும்; அதற்கு பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்; தடியடியே நடத்தினாலும் முழங்காலுக்கு கீழேதான் அடிக்க வேண்டும்.. இதற்கு பிறகுதான் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என்கிற அடுத்த கட்டவடிக்கை.. இப்படியான பல்வேறு கட்டங்கள் இருந்த போதிலும் மாணவர்கள் மீது மூர்க்கமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், இத்தகைய பிரச்சனைகளில் ஒவ்வொரு தரப்பினருமே ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் முன்வர வேண்டும். இந்த நீதிமன்றத்தால் முன்பே பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகள் காலப்போக்கில் மாறிவிட்டன… இப்போது வழக்கத்திற்கு மாறான முறையில் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன.

உதாரணமாக எந்த வகையான கண்ணீர்ப் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும், அவற்றை அனுமதிக்கலாமா என்பது போன்றவற்றை நாம் ஆராய வேண்டும். ஜனநாயகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தபப்டுவது என்பது எல்லாம் தவிர்க்க முடியாதது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ஒரு அதிகாரியே காரின் கண்ணாடிகளைத் தானே உடைத்துள்ளார். அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. இத்தகைய நபர்கள், தாங்கள் எதையும் செய்ய முடியும் என்பதை போல நடந்து கொள்கின்றனர். அதனால் உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டுவிட்டால். “நாம் என்ன செய்தாலும் தப்பித்துவிடலாம்” என்கிற காவல்துறையினர் நினைத்து கொள்கின்றனர் என அழுத்தமாக வாதிட்டார்.

இதனைக் கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்தார்.

அதாவது, ”இத்தகைய சம்பவங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. யார் தவறு செய்திருந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்யும். யாருக்கும் எந்த பொறுப்பும் இல்லை என விட்டுவிட்டால் விசாரணைக்கு அர்த்தமே இல்லாமலேயே போகும்” என குறிப்பிட்டார் தலைமை நீதிபதி சூர்யகாந்த்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், “உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அதாவது SIT அமைக்கப்பட வேண்டும். அதைத் தவிர வேறு எதுவும் சரியான தீர்வை வழங்காது. பீகாரில் நேற்று கூட போலீஸ்காரர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியைப் பயன்படுத்தி இருக்கிறார்” என்றார்.

அதேபோல மூத்த வழக்கறிஞர் சோயிப் ஆலம், “பீகாரில் போராடியவர்கள் நிராயுதபாணிகள். ஆனால் முகத்தை மறைத்துக் கொண்டு கவச உடை அணிந்து கொண்டு போலீஸ்காரர் ஒருவர் ஏகே 47 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கிறார். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது” என்றார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “போலீஸ் அடக்குமுறைகளின் தன்மைகளை வைத்து நாங்கள் அதை தனித்தனியாக பிரித்து பட்டியலிட்டுள்ளோம். உறுதியான, நம்பகமான ஊடகங்களின் செய்திகள், போட்டோக்கள், வீடியோக்களையும் தாக்கல் செய்துள்ளோம். பெல்லட் குண்டுகளை போலீசார் பயன்படுத்தி இருப்பது மிகவும் அபாயகரமானது; சாதாரண உடையில் வந்த காவல்துறை அதிகாரிகளின் வன்முறைதான் இத்தனையும்” என்றார்.

மேலும், மின்சாரம் பாய்ச்சக் கூடிய லத்திகளை போலீசார் பயன்படுத்தி உள்ளனர். அதிகமான முறை தடியடி நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். இவற்றை எல்லாம் பயன்படுத்த உள்ள நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. அடுத்ததாக போராட்டத்துக்கு யாரும் வரக் கூடாது என்பதற்காக வழக்குகளைப் போடுவோம் எனவும் மிரட்டி இருக்கிறது போலீஸ்” என பட்டியலிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இவை அனைத்துக்குமே முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த விசாரணை நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். இந்த விசாரணை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை பின்னர் சொல்கிறோம்” என்றார்.

அத்துடன், ”ஏற்கனவே இந்த நீதிமன்றத்தால் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த தீர்ப்புகளில் உள்ள நெறிமுறைகள் அனைத்தையும் தொகுத்து விரிவுபடுத்த வேண்டிய தருணம் இது. 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தற்போது 2026-ம் ஆண்டுக்கு எப்படி பொருந்தும் என பார்க்க வேண்டும். இத்தகைய நெறிமுறைகளை அமல்படுத்த நமக்கு ஒரு வடிவம் தேவைப்படுகிறது” என்றார்.

மூத்த வழக்கறிஞர் ஷதான் ஃபராசாத் வாதிடுகையில், பீகார் மாநில அரசு, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொல்லி இருக்கிறது. ஆனால் 18 வயதுக்கும் குறைவான 150-க்கும் மேற்பட்டோரை பீகார் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்; அவர்களை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். அந்த சிறுவர்கள் 40 மணிநேரத்துக்குப் பின்னரே மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி இருக்கின்றனர். அதிலும் ஒரு சிறுவனுக்கு 13 வயதுதான் ஆகிறது. தற்காப்பு என்ற பெயரில் போலீசார் எல்லை மீறி நடந்துள்ளனர்” என்றார்.

டெல்லி போராட்டத்தில் உணவு வழங்கியதற்காக போலீசாரால் தாக்கப்பட்ட ஜூனைத் மாலிக்குக்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி, “ஜூனைத் மாலிக் உணவு மட்டும்தான் கொடுத்தார்” என்றார்.

மூத்த வழக்கறிஞர்கள் மேத்யூஸ் நெடுமம்பாரா, என். ஹரிஹரன் உள்ளிட்டோரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அவர்கள், இந்த சம்பவங்களின் சாட்சியங்கள், ஆவணங்களைப் பாதுகாக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதாக ஒருவர் சுட்டிக் காட்டினார். அனைத்து வழக்குகளையும் அங்கேயே விசாரிக்கலாம் என நாங்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் பிற மாநிலங்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. அதனால் நாங்களே வழக்கை விசாரிக்கிறோம்” என்றார்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”மாணவர்களுக்கு அமைதியாகப் போராட உரிமை உண்டு; நாட்டின் சட்டத்தை யாராவது மீறியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த போராட்டங்களில் காவல்துறையினரும் தாக்கப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஒரு அரசாக, காவல்துறையினரின் மன உறுதியைக் குலைக்கும் எதையும் செய்ய முடியாது. என்ன நடந்தது என்கிற உண்மையான நிலவரம் நீதிமன்றத்தின் முன் வர வேண்டும்” என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், காவல்துறையினர் மீதான தாக்குதல்களை மாணவர்கள்தான் செய்தார்களா அல்லது வேறு யாருமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”மாணவர்களால்தான் போலீசார் தாக்கப்பட்டனர் என நானும் நினைக்கவில்லை. போராட்டத்துக்குள் சில சில சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கலாம்” என்றார்.

அப்போது நீதிபதி ஜாய்மால்யா பாக்சி குறுக்கிட்டு, “அமைதியாக போராட்டம் நடந்தால் அதை திசைதிருப்பும் ஆபத்து எப்போதும் இருக்கத்தான் செய்கிறது” என்றார்.

இதனையடுத்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், போலீசார் அடக்குமுறைகள் தொடர்பாக விசாரிப்பதற்கான குழுவுக்கு உச்ச நீதிமன்றத்தின் 2 முன்னாள் தலைமை நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைத்தார்.

ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நான் மாணவர்களுடன் இருக்கிறேன். மாணவர்கள் தவறு செய்ததாக நான் நினைக்கவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் விசாரணை குழுவை நியமிக்கலாம். ஆனால் உண்மைகளைப் பதிவு செய்ய எனக்குக் ஓரிரு நாட்கள் அவகாசம் வழங்குங்கள். நான் எந்தப் பெயரையும் பரிந்துரைக்க விரும்பவில்லை. அதை உச்சநீதிமன்றமே முடிவு செய்யலாம். தொடர்புடைய மாநிலங்களையும் அழைக்கலாம். நாங்கள் இந்த வழக்கின் ஆவணங்களைப் பாதுகாத்து வருகிறோம்” என்றார்.

அப்போது நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, ”போலீசார் தற்காப்புக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும். அது தாக்குதல் ஆயுதங்களை விட மிகவும் முக்கியமானது” என குறுக்கிட்டார்.

மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “மாணவர்களாகிய எங்களிடம் எந்தவிதமான கவசமும் இல்லை. நாங்கள் நிராயுதபாணிகளாக அல்லவா நின்று இருந்தோம்” என்றார்.

மேலும், ”ஒட்டு மொத்த போலீசாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. நல்ல முறையில் கடமையை செய்த அதிகாரிகளும் இருக்கின்றனர். போலீஸ் வேன்களில் அமர்ந்து கொண்டு முகங்களை அடையாளம் காணும் சாப்ட்வேர்களை Face recognition softwares கூட பயன்படுத்தினர். இதனடிப்படையில் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக விளக்கம் தர வேண்டும் என போலீசார் அழைத்து கொண்டிருக்கின்றனர்” என்றார்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்

  • ஜந்தர் மந்தர் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.
    இதனால் மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற பிற மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியது.
  • அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளான சட்டப்பிரிவு 19 மற்றும் 21-ஐ மீறி அத்துமீறல்கள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இளம் மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிவு குறித்துப் போராட மட்டுமே டெல்லிக்கு வந்தனர். ஆனால் பெல்லட் குண்டுகள், தடியடிகள், கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு என அதிகப்படியான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டதாக மனுதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதில், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் சிறுவனின் கண் பார்வை பறி போயிருக்கிறது; ரப்பர் தோட்டாக்கள் காயங்களை ஏற்படுத்தி இருக்கின்றன; கூட்டத்தைக் கலைக்க மின்சார லத்திகள் பயன்படுத்தப்பட்டன. ஆணிகளைக் கொண்ட லத்திகள் பயன்படுத்தப்பட்டதால் நிரந்தர ஊனமும் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் பலத்த காயங்களுடன் தாக்கப்பட்டுள்ளார். சாதாரண உடையில் வந்த காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

  • இப்படி மனுதாரர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை தேவை என்கிற முகாந்திரத்தை ஏற்படுத்துகின்றன
  • இத்தகைய விசாரணை பாதிக்கப்பட்ட போலீசாரின் குடும்பத்தினருக்கும் உரிய தீர்வை தரக் கூடும்.
  • இந்த சம்பவங்கள் தொடர்பாக டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், கேரளா, உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

போராட்டத்துடன் தொடர்புடைய அனைத்து சிசிடிவி, டிரோன் வீடியோ பதிவு பதிவுகள் மற்றும் போலீசாரின் ஒயர்லெஸ் கம்யூனிகேசன் விவரங்கள் உள்ளிட்ட அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களை எந்தச் சூழலிலும் போலீசார் வெளியிடக் கூடாது;

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கிரிமினல் பின்னணி இல்லாத பட்சத்தில், எந்தக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது.

கைது செய்யப்பட்டு, குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குட்பட்ட அனைத்துச் சிறுவர்களையும் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share