சென்னையில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மணிமாறன், உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஒரே வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர்.
அப்போது வேளச்சேரி சாலையில் தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், காவல் ஆய்வாளர் மணிமாறன் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெண்ணிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
