கிரிண்டர் டேட்டிங் ஆப் மூலம் ஆட்களைச் சந்திக்கச் செல்பவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
கிரிண்டர் செயலி என்பது தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநர் சமூகத்தினருக்கான ஒரு டேட்டிங் செயலியாகும்.
ஆனால் சமீபநாட்களாக இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது.
தென் தமிழகத்துக்கு உட்பட்ட தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆப் மூலம் பழகி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 23 வழக்குகள் இந்த ஆண்டு மட்டும் பதிவுவாகியுள்ளது.
இதில் 80க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிண்டர் ஆப் மூலம் போலி கணக்குகளை உருவாக்கும் நபர்கள், தங்களை தொடர்பு கொள்பவர்களிடம் அன்பாக பேசி நம்பிக்கையை அளித்து தனிமையான இடத்துக்கு வரவழைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
அதாவது, பாலியல் ரீதியான உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிடுவோம், உங்களின் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் செய்திகளை இணையத்தில் கசிய விட்டு விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
பின்னர், தங்க நகைகள், பணம், மொபைல் போன்கள் மற்றும் அதிக விலை கொண்ட பொருட்களை எல்லாம் பறித்துக் கொள்கின்றனர்.
நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகள், ஓடிபி ஆகியவற்றைப் பெற்று வங்கி கணக்குகளில் இருந்தும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
இப்படி பாதிக்கப்படும் நபர்கள் சமூகத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் போலீசில் புகார் அளிக்கவும் பயப்படுகிறார்கள்.
இந்த நிலையில்தான் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி தலைமையிலான போலீசார், பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமும் ஆலோசனையும் வழங்கி புகார் அளிக்க ஊக்குவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள், அவர்கள் விவரம் உள்ளிட்டவை ரகசியமாக கையாளப்படும் என்று நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து கைது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தென்காசி , திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தென்காசியில் 29 பேரும், திருநெல்வேலியில் 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுபோன்று மதுரையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைதாகியுள்ளனர்.
திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடப்பதை தடுப்பதற்காக, கைது செய்யப்படும் நபர்கள் தென் மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் குற்றப் பகுப்பாய்வு அமைப்பின் கீழ் உள்ள பர்பிள் ட்ராக்கிங் கண்காணிப்பில் கொண்டு வரப்படுகிறார்கள்.
குற்றப் பின்னணி, கூட்டாளிகள், பயோமெட்ரிக் அடையாளங்கள், புகைப்படம், மொபைல் எண், சமூக வலைதள கணக்குகள், வங்கி பரிமாற்றம், மொபைல் போன் ஐஎம்இஐ எண், வாகனங்கள் மற்றும் அவர்கள் அடிக்கடி செல்லும் இடம் குறித்த விபரங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் சேகரித்து போலீசார் கண்காணிக்கின்றனர்” என்று தென் மண்டல ஐஜி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது
பொதுமக்கள் இணையதளங்களில் தெரியாத நபர்களுடன் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முன்பின் தெரியாதவர்கள் அழைக்கும் போது தனிமையான இடத்துக்கு செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
