அரசுப் பேருந்து பயணிகளுக்குக் கெடுபிடி! செல்போன் பயன்படுத்தப் புதிய நெறிமுறைகள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

90000 people booked to travel in TN govt buses

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது, சக பயணிகளுக்கு இடையூறு தரும் வகையில் செல்போன் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துவதற்கும், அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விடுவதற்கும் போக்குவரத்துத் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உரத்த சத்தத்தில் பாடல்களைப் போடுவதாகவும், பயணிகள் சிலர் தங்களது செல்போன் ஸ்பீக்கரை அலறவிட்டு வீடியோ பார்ப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்தன. இதனால் பேருந்தில் பயணிக்கும் முதியவர்கள், மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் சென்றடைந்தன. அதனடிப்படையில், நிலைமையைச் சரிசெய்யப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் தற்போது அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

முக்கிய அம்சங்கள்:

ஸ்பீக்கருக்குத் தடை: பயணிகள் பேருந்திற்குள் செல்போனில் பேசும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ ஸ்பீக்கரைப் பயன்படுத்தக் கூடாது.

ADVERTISEMENT

இயர்போன் கட்டாயம்: சக பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில், கட்டாயம் இயர்போன் அல்லது ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஓட்டுநர்களுக்குக் கட்டுப்பாடு: பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விடக் கூடாது.

ADVERTISEMENT

விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்: இந்த புதிய நடைமுறைகள் குறித்துப் பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை உடனடியாக ஒட்ட வேண்டும்.

போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தினசரிப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சுமூகமாக பயணம் செய்யும் பொருட்டும், சக பயணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி நடந்துகொள்ள ஏதுவாக கீழ்க்காணும் பயண நெறிமுறைகளை பயணிகள் கடைப்பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும்போது,

  1. மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-இன் விதி 5(10)-இன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்யவேண்டும்.
  2. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228-இன் படி, சக பயணிகளுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும். இதில் கைபேசியில் பயணம் முழுவதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல் மற்றும் கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன் (Earphone) / ஹெட்ஃபோன் (Headphone) இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலியில் (Video) படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். Bluetooth இயர்போன்/ஹெட்ஃபோன் பயன்படுத்தி பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும்.

மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும், பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், அனைத்து பேருந்துகளில் உட்புறத்தில் பயணிகளுக்குத் தெளிவாகத் தெரியும்படி விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் (Stickers) ஒட்டப்பட வேண்டும்.
விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அச்சிட்டு அனைத்து பேருந்துகளிலும் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share