தமிழ்நாட்டில் இருந்து கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிகமாக 3 மாதங்களுக்கு தமிழக அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் அனுமதியின்றி, விதிகளை மீறி செயல்படும் சட்டவிரோத குவாரிகள் மற்றும் கனிம வள கொள்ளைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகள் வழியாக கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மலைகளை வெட்டி எடுக்கப்படும் பாறைகள், அவற்றை உடைத்து ஜல்லிகள், எம்.சாண்ட் மணல் உள்ளிட்ட கனிமங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாகப் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு எதிராக மக்கள் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்துகின்றன.
கனிம வளக் கொள்ளையைத் தடுக்க திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், முறைகேடுகளில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் குவாரிகள் மீது கடுமையான அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசும் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன.
இந்த நிலையில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்கும் வகையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், “பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. புதுச்சேரி, காரைக்காலுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த தடையை மாவட்ட ஆட்சியர்கள் முழுமையாக செயல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மாநிலத்திற்குள் கனிமங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலைப் பாதுகாக்கவும், சட்டவிரோத சுரங்கம் மற்றும் கனிமப் போக்குவரத்தை தடுக்கவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை தற்காலிகமாக அமல்படுத்தப்படுவதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
